15 செப்டம்பர் 2021, புதன்

மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 21)

மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 21)புனித மத்தேயு - திருத்தூதர், நற்செய்தியாளர் விழா


பிரான்ஸ் நாட்டிலே சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆயர் ஒருவர் இருந்தார். அவர் மிகச் சிறந்த பிரசங்கியார்; பேச்சாளரும்கூட. ஒருமுறை அவரிடத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர், “உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த மிகப்பெரிய சாதனை என்ன?” என்று கேட்டார்”. அதற்கு அவர், “என்னிடத்தில் வந்து, ஒருசிலர் ‘நான் நன்றாக பிரசங்கம் செய்கிறேன், அது உள்ளத்தை உருக்குவதாக இருக்கிறது” என்று சொல்வார்கள். அதுவல்ல நான் செய்த சாதனை. மாறாக “உங்கள் பிரசங்கம் என்னை செயல்படத் தூண்டியது, செயலுக்கு இட்டுச் செல்வதாக இருக்கிறது” என்று சொல்கிறார்களே அதுதான் தான் செய்த மிகப்பெரிய சாதனை” என்றார்.

பிரசங்கம் – மறையுரை - நம்மை செயலுக்கு இட்டுச் செல்கிறபோதுதான் அது முழுமை பெறுகிறது என்பதை இந்நிகழ்வு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. அப்படி உள்ளத்தை உருக்குவதாக மட்டும் அல்லாமல், நம்மை செயல்படத் தூண்டும் அளவுக்கு நற்செய்தியை எழுதிய ஒருவருடைய விழாவைத்தான் இன்றைக்கு நாம் கொண்டாடுகிறோம். அவர் வேறு யாருமல்ல நற்செய்தியாளரான தூய மத்தேயுவே. மத்தேயுவின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இவரது வாழ்வு, இவரது நற்செய்தி நூலின் சிறப்பு, இவர் நமக்கு உணர்த்தும் செய்தி என்று மூன்று பகுதிகளாக சிந்தித்துப் பார்ப்போம்.

முதலாவதாக மத்தேயுவின் வாழ்க்கை வரலாறு: மத்தேயு கலிலேயாவில் பிறந்தவர். ஏரோது அந்திபாசுவின் ஆளுகைக்குக் கீழ், வரிதண்டுபவராகப் பணியாற்றிவர். அக்காலத்தில் வரிதண்டுதல் என்பது யூதர்களால் நாட்டை காட்டிக்கொடுக்கும் அளவிற்கு குற்றமாக, இழிவாகக் கருத்தப்பட்டது. மேலும் இத்தகைய தொழிலில் ஈடுபடுபவர்கள் பாவிகளாகவே கருதப்படுவார்கள். வரிதண்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த மத்தேயுவும்கூட இதற்கு விதிவிலக்கல்ல
இத்தகைய சூழலில் ஆண்டவர் இயேசு “என்னைப் பின்பற்றி வா” என்று சொன்னதும் அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார். அவரது உண்மையுள்ள சீடராக வாழ்கிறார். ஆண்டவர் இயேசுவின் உயிர்புக்குப் பிறகு இவர் மாசிதோனியா, எத்தியோப்பியா போன்ற பகுதிகளில் நற்செய்தி அறிவித்ததாகவும், அங்கே மறைசாட்சியாக இறந்ததாகும் திருச்சபை மரபு சொல்கிறது. இது அவரது வாழக்கை வரலாறைக் குறித்த செய்திகளாகும்.

இரண்டாவதாக அவரது நற்செய்தியின் சிறப்பு: தூய மத்தேயு என்று சொல்கிறபோதே நமக்கெல்லாம் அவர் எழுதிய நற்செய்தி நூல்தான் நினைவுக்கு வருகிறது. அந்தியோக்கு நகரில் வாழ்ந்த யூத கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்ட அரமேய்க் மொழியில் எழுதப்பட்ட இந்நற்செய்தி “இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா” என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. மேலும் இந்நற்செய்தி நூல் “இறையாட்சி நூல்” என்று அழைக்கப்படுகிறது. காரணம் இறையாட்சி என்ற வார்த்தையானது 51 முறை வருகிறது. உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்ற இயேசுவின் வார்த்தைகளை நினைவூட்டுவதால், இது இறைவனின் பாதுகாப்பை உணர்த்தும் நற்செய்தி நூல் எனவும் எனவும் அழைக்கப்படுகிறது.

மூன்றாவதாக அவர் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். மத்தேயு சுங்கச் சாவடியில் வரி வசூலித்துக்கொண்டு ஏறக்குறைய ஒரு பாவியைப் போன்றே வாழ்ந்துவந்தார். அப்படிப்பட்ட வேளையில்தான் இயேசு அவரை தன்பின்னே – மனமாறி – வர அழைக்கின்றார்.

கடவுள் மத்தேயுவை மட்டுமல்ல, நாம் ஒவ்வொருவருமே மனந்திரும்பி வாழ அழைக்கின்றோர். இயேசுவின் முதல் போதனையே மனமாற்றமாகத்தான் இருக்கிறது. மாற் 1:15 ல் வாசின்றோம், “மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள்” என்று. எனவே நாம் நம்முடைய பழைய, பாவ வாழ்க்கையிலிருந்து மனமாறி புதிய வாழ்க்கை வாழுவோம்.

ஒரு வகுப்பிலே மாணவன் ஒருவன் இருந்தான். அவன் சகமாணவர்களது பொருட்களைத் திருடுவதையே தன்னுடைய வாடிக்கையாகக் கொண்டிருந்தான். வகுப்பு ஆசிரியருக்கு இச்செய்தி தெரிய வந்து, அவர் அவனுக்கு எவ்வளவோ அறிவுரை சொன்னாலும்கூட, அவன் தன்னுடைய திருட்டை விட்டவனாக இல்லை. இது வகுப்பு ஆசிரியருக்கு இன்னும் மனவருத்தத்தைத் தந்தது.

ஒருநாள் ஆசிரியர் அந்த மாணவனை அழைத்து, கொஞ்சம் பணம்கொடுத்து வகுப்புத் தேவையான பொருட்களை வாங்கிவரச் சொன்னார். அவனும் கடைக்குப் போய், பொருட்களை எல்லாம் வாங்கிவந்து ஆசிரியரிடம் கொடுத்தான். அத்தோடு மீதிப் பணத்தையும் அவரிடம் கொடுத்தான்.

அதன்பிறகு அன்றைய நாளில் நடந்த வகுப்பில், ஆசிரியர் அந்த மாணவனை எழுந்து நிற்கச் சொல்லி, “இம்மாணவனைப் பொருட்களை வாங்கிவரச் சொன்னான். அவனும் நேர்மையாக நடந்துகொண்டு பொருட்களை வாங்கி வந்திருக்கிறான். மீதிப்பணத்தையும் கூட என்னிடத்தில் தந்திருக்கிறான். இந்த மாணவனைப் போன்று நீங்கள் அனைவரும் நேர்மையாக, உண்மையாக இருக்கவேண்டும்” என்று அறிவுரை கூறினார்.

இதைக் கேட்ட மாணவன் உள்ளம் குத்துண்டு போனான். ஏனெனில் அன்றைய நாளிலும் அவன் ஆசிரியர் கொடுத்த பணத்தில் மீதிப் பணத்தை சரியாகக் கொடுக்கவில்லை. எனவே அவன் தன்னுடைய தவறை நினைத்து அழுதான். ஆசிரியர் நமக்கு மீண்டும் மீண்டுமாக புத்திமதி சொல்லியும், நம்பிக்கை வைத்தும் நான் திருந்தவில்லையே என்று நினைத்து வருந்தினான். அன்றோடு அவன் தன்னுடைய திருட்டை விட்டுவிட்டு, நல்வழியில் வாழ்ந்தான்.

கதையில் வரும் ஆசிரியர் போன்றுதான் கடவுள் – ஆண்டவர் இயேசு – நாம் ஒவ்வொருவரும் மனந்திரும்பி வாழவேண்டும் என்று விரும்புகிறார். நாம் மத்தேயுவைப் போன்று மனந்திரும்பி வாழும்கின்றோமா என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஆதலால் நற்செய்தியாளர் தூய மத்தேயுவின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் கடவுள் அவர் வழியாக நமக்கு கொடுத்த நற்செய்தியின் நூலின் படி வாழ்வோம். மனந்திரும்பி வாழ்ந்து இறையருள் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.