15 செப்டம்பர் 2021, புதன்

மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 15)

மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 15)மரியன்னையின் துயரங்கள் / வியாகுல அன்னையின் விழா


பத்துவயதுச் சிறுவன் ஒருவன் தன்னுடைய தாயின் அருகில் அமர்ந்துகொண்டு, அவளது முகத்தையே பார்த்துக்கொண்டு சொன்னான், “அம்மா இந்த உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா முகங்களையும்விட உங்கள் முகம் மிகவும் அழகாக இருக்கிறது”. தாய் அதைக்கேட்டு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள். சிறிது நேரம் கழித்து, அவன் தன்னுடைய தாயின் கைகளைப் பார்த்துத் திடுக்கிட்டான். ஏனெனில் அவை பார்ப்பதற்கே விகாரமாக இருந்தன. உடனே அவன் தன் தாயிடம், “இந்த உலகத்தில் இவ்வளவு மோசமான கைகளைப் பார்த்ததில்லை” என்றான். இதைகேட்டு தாய் ஒருநிமிடம் நொறுங்கிப் போனாள்.

அந்நேரத்தில் தூரத்திலிருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த அவனுனது தந்தை, அவனைத் தனியே அழைத்துக்கொண்டுபோய் ஒரு கதை சொன்னார், “அன்பு மகனே! ஒரு காலத்தில் ஒரு அம்மாவும், அப்பாவும், அவர்களுடைய குழந்தையும் ஒரு சிறு குடிசையில் வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் குழந்தையை தொட்டலில் தூங்கவைத்துவிட்டு, அம்மா வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள். அப்போது திடிரென்று வீட்டில் தீப்பற்றிக்கொள்ள அவள் என்ன செய்வதென்று தெரியாமால் திகைத்து நின்றாள். பின்னர் தன்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை, உள்வீட்டில் தொட்டிலில் தூங்கும் தன் மகனை எப்படியாவது காப்பற்ற வேண்டும் என்று ஓடினாள். அதற்குள் தீ தொட்டிலில் பரவிவிடவே, தன்னுடைய இரண்டு கைகளால் தீயை அடித்து அணைத்துவிட்டு தொட்டிலில் இருந்த தன்னுடைய குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடிவந்தாள். இதனால் அந்தத் தாயின் கைகள் இரண்டும் கருகிப் போயின” என்றார்.

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவன், “தன்னுடைய உயிரையே பணையம் வைத்து, கைகளையும் கருகவிட்ட அந்தத்தாய் உண்மையிலே பெரியவள்தான்” என்றான். அதற்கு அவனுடைய தந்தை, “அந்தத் தாய் வேறுயாருமல்ல, உன்னுடைய அம்மாதான்” என்றான்.
உடனே சிறுவன் ஓடோடிபோய், அம்மாவைக் கட்டி அணைத்து, அவளுடைய கைகளில் முத்தமிட்டு, “இந்த உலகத்தில் இருக்கக்கூடிய எல்லாக் கைகளை விடவும், இந்தக் கைகள் மிகவும் அழகானவை” என்றான்.

அன்னை என்பவள் பிள்ளைகளுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருப்பவள் என்பதைத்தான் இந்த நிகழ்வு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
இன்று திருச்சபையானது மரியன்னையின் துயரங்களை - வியாகுல அன்னையின் நினைவுநாளைக் - கொண்டாடுகிறது. “பிள்ளைகளுக்காகத் தாய் செய்யும் தியாகத்தை இத்தகையதென்று எழுத்தால் எழுத முடியாது என்பார்” திரு.வி.க. அவர்கள். ஆம், ஒரு குழந்தையின் முன்னேற்றத்திற்காக தாய் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம். அதற்கு மரியன்னையும்கூட விதிவிலக்கல்ல.

இயேசுவை ஒரு முழுமனிதனாக வளர்த்தெடுப்பதில் மரியாள் மிகபெரிய பங்காற்றியிருக்கிறாள் என்று சொன்னால் அது மிகையாகாது. அதற்காக அவர் அனுபவித்த துன்பங்கள் அதிகம்; கொடுத்த விலை அதிகம்.

மரியாள் இயேசுவுக்காக பல்வேறு துன்பங்களை, இன்னல்களை அனுபவித்த போதிலும் திருச்சபை ஏழு துன்பங்களை – வியாகுலங்களைப் - பட்டியலிடுகிறது. அவையாவன
1. சிமியோனின் “உள்ளத்தை ஊடுருவும்” இறைவார்த்தை,
2.எகிப்துக்கு தப்பியோடல்,
3. இயேசு கோவிலில் காணாமல் போதல்,
4.சிலுவை சுமந்து சென்ற இயேசுவை சந்தித்தல்,
5. இயேசு சிலுவையில் அறையப்படல்,
6.இறந்த இயேசு உடலை மடியில் வைத்தல்,
7. இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்தல்.
இதுபோன்ற தருணங்களில் எல்லாம் மரியாளின் உள்ளத்தை நிச்சயம் ஒரு வாள் ஊடுவியிருக்கலாம். ஆனால் மரியாள் தான் பட்ட துன்பங்களை எல்லாம் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் படிக்கின்றோம், “இயேசு இறைமகனாக இருந்தும், துன்பங்களில் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்” என்று. மரியாளும்கூட தனது துன்பங்களில் வழியாக தந்தைக் கடவுளின் இறைத்திருவுளத்திற்கு கீழ்படிந்து நடக்கிறார். அவரது அன்புக்கு உரியவராகிறார்.

இறைவழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவருமே நமக்கு வரும் துன்பங்களை துணிவோடு, மகிழ்வோடு ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் துன்பம் இல்லை என்றால் இன்பம் இல்லை. சிலுவை இல்லை என்றால் மீட்பு இல்லை.

ஆகையில் மரியாளைப் போன்று துன்பனளைத் துணிவோடு ஏற்போம். இறையருள் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.