15 செப்டம்பர் 2021, புதன்

மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 15)

மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 15)மரியன்னையின் துயரங்கள் / வியாகுல அன்னையின் விழா


1808 ஆம் ஆண்டில் ஒருநாள் திருத்தந்தை ஏழாம் பத்திநாதர் திருத்தந்தையாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது அலெக்ஸாண்டர் என்ற மன்னன் திருத்தந்தை அவர்களை ஒருசில அரசியல் காரணங்களுக்காக கடத்திச் சென்று, வீட்டுச் சிறையில் வைத்தான். ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் திருத்தந்தை அவர்கள் வீட்டுச் சிறையில் இருந்தார்கள். அக்காலத்தில் அவர் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். 1814 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதிதான் மன்னன் அலெக்ஸ்சாண்டர் திருத்தந்தை அவர்களை விடுதலை செய்து அனுப்பி வைத்தான்.

திருத்தந்தை அவர்கள் வீட்டுச் சிறையில் இருந்தபோது தான் அனுப்பவித்த துன்பங்கள், வேதனைகள் எல்லாவற்றையும் அன்னை மரியா தன்னுடைய வாழ்வில் அனுப்பவித்த துன்பங்களோடு சேர்த்து மரியின் வியாகுலங்கள் என்று கொண்டாடப் பணித்தார். அவ்வாறு உருவானதுதான் வியாகுல அன்னையின் விழா.

தொடக்கத்தில் இவ்விழாவனது செப்டம்பர் 18 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் திருத்தந்தை பத்தாம் பத்திநாதர்தான் இவ்விழாவை திருச்சிலுவை மகிமைப் பெருவிழாவிற்கு அடுத்து கொண்டாடப் பணித்தார். ஆம், இன்று நாம் வியாகுல் அன்னையின் விழாவைக் கொண்டாடுகின்றோம். மீட்புத் திட்டத்தில் அன்னை மரியாள் அனுபவித்த துன்பங்களை, ஆண்டவர் இயேசுவோடு பட்ட பாடுகளை இன்றைய நாளில் நாம் சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கின்றோம்.

ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் தாயானவள் முக்கியப்பங்கு ஆற்றுகிறாள். அதனால்தான் கவிஞன் ஒருவன் இவ்வாறு பாடினான், “அம்மானா சும்மா இல்லடா, அவ இல்லனா யாரும் இல்லடா” என்று. இது முற்றிலும் உண்மை. தாய்தான் ஒரு குழந்தையின் வளர்ப்பில், அதனுடைய முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு ஆற்றுகிறாள். அந்த வகையில் பார்க்கும்போது ஆண்டவர் இயேசுவின் வளர்ச்சியில், அவருடைய முழு மனித முன்னேற்றத்தில் மரியாளின் பங்கு மிக முக்கியமானது என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

அன்னை மரியாள் மீட்புத் திட்டத்தில் பங்குகொண்டதற்காக அனுபவித்த துன்பங்கள் ஏராளம். பல துன்பங்களை நாம் சொல்லிக்கொண்டே போனாலும் திருச்சபை ஏழு என்று வரிசைப்படுத்தி இருக்கிறது.

அவையாவன:
1. சிமியோனின் இறைவாக்கு,
2. குழந்தை இயேசுவை ஏரோது மன்னனிடமிருந்து காப்பாற்ற எகிப்துக்கு தூக்கிக்கொண்டு ஓடுதல்,
3. இயேசு கோவிலில் காணாமல் போதல்,
4. சிலுவை சுமந்துகொண்டு சென்ற இயேசுவை வழியில் சந்தித்தல்,
5. இயேசு சிலுவையில் அறியப்படல்,
6. இயேசு தன்னுடைய மடியில் சுமத்தல்,
7. இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்தல்.

இயேசுவுக்காக, இறையாட்சிப் பணியில் பங்கெடுத்ததற்காக மரியா அனுபவித்த துன்பங்கள் இவை மட்டுமில்லை இன்னும் ஏராளம். தன்னுடைய மகனை மக்கள் அனைவரும் பேய்பிடித்தவன், பெருந்தீனிக்காரன், பாவிகளின் நண்பன் என்று விமர்சனம் செய்யும்போது மரியாள் அதிகமான துன்பங்களை அனுபவித்திருக்கலாம். ஆனாலும் அவள் கடவுளுக்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார். அதனால்தான் கடவுள் அவரை இறைவனின் தாயாக உயர்த்தினார்.

நம்முடைய குடும்பங்களிலும் கூட பிள்ளைகளின் வளர்ச்சிக்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காக நம்முடைய தாய்மார்கள் அனுபவிக்கும் துன்பங்கள், சிலுவைகள் ஏராளம். எனவே அவர்களை இந்த நாளில் சிறப்பாக நினைவுகூர்ந்து பார்த்து, அவர்களுக்காக மன்றாடுவது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
மிகப்பெரிய அறிவியல் விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் தன்னுடைய தாயைக் குறித்துச் சொல்லும்போது சொல்வார், “சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் இருந்த ஆசிரியர்கள் என்னை ஒன்றுக்கும் உதவாதவன், மக்கு என்று சொல்லி, வெளியே அனுப்பியபோது என்னுடைய தாய்தான் என்னை சிறப்பாக வளர்த்தெடுத்தாள்; அறிவையும், ஆறுதலையும் தந்து என்னை ஒரு தலைசிறந்த விஞ்ஞானியாக உருவாக்கினாள். அதற்காக அவள் பட்ட கஷ்டங்கள் ஏராளம், துன்பங்கள் ஏராளம். அவள் மட்டும் இல்லையென்றால் நான் ஒன்றுமில்லை” என்று.

ஆம், தாமஸ் ஆல்வா எடிசனுடைய முன்னேற்றத்தில் அவளுடைய தாயானவள் முக்கியப் பங்காற்றியதுபோல இன்னும் எத்தனையோ மனிதர்களுடைய வளர்ச்சியில் தாயானவள் சிறப்பான ஓர் இடம் வகிக்கிறாள் என்று சொன்னால் அது மிகையாகாது. எனவே மீட்புத் திட்டத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த மரியன்னையின் தியாகங்களை எண்ணிப் பார்ப்போம். அவரைப் போன்று இந்த மானுட சமுதாய முன்னேற்றத்திற்காக நாம் துன்பங்களை துணிவுடன் ஏற்க முன்வருவோம்.
நிறைவாக வியாகுல அன்னையால் நடந்த ஓர் அற்புதத்தை தியானித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

தூய சார்லஸ் பொரோமேயு மிலன் நகரில் ஆயராக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி. 1583 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி சார்லஸ் பொரோமேயுவின் ஆளுகைக்கு உட்பட்ட ஓர் ஆலயத்தில் இரண்டு விவசாயிகள் வழிபடச் சென்றார்கள். அவர்கள் வழிபட்டுக்கொண்டிருந்த போது மரியன்னியின் சிரூபத்திலிருந்து கண்ணீர் வழிந்து வந்தது. சிறுது நேரத்தில் அது இரத்தமாக மாறியது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த விவசாயிகள் இருவரும் ஓடிப்போய் அதை மக்களிடத்தில் சொன்னார்கள். மக்களும் அந்த அற்பத்தை வந்து பார்த்தார்கள். அப்படிப் பார்க்க வந்தவர்களில் ஒருவர் மரியின் கண்ணிலிருந்து வரும் இரத்தம் உண்மைதானா என்று சோதித்து அறிய விரும்பி, இறுதியில் அது உண்மையெனக் கண்டுகொண்டார். பின்னர் இச்செய்தி ஆயரின் செவிகளை எட்டியது. அவரும் கார்லோ பாஸ்கேப் என்பவற்றின் தலைமையில் ஒரு தனிக் குழுவை அமைத்து, அது உண்மைதானா? என்று கண்டறியச் சொன்னார். அந்த குழுவும் தங்களுடைய சோதனையின் முடிவில் உண்மையென அறிவித்தது. இதனால் ஆயர் அவர்கள் ‘வியாகுல அன்னைக்கு அந்த இடத்தில் ஆலயம் கட்டத் தொடங்கினார். இப்படித்தான் வியாகுல அன்னையின் பக்தி படிப்படியாகப் பரவியது.

எனவே, வியாகுல அன்னையின் விழாவைக் கொண்டாடும் நாம் அந்த அன்னையைப் போன்று இறைவனுக்காகத் துன்பங்களைத் துணிவுடன் தாங்கிக்கொள்வோம், இறைவனின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.