15 செப்டம்பர் 2021, புதன்

“நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்”

பொதுக்காலம் இருபத்து நான்காம் வாரம் புதன்கிழமை


திருப்பாடல் 111: 1-2, 3-4, 5-6 (2a)

“நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்”

நீங்கள் பேசப்போகும் கடைசி வாரத்தை என்ன?


சில ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒருவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருந்தது. அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக, மருத்துவர் நோயாளரிடம், “இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கின்றது. அதனால் கடைசியாக எதையாவது சொல்ல வேண்டும் என்றால், சொல்லி விடுங்கள். இதன்பிறகு நீங்கள் எதுவும் சொல்ல முடியாது” என்றார். மருத்துவர் நோயாளரிடம் இவ்வாறு சொல்லக்காரணம், அந்த நோயாளருக்கு நாவில் புற்றுநோய் இருந்தது. நாவினை அகற்றினால்தான் உயிர் பிழைக்கமுடியும் என்பதால்மருத்துவர் நோயாளரிடம் இப்படிச் சொன்னார்.

மருத்துவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு நோயாளருக்குக் கண்களிலிருந்து கண்ணீர் திரண்டு வந்தது. ‘நோயாளர் என்ன சொல்லப்போகிறாரோ?’ என்று மருத்துவர் அவரையே பார்த்துகொண்டிருந்தபோது, நோயாளர் தன் இதழ்களைத் திறந்து மெல்ல, “இயேசுவே! உமக்கு நன்றி” என்றார். இதைக்கேட்டு மருத்துவர் மிகவும் வியப்படைந்தார். இதன்பிறகு மருத்துவர் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து, அவரது உயிரைக் காப்பற்றினார் (Evangelical Visitor)

தான் பேசப்போகும் கடைசி வார்த்தை இதுதான் என்று அறிந்த பின், “இயேசுவே! உமக்கு நன்றி!” என்று அந்த நோயாளர் சொன்னது உண்மையில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வுவே! இயேசுவுக்கு – ஆண்டவருக்கு – நன்றி சொல்லவேண்டும். அதையே இந்த நிகழ்வும், இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலும் நமக்கு உணர்த்தக்கூடிய செய்தியாக இருக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பிறகு சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்த யூத நாட்டினர் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது. அண்டை நாடுகளிலிருந்து அவர்களுக்கு எதிர்ப்புகள் இருந்த வண்ணமாய் இருந்தன; பாரசீக அதிகாரிகள் சில சமயங்களில் அவர்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளவில்லை; பொருளாதார நிலை மிகவும் மந்தமாக இருந்தது; மக்கள் ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவில்லை; சக மனிதர்களையும் அவர்கள் மதித்து நடக்கவில்லை. இத்தகைய சூழலில் லேவியர் ஒருவர் பாடிய பாடல்தான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 111.

“அல்லேலூயா! நெஞ்சார ஆண்டவருக்கு செலுத்துவேன்” என்று தொடங்கும் திருப்பாடல் ஆசிரியர், “அவர் தனக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்” என்கிறார். உண்மையில் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகின்ற ஒருவர் யாராக இருக்க முடியும் என்று நாம் சிந்தித்துப் பார்த்தோமெனில், ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடக்கின்ற ஒருவராலேயே முடியும். இவ்வாறு ஒருவர் ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்கு நன்றி செலுத்துகின்றபோது, கடவுள் அவருக்கு எல்லா ஆசிகளையும் வழங்குகின்றார். ஆகையால், நாம் ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்கு நன்றி செலுத்தி எல்லா ஆசிகளையும் பெறுவோம்.

சிந்தனைக்கு:

 எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள் (1 தெச 5: 18)

 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர் (திபா 128: 1)

 ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால், ஆயுள் நீடிக்கும் (நீமொ 19: 23)

இறைவாக்கு:

‘ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்’ (1 குறி 16: 8) என்கிறது இறைவார்த்தை. எனவே, நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.