15 செப்டம்பர் 2021, புதன்

நேர்மையாளரைக் ‘குடிகாரன்’ என்றவர்கள்

பொதுக்காலம் இருபத்து நான்காம் வாரம் புதன்கிழமை


I திமொத்தேயு 3: 14-16
II லூக்கா 7: 31-35

நேர்மையாளரைக் ‘குடிகாரன்’ என்றவர்கள்

விமர்சகர்கள்:


“நேற்று மாலையில் நகரில் நடந்த ஓர் இசைக் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். ஏன்தான் அங்கே போனேனோ என்பதுபோல் எனக்கு ஆகிவிட்டது” என்று தன் நண்பரிடம் வருத்ததோடு சொன்னார் அந்த இசைப்பிரியர்.

“ஏன், நீ சென்ற அந்த இசைக் கச்சேரி அவ்வளவு மோசமாகவாக இருந்தது?” என்று நண்பர் அந்த இசைப்பிரியரிடம் கேட்தற்கு அவர், “மோசம் என்று சொல்லவில்லை. அந்த இசைக் கச்சேரியில் எந்தவொரு குறையும் காண முடியவில்லை. அதனால்தான் அந்த இசைக்கச்சேரிக்கு ஏன்தான் நான் போனேனோ என்பதுபோல் ஆகிவிட்டது என்றேன்” என்றார்.

வேடிக்கையான நிகழ்வாக இருந்தாலும், இன்றைக்கு ஒருசிலர் அடுத்தவரில் எப்படிக் குறை கண்டுபிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு அலைவதைப் பகடி செய்வதாக இருக்கின்றது இந்த நிகழ்வு. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, அடுத்தவரிடம் குறைகாணும் போக்கை அல்லது தேவையின்றி விமர்சிக்கும் போக்கைக் கேள்விக்கு உட்படுத்துவதாக இருக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

“தூய ஆவியால் நேர்மையாளர் என (அவர்) மெய்ப்பிக்கப்பட்டார்” – இது புனித பவுல் திமொத்தெயுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் வார்த்தைகள். இயேசு கிறிஸ்து நேர்மையாளர் எனத் தூய ஆவியாரேலேயே மெய்ப்பிக்கப்பட்டார் எனில், அவர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேறு சான்றுகள் தேவையில்லை.

ஆனால், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவரைப் பெருந்தீனிகாரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்கிறார்கள். இயேசுவை அவர்கள் இவ்வாறு விமர்சித்தார்கள் எனில், திருமுழுக்கு யோவானையும் அவர்கள் விட்டுவைக்க வில்லை. “பேய்பிடித்தவன்” என்று அவரை அவர்கள் விமர்சித்தார்கள்.

“மனம் மாறுங்கள்; ஏனெனில், விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” (மத் 4: 1-2, 17) – இதுதான் திருமுழுக்கு யோவானும் இயேசுவும் அறிவித்த நற்செய்தி. இதை அவர்கள் வேறு வேறு பாணியில் அறிவித்தாலும் செய்தி ஒன்று. ஆனால், பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இருவரும் அறிவித்த நற்செய்திக்குச் செவிகொடாமல், அவர்களை விமர்சித்தார்கள். இதனால்தான் இயேசு அவர்களுடைய செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று குறிப்பிட்டுவிட்டு, “ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று” என்கிறார்.

ஆம், எப்பொழுதும் நாம் குறைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் நிறைகளைப் பார்ப்பதற்கு நேரமில்லாமல் போய்விடும். ஆகவே, குறைகளை அல்ல, நிறைகளைக் காண்போம்.

சிந்தனைக்கு:

 பிறர் உங்களைவிட மதிப்பிற்கு உரியவரென எண்ணுங்கள் (உரோ 12: 10).

 மற்றவரைத் தீர்ப்பிட்டுக் கொண்டே இருந்தால், அன்பு செய்ய நேரம் இருக்காது – கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா.

 குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

ஆன்றோர் வாக்கு:

‘இயலும் என்பவர்களால் எதையும் செய்ய முடிகிறது; இயலாது என்பவர்களால் விமர்சிக்க மட்டும் முடியும்’ என்கிறது ஒரு முதுமொழி. நாம் மற்றவர்களைக் காரணமின்றி விமர்சிப்பவர்களாக இல்லாமல், நல்லவற்றை மனந்திறந்து பாராட்டக் கற்றுக்கொண்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.