திருத்தூதர்கள், திருச்சபைத் தலைவர்கள் ஆகியோர் அக்காலத் தேவைகளின் அடிப்படையில் எழும் கேள்விகளுக்கு விடையளிக்கவும், மாற்றுக் கருத்துகளுக்கு மறுப்புத் தெரிவிக்கவும், மக்களை இறைநம்பிக்கையில் வலுவடையச் செய்யவும் திருமுகங்களை எழுதினர். அவை குறிப்பிட்ட தலத் திருச்சபைக்கு எழுதப்பட்டவை போலத் தோன்றினாலும் சுற்றுமடல்களாகவே கருதப்பட்டன. பவுல் எழுதிய திருமுகங்கள் அவை எழுதப்பட்ட காலத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக அவற்றின் அளவைக் கொண்டே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
அக்கால மடல்இலக்கியப் பாணியிலேயே விவிலியத் திருமுகங்கள் அமைந்துள்ளன.
புதிய ஏற்பாட்டுத் திருமுகங்களுள் பல பவுலோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் சில அவரே நேரடியாக எழுதியவை. மற்றவை அவருடைய சிந்தனை அடிப்படையில் எழுந்தவை. பவுல் எழுதிய திருமுகங்களை அவரது வாழ்க்கைப் பின்னணியில் படிக்கும்போது கிறிஸ்தவ உண்மைகளை ஆழமாகக் கற்றுக்கொள்ள முடிகிறது. அவர்தம் திருமுகங்கள் வாயிலாகவும் திருத்தூதர் பணிநூல் மூலமாகவும்தான் அவரது வாழ்க்கையைப் பற்றி நாம் அறிகிறோம்.
பவுல் பென்யமின் குலத்தைச் சேர்ந்த யூதக் குடும்பத்தில் கி.பி. 11ஆம் ஆண்டளவில் பிறந்தார். இவரது யூதப் பெயர் சவுல். இன்றைய துருக்கி நாட்டின் பகுதியான சிலிசியா மாநிலத்தின் உரோமைக் குடியிருப்பான தர்சு நகரத்தில் இவரது குடும்பம் வாழ்ந்து வந்தது. செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்த இவரது குடும்பத்திற்கு உரோமைக் குடியுரிமையும் இருந்தது.
இவர் இளமையிலிருந்தே யூதச் சட்டங்களையும் நெறிமுறைகளையும் கற்றறிந்தார்; உலகப் பொதுமொழியாயிருந்த கிரேக்கத்தையும் கற்றுத் தெளிந்தார்; பின்னர் எருசலேம் சென்று புகழ் பெற்ற கமாலியேல் என்னும் யூத ரபியிடம் கல்வி பயின்றார்.
யூதக் கோட்பாடுகளைக் கில்லேல் என்பவரது விளக்கங்களைத் தழுவிக் கடைப்பிடிக்கும் பரிசேயச் சமயப் பிரிவின் ஆர்வமிக்க உறுப்பினராக இருந்தார். இயேசு வாழ்ந்த காலத்தில் இவர் பாலஸ்தீனத்தில் இருந்திருக்கலாம் எனக் கூற இடம் உண்டு.
முதலில் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும் கூட்டத்தில்தான் இவரை நாம் சந்திக்கிறோம். சவுல் ஸ்தேவானைக் கல்லெறிந்து கொல்வதற்கு உடன்பட்டிருந்தார் (திப 8:1). கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்காகத் தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில் கிறிஸ்து அவரைத் தடுத்து ஆட்கொண்டார். அனனியா என்னும் கிறிஸ்தவர் வாயிலாகப் பிற இனத்தவருக்கு நற்செய்தி அறிவிக்கும் திருத்தூதராகக் கிறிஸ்து தம்மை அழைப்பதை அவர் அறிந்துகொண்டு, தம்மை அர்ப்பணித்தார். சமயப் பற்றும் சட்டப் பற்றும் மிக்கவராக இருந்த சவுல் மனம் மாறியபின் கடவுளின் பேரருளைப் பறைசாற்றும் ஆர்வமிக்க திருத்தூதர் ஆனார். அதற்குமுன் அரேபியாவுக்குச் சென்று தம்மைத் தயார் செய்து கொண்டார் (கலா 2:17). பின்னர் தமஸ்கு, எருசலேம் பகுதிகளுக்குச் சென்று தம் பணியைத் தொடங்கினார்.
பவுல் தம் முதல் நற்செய்திப் பயணத்தைக் கி.பி. 46-48 ஆண்டுகளில் மேற்கொண்டு, சைப்பிரசுக்கும் சின்ன ஆசியா நாட்டுப் பகுதிகளுக்கும் சென்று திருச்சபையை நிறுவினார் (திப 13, 14; 2 திமொ 3:11). கி.பி. 49ஆம் ஆண்டில் எருசலேம் பொதுச் சங்கத்தில் கலந்து கொண்டு பிற இனத்தாரிடையே தூய ஆவி செயல்படுதலைப் பற்றி எடுத்துரைத்துத் தமது பணிக்குச் சங்கத்தின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டார் (திப 15; கலா 2:3-9).
கி.பி. 50-52க்கு உட்பட்ட காலத்தில் தமது இரண்டாவது நற்செய்திப் பயணத்தை மேற்கொண்டு தாம் ஏற்கெனவே நிறுவிய சபைகளை வலுப்படுத்தினார்; பின்னர் மாசிதோனியா, அக்காயா பகுதிகளுக்குச் சென்று நற்செய்தியை அறிவித்து, அங்கும் திருச்சபைகளை நிறுவினார் (திப 15-18). கி.பி. 53-57 வரை மூன்றாம் நற்செய்திப் பயணத்தின்போது கலாத்தியா, பிரிகியா, கொரிந்து, மாசிதோனியா, இல்லிரிக்கம் ஆகிய இடங்களுக்குச் சென்று திருப்பணி ஆற்றினார்; எபேசை மையமான பணித்தளமாகக் கொண்டு செயல்பட்டார்; அங்குச் சிறைப்பட்டார். அக்காலத்தில் அவர் சில சிறைக்கூட மடல்களை எழுதியிருக்கலாம். பின் கி.பி. 58இல் எருசலேமில் கைதானார்; கி.பி. 60 வரை செசரியாவில் சிறைப்பட்டிருந்தார்; உரோமைப் பேரரசர் சீசரே தமக்குத் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் உரோமைக்கு அனுப்பப்பெற்றார்; அங்குப் போகும் வழியில் கப்பல் அழிவுற நேரிட்டதால் மால்தா தீவினருக்கு நற்செய்தி அறிவிக்கும் வாய்ப்பைப் பெற்றார்; பின்பு உரோமை வந்தடைந்து இரு ஆண்டுகள் வீட்டுக் கைதியாகவே இருந்துகொண்டு நற்செய்தியை அறிவித்து வந்தார்.
பின்பு பவுல் விடுதலை பெற்று ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றிருப்பார் என நம்ப இடமிருக்கிறது. மீண்டும் கி.பி. 60இல் கைது செய்யப்பட்டு நீரோ மன்னன் காலத்தில் மரண தண்டனை பெற்றார் என மரபு கூறுகிறது.
திருத்தூதுப் பணி செய்த பவுல் தாம் நிறுவிய சபைகளை மீண்டும் போய்ப் பார்த்து, கிறிஸ்தவ நம்பிக்கையில் திடப்படுத்தும் மேய்ப்புப் பணியைத் தொடர்ந்து ஆற்றினார்; தாம் செல்ல முடியாத இடங்களுக்கு உடன் பணியாளர்களை அனுப்பினார்; அம்மக்களுக்குப் பல திருமுகங்களைச் சுற்றறிக்கை மடல்களாக அனுப்பினார். தாம் சென்றிராத உரோமை நகரத் திருச்சபைக்கும் மடல் எழுதி உலகத் திருச்சபை ஏற்றுக்கொள்ள வேண்டிய ஆழமான பொதுவான இறையியல் கருத்துக்களை வெளியிட்டார். இவ்வாறு திருத்தூதராகவும் ஆயராகவும் இறையியலாளராகவும் இலங்குகிறார் தூய பவுல்.