15 சனவரி 2020, புதன்

பொங்கல் திருவிழா

பொங்கல் திருவிழா

வரவேற்புரை:-

இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே! தைப்பொங்கல், தை ஓன்று அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. அவ்விழாவைக் கொண்டாட நாம் இங்கு குழுமியுள்ளோம்.

'செய்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை', என்பதற்கேற்ப, உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. பொங்கல் விழாவன்று, உழவர்கள், நிலத்தை வளப்படுத்தி தங்களுக்கு வாழ்வளித்த படைப்பின் இறைவனுக்கு, அறுவடையின் முதற்கனியை அளித்து, நன்றிப்பலி செலுத்துகின்றனர்.

பொங்கல் விழா, உழவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது உழைப்பின் பயனைத் துய்க்கும் எல்லா மக்களுக்கும் ஒரு பெரும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்

நாளைய வாழ்க்கை எனும் புதுப்பானையில்
புதிய எண்ணங்கள்….
புதிய முயற்சிகள்…
புதிய நண்பர்கள்…
புதிய நம்பிக்கைகள்..
புதிய திட்டங்களைச் சேர்த்திடுவோம்!
சோர்வினை செயல்கள் எனும் தீயைமூட்டி…..
உடனிருப்போரின் ஆதரவு எனும் உலவைச் சத்தத்தில்…..
“பொங்கட்டும் புது வாழ்வு”

பொங்கும் பொங்கல், நோய் இல்லா வாழ்க்கையும், நிறைந்த செல்வமும், நம் வாழ்வில் எல்லா வளமும் பெற்று, அன்புடனும், பாசத்துடனும் வாழ, இனிய இந்த தைத் திருநாளில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, வருகைப் பாடலுக்கு எழுந்து நிற்போம் / இத்திருப்பலியில் இணைவோம்.


திருப்பலி முன்னுரை:-

இறைத் திருமகன் இயேசுவின் இனிய நண்பர்களே, சகோதரர்களே, சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் வணக்கம் கூறி, பழையன மடிந்து, புதியன மலர்ந்து தீமைகள் ஒழிந்து, நன்மைகள் பெருக” என்று தைத் திருநாளில் நலமும் வளமும் பெருகி இறை ஆசீரை நிறைவாகப் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

கிறிஸ்து விண்ணகத் தந்தையின் தலைப்பேறான மகன். ஆகவே மோசே சட்டப்படி மரியா, தன் தலைப்பேறான இயேசுவை ஆண்டவருக்கு அர்ப்பணித்தார் (லூக் 2:22-24). பழைய ஏற்பாட்டில் அறுவடை நாளன்று முதற்கனியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட கதிர்கள், ஐம்பதாம் நாள் அப்ப காணிக்கையாய் அளிக்கப்பட்டன (லேவி 23:16).

இறைமகன் இயேசு கிறிஸ்து, தன்னையே தாரை வார்த்து தகனப்பலியாக, இந்த தரணியில் உயிர் நீத்து, விலையில்லா காணிக்கையாக்கினார்

திருச்சபையில் திருமுழுக்கு பெற்ற அனைவரும் முதற்கனியாக ஒப்புக்கொடுக்கப்படுகின்றனர் (யாக் 1:18, 1கொரி 16:15). ஆகவே ஒவ்வொரு அறுவடை விழாவும் அல்லது முதற்கனி விழாவும் நாம் பெற்ற திருமுழுக்கை நமக்கு நினைவுட்டுகிறது.

பொங்கல் விழா, அறுவடையின் முதற்கனியை இறைவனுக்குப் படைக்கும் விழா. இவ்விழா, கிறிஸ்தவனின் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்து, உயிர்த்தெழுதலில் அவரது நம்பிக்கையையும் உறுதிப்படுத்தி, விண்ணுலக வாழ்வை இம் மண்ணுலகிலேயே முன்சுவையாக அனுபவிக்க உதவுகிறது.

ஆகவே நாம் அனைவரும் ஒன்றித்து இறைவன் நமக்கு அளித்துள்ள அருங்கொடைகள் அனைத்திற்கும் நன்றி கூறுவோம், இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை: (லேவியர் 23: 9-14))

அறுவடைக்காலம் இறையருட் பெருக்கின் அருங்குறி. ஆகவே நல்ல விளைச்சலை நல்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, அறுவடையின் முதற்கனியாகிய கதிர்கட்டை இறைவனுக்குக் காணிக்கையாக அளித்தனர் கூறும் இவ்வாசகத்திற்கு செவிசாய்ப்போம்.

திருப்பாடல்

நானிலம் பலனைத் தந்தது
கடவுள் ஆசீர் வழங்கினார்

1.கடவுளே எம்மீது இரங்கி எமக்கு ஆசீர் வழங்கும்
திருமுக ஒளி எம்மேல் வீசிடச் செய்தருளும்
அப்போது உலகம் உமது வழிதனை அறிந்துகொள்ளும்
பிற இனத்தார் யாவரும் மீட்பை உணர்வார்கள்

2. வேற்று நாட்டினர் உம்மை மகிழ்ந்து பாடுவர்
உலகின் நாடுகளை நேர்மையாய் நடத்துகின்றீர்
கடவுள் நமக்கு ஆசீர் வழங்கிடுவார்
உலகில் வாழ்வோர் அவருக்கு அஞ்சிடுவர்

விசுவாசிகள் மன்றாட்டு:

1) எம்மைப் படைத்து பராமரிக்கும் பரம்பொருளே! இறைவா! நீர் எங்களுக்கு கொடையாக தந்த இயற்கைக்காகவும், அதன் பலன்களுக்காகவும் நன்றி கூறுகிறோம். இந்த வளமிக்க இயற்கையை நாங்கள் பாதுகாத்து எம்பின்வரும் சந்ததியினரும் அதன் பலன்களை பெறும் வண்ணம் வாழ்ந்திட வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) சேற்றில் பதித்து, வெயில் மழை பாராமல் எப்போதும் விளைநிலங்களில் பணிபுரியும் எமது விவசாய நண்பர்களுக்காக மன்றாடுகிறோம். தங்களின் உடல் உழைப்பின் பலனை நிறைவாகப் பெற்று, பஞ்சம், பசி, கடன், நோய் போன்ற எல்லா தீமைகளிலிருந்தும் விடுதலை பெற்று நிறைவோடு வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) விவசாய வளமிக்க எம் நாட்டை ஆளும் அதிகார வர்க்கத்தினருக்காக மன்றாடுகிறோம். தங்கள் சுயநலத்தை மறந்து ஏழை, எளிய விவசாய பெருமக்களின் வாழ்வு, வளம் பெற விவசாய தொழில் சிறக்க சட்ட திட்டங்களை இயற்றி செயல்படுத்தும் மனதிடனை அவர்களுக்கு அளித்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4) இயற்கை சீற்றம், பொய்த்த பருவமழை, விவசாய இடுபொருட்களின் விலையேற்றம், உலகமயமான சந்தை பொருளாதாரம் போன்ற தீய சக்திகளின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் விவசாயிகள் உமது அருள் துணையோடு, நியாயமான தொழில் முறைகளை பின்பற்றி உழைக்கவும், அவர்கள் வாழ்வு ஏற்றம் காணவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5) இந்த பொங்கல் விழா வழிபாட்டில் கலந்து கொள்ளும் நாங்கள் அனைவரும் விவசாய மக்களையும், அவர்களின் உழைப்பையும் மதித்து, சுயநல உணர்வோடு உணவு பொருட்களை பதுக்காமல், நல்மனத்தோடு அவற்றை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளும் தாராள மனத்தை எமக்கு தந்தருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.