15 சனவரி 2020, புதன்

இன்றைய புனிதர்

தூய வனத்துச் சின்னப்பர் (ஜனவரி 15)

“உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால், நீங்கள் இம்மலையைப் பார்த்து ‘இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ’ என்று கூறினால் அது பெயர்ந்து போகும்”
- இயேசு

வாழ்க்கை வரலாறு

சின்னப்பர், எகிப்து நாட்டில் உள்ள தபேஸ் என்னும் இடத்தில் 299 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். அதனால் இவர் நல்ல கல்வியைப் பெற்றார். இவருக்குப் பதினைந்து வயது நடந்துகொண்டிருக்கும்போது இவருடைய பெற்றோர் இறந்துவிட இவர் அனாதையானார்.

இக்காலத்தில் கிறித்தவர்களுக்கு எதிரான வேத கலாபனை மிகக் கடுமையான நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது உரோமை மன்னனாக இருந்த செசார் தீதியுஸ் என்பவன் சின்னப்பரை சதித்திட்டம் தீட்டி கொல்ல நினைத்தான். இவ்வுண்மையை அறிந்த சின்னப்பர் அங்கிருந்து விலகி தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். கிறிஸ்துவின் மீது விசுவாசமில்லாத சின்னப்பரின் நெருங்கிய உறவுக்காரன் ஒருவனும், அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு மன்னனோடு இணைந்து அவரைக் கொல்ல நினைத்ததால், நீண்ட நாட்களுக்கு பாலைவனத்திலேயே இருந்து, இறைவனிடம் ஜெபிக்கத் தொடங்கினார். இந்தப் பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்து, மீண்டுமாக அவர் ஊருக்குள் வந்தபோது, காட்டில் கிடைத்த அமைதி அங்கு கிடைக்காததினால், மீண்டுமாக அவர் காட்டிற்குச் சென்று கடுந்தவம் செய்யத் தொடங்கினார்.

காட்டில் இருந்த நாட்களில் சின்னப்பர் ஒருநாளும் உணவுக்காகக் கவலைப்பட்டதே இல்லை. ஆண்டவர் பார்த்துக்கொள்வார், அவர் தனக்கு நிச்சயம் உணவு வழங்குவார் என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. ஆம், சின்னப்பர் இருந்த குகைக்கு முன்பாக பேரிச்சம்பழ மரம் ஒன்று வளர்ந்தது. அந்த மரத்திலிருந்து கிடைத்த பழங்களைக் கொண்டு சின்னப்பர் தன்னுடைய பசியாற்றிக்கொண்டார். அதிலிருந்து கிடைத்த இலை தழைகளைக் கொண்டு ஆடை நெய்து உடுத்திக்கொண்டார். மரத்திலிருந்து பழம் கிடைக்காத நேரங்களில் இறைவன் அவருக்கு ஒரு காகத்தின் வழியாக ரொட்டியைக் கொடுத்து அவருடைய பசியாற்றி வந்தார். சின்னப்பர் இருந்த குகைக்குப் பக்கத்தில் ஓர் ஓடை ஓடியது. அதன்மூலம் அவர் தன்னுடைய தாகத்தைத் தனித்துக்கொண்டார். இவ்வாறு இறைவனை முழுமைமையாய் நம்பிய சின்னப்பரை, இறைவன் சிறந்த விதமாய் பராமரித்து வந்தார்.

காட்டில் இருந்த 90 ஆண்டுகளில் சின்னப்பர் எப்போதும் ஜெபத்திலும் தவத்திலும் இறைவேண்டலிலும் நிலைத்து நின்றார். இதைக்கிடையில் சின்னப்பர் காட்டில் இருந்து ஜெபிப்பதைப் பற்றிக் கேள்விப்பட்ட தூய வனத்து அந்தோனியார் அவரைப் பார்ப்பதற்காக வந்தார். மூன்று நாட்களுக்கும் மேல் அவர் சின்னப்பரைத் தேடியும் அவரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது ஒரு ஓநாய் ஒன்று அந்த வழியாக வந்தது. அதனை அவர் துரத்திக்கொண்டு போகும்போது ஓடை ஒன்று இருந்தது. அந்த ஓடையைக் கடந்தபோது அங்கே சின்னப்பர் இருப்பதைக் கண்டு அவர் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார். சின்னப்பர் வனத்து அந்தோனியாரோடு இருந்த இருந்த நாட்களில் காகம் இரண்டு ரொட்டித் துண்டுகளைக் கொண்டு வந்து உதவியது. அதனை இரண்டு பேரும் வயிறார உட்கொண்டார்கள். அன்று இரவே சின்னப்பர் தன்னுடைய சாவு நெருங்கி வந்துவிட்டது என்பதை உணர்ந்தார். எனவே, அவர் வனத்து அந்தோனியாரிடம், “எனது சாவு நெருங்கி வந்துவிட்டதென நான் உணர்கின்றேன். எனவே, நீங்கள் நான் சாவதற்குள் தூய அத்தனாசியாரின் போர்வையை என்மேல் போர்த்தினால், நான் நிம்மதியாய் உயிர்துறப்பேன்” என்றார்.

சின்னப்பரின் வேண்டுகோளுக்கே இணங்க வனத்து அந்தோனியார் அத்தனாசியாரின் போர்வையை எடுத்து வந்து அவர்மீது போர்த்துவதற்காக விரைந்து சென்றார். அவர் போர்வையை எடுத்து திரும்பி வருவதற்குள் சின்னப்பர் இறந்துபோயிருந்தார். அவரை அடக்கம் செய்வதற்கு என்று கல்லறை தோண்டப்பட்டிருந்தது. அதிலே அவர் அடக்கம் செய்யப்பட்டார். சின்னப்பர் இறக்கும்போது அவருக்கு வயது 113.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய வனத்து சின்னப்பரின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இறைவன்மீது நம்பிக்கை

தூய வனத்து சின்னப்பரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு கணம் படித்துப் பார்க்கின்றபோது அவர் கடவுள்மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான் நமக்கு நினைவுக்கு வருகின்றது. ஆண்டவர் எனக்கு எல்லாம் தருவார் என்று உறுதியாக நம்பினார், அவருடைய நம்பிக்கைக்கு ஏற்ப ஆண்டவர் அவருக்கு அனைத்தையும் தந்து உதவினார். தூய வனத்து சின்னப்பரின் விழாவைக் கொண்டாடும் இன்று அவரைப் போன்று இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு பார்வையற்ற மனிதரைப் பார்த்து, “பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்பார். (லூக் 18:42). இயேசு சொன்னதுபோன்றே அவரும் நலம்பெறுவார். இங்கே, நம்பிக்கை எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. நாமும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இறைவனிடத்தில், நம்மிடத்தில் நம்பிக்கை கொண்டு வாழ்கின்றபோது நம்மால் நிறைய ஆசிரைப் பெற முடியும் என்பது உறுதி.

ஒரு சமயம் கடலில் போய்க்கொண்டிருந்த கப்பல் ஒன்று எதிர்பாராதவிதமாக மூழ்கத் தொடங்கியது. அத்தகைய சூழலில் உயிரைக் காப்பாற்ற பலரும் பல திசைகளில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலைப் படாமல் சிறுமி ஒருத்தி கப்பலின் மேல்தளத்தில் பந்து விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது ஒரு பெரியவர் அவளிடம், “கப்பல் உடைந்து கடலில் மூழ்கப் போகின்றது, நீ தப்பிக்க முயலவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவள் அவரிடம், “இந்தக் கப்பலின் மாலுமி என் அப்பாதான்; அவர் என்னை எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது” என்று பயமின்றி விளையாட்டைத் தொடர்ந்தாள். ‘நம்பிக்கையுடைவன் பதற்றமடையான்’ என்ற வார்த்தைகள் இங்கே எவ்வளவு பொருந்திப் போகின்றது என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

ஆகவே, தூய வனத்து சின்னப்பரின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இறைவனிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.