15 சனவரி 2020, புதன்

1 சாமுவேல் 3: 1-10, 19-20

பொதுக்காலம் முதல் வாரம் புதன்கிழமை

1 சாமுவேல் 3: 1-10, 19-20

சாமுவேலைத் தன் பணிக்கென அழைத்த ஆண்டவர்

நிகழ்வு

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தோன்றிய மிகப்பெரிய மறைப்பணியாளர் ஜான் ஹென்றி ஜோவேட். இவர் எப்படிக் கடவுளால் அழைக்கப்பட்டார் என்பதைச் சொல்லக்கூடிய நிகழ்வு இது.

ஜோவேட்டை அவருடைய தந்தை ஒரு பெரிய வழக்குரைஞராக உருவாக்க நினைத்தார். அதனால் அவர் ஜோவேட் பள்ளிக்கல்வியை முடித்ததும், சட்டம் படிக்க சட்டக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். ஜோவேட்டும் தன்னுடைய தந்தையின் விருப்பத்திற்கு இணங்கி, சட்டம் பயில, சட்டக் கல்லூரிக்குச் சென்றார். போகிற வழியில் ஜோவேட், தனக்கு ஞாயிறு மறைக்கல்வி சொல்லிக்கொடுத்த மறைக்கல்வி ஆசிரியரைச் சந்தித்தார். அவர் ஜோவேட்டிடம், “தம்பி! எங்கே சென்றுகொண்டிருக்கின்றாய்?” என்று கேட்டார். அதற்கு ஜோவேட், “நான் சட்டம் படிப்பதற்காகச் சட்டகல்லூரி சென்றுகொண்டிருக்கின்றேன்?” என்றார். “என்னது...! சட்டம் படிக்கச் சொல்கின்றாயா...? எதிர்காலத்தில் நீ ஒரு பெரிய மறைப்பணியாளராக ஆவாய் என்றெல்லவா நான் விரும்பினேன்... அதற்காக நான் ஒவ்வொருநாளும் இறைவனிடம் வேண்டினேனே..! நீயோ இப்படிச் சட்டம் படித்து வழக்குரைஞராக ஆகப் போவதாகச் சொல்கிறாயே....!” என்று வருத்தத்தோடு சொல்லிவிட்டு, அங்கிருந்து கடந்து சென்றுவிட்டார்.

அந்த மறைக்கல்வி ஆசிரியர் சொன்ன சொற்கள் ஜோவேட்டின் உள்ளத்தில் குழப்பத்தை ஏற்படுத்தின. அதனால் அவர் சட்டக் கல்லூரிக்குச் செல்லாமல், வீட்டுக்குத் திரும்பி வந்து, அதைக் குறித்து யோசிக்கத் தொடங்கினார். அன்று இரவு அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் இயேசு தோன்றி, “என் அன்பு மகனே ஜோவேட்! நீ என்னுடைய பணியைச் செய்யத் தயாரா?” என்று கேட்டுவிட்டு மறைந்துபோனார். தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த ஜோவேட், ‘ஆண்டவர் தன்னுடைய பணியைச் செய்ய என்னை அழைக்கிறார். இதற்கு மேலும் நான் கால தாமதம் செய்யக்கூடாது’ என்று முடிவுசெய்துகொண்டு, தன் தந்தையின் அனுமதி பெற்று, உரிய கல்வி கற்று, ஆண்டவருடைய பணியை செய்யத் தொடங்கினார்.

ஜோவேட் மறைப்பணி செய்த மொத்த ஆண்டுகள் 35. அந்த 35 ஆண்டுகளிலும் ஆண்டவர் அவரோடு இருந்து, அவரை வழிநடத்தினார்.

ஆண்டவராகிய கடவுள் ஜோவேட்டைத் தன்னுடைய பணிக்காக அழைத்தது போன்று, நம் ஒவ்வொருவரையும் அவருடைய பணியைச் செய்ய அழைக்கின்றார். நாம் அவருடைய பணியைச் செய்தத் தயாரா என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இன்றைய முதல் வாசகத்தில் சாமுவேலின் அழைப்பைக் குறித்து வாசிக்கின்றோம். சாமுவேலின் அழைப்பு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்த காலமது

சாமுவேல் முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள், குரு எலியின் மேற்பார்வையில் ஊழியம் செய்துவந்த சாமுவேலின் அழைப்பைக் குறித்து வாசிக்கின்றோம். சாமுவேலின் அழைப்பைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது முன், சாமுவேல் அழைக்கப்பட்ட காலம் எத்தகையது எனத் தெரிந்துகொள்வது நல்லது.

சாமுவேல் அழைக்கப்பட்ட காலத்தில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது; காட்சியும் அவ்வளவாக இல்லை. இதற்கு முக்கியமான காரணம் ஆண்டவரின் திரு இல்லத்தில் ஊழியம் செய்து வந்த குருக்கள் தூய்மையில்லாமலும் மக்கள் கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமலும் இருந்தார்கள். இதனாலேயே அவர்களுக்கு ஆண்டவரின் வார்த்தையும் அவருடைய காட்சியும் கிடைக்கவில்லை (திபா 74: 9). இன்னும் சொல்லப்போனால், ஆண்டவர் இப்படி எதுவும் பேசாமல் இருந்தது, அவர் மக்களுக்குக் கொடுத்த தண்டனை என்றுதான் சொல்லவேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கடவுள் சாமுவேலை அழைக்கின்றார்.

சாமுவேலை அழைத்த ஆண்டவர்

கடவுள் சாமுவேலை நான்கு முறை அழைக்கின்றார்; ஆனால், நான்காம் முறைதான் தன்னை அழைப்பது கடவுள் என சாமுவேல் உணர்ந்துகொள்கின்றார். கடவுள் சாமுவேலை அழைக்கும்பொழுது அவருக்கு வயது பன்னிரண்டு. கடவுள் சாமுவேலை அழைத்ததும் அவர், “ஆண்டவரே பேசும். உம் அடியான் கேட்கின்றேன்” என்கின்றார். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருடைய வார்த்தைகளைக் கேட்காமல், அதன்படி நடவாமல் இருந்தபொழுது, சாமுவேல் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்தார். அதனால் ஆண்டவர் அவரோடு இருந்து, ஓர் இறைவாக்கினராக அவர் பேசிய வார்த்தைகளைத் தரையில் விழாமல் செய்தார்.

கடவுள் சாமுவேலிடம் பேசியபொழுது, சாமுவேல் அதற்குக் கீழ்ப்படிந்து நடந்ததால் கடவுள் அவரோடு இருந்தது போன்று, நாமும் கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், கடவுள் நம்மோடு இருப்பார் என்பது உறுதி. எனவே, நாம் கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவர் பணிசெய்யத் தயாராவோம்; அவருடைய வழியில் நடப்போம்.

சிந்தனை

‘இயேசு அவர்களை அழைத்தார்... அவர்கள் அவர் பின் சென்றார்கள்’ (மாற் 1:20) என்கின்றது இறைவார்த்தை. ஆகையால், நாம் இறைவன் நம்மை அழைக்கின்றபொழுது, அவருடைய அழைப்பிற்குச் செவிமடுத்து, அவர்பின் செல்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.