15 சனவரி 2020, புதன்

மாற்கு 1: 29-39

பொதுக்காலம் முதல் வாரம் புதன்கிழமை

மாற்கு 1: 29-39

“பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் நலப்படுத்தினார்”

நிகழ்வு

உலகமெங்கிலும் கிளைகளைக் கொண்ட மிகவும் புகழ்பெற்ற ஒரு மருந்தகம், மயோ மருந்தகம் (Mayo Clinic) ஆகும். இதனுடைய நிறுவனர் அமெரிக்காவைச் சார்ந்த மருத்துவர். வில் மயோ என்பவர் ஆவார். இவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வு இது.

ஒருமுறை மருத்துவர் வில் மயோ இருந்த பகுதியில் புதுவகையான தொற்றுநோய் பரவியது. இந்த நோயால் தாக்கப்பட்ட பலர் மயோவின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட பலரும் செத்து மடிந்தார்கள். இதனால் இவர் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார். இந்த நேரத்தில் மயோவின் மருத்துவமனைக்குக் குருவானவர் ஒருவர் வந்தார். அவர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவர்மீதும் கைகளை வைத்து உருக்கமாக வேண்டிவிட்டுச் சென்றார். ஆச்சரியம் என்னவென்றால், குருவானவர் கைகளை வைத்து, வேண்டிய அத்தனைப் பேரும் நலமடைந்தார்கள்.

பின்னாளில் இது குறித்துப் பேசிய மருத்துவர் வில் மயோ, “எப்படிப்பட்ட நோயையும் என்னால் நலப்படுத்த முடியும் என்று நம்பியிருந்தேன். இந்த நிகழ்விற்குப் பிறகு கடவுளுக்கும் அவருடைய ஆற்றலுக்கும் முன்பாக நான் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தேன்” என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் வருகின்ற கடவுளின் அடியவராம் குருவானவரின் மூலம் பலர் நலமடைந்ததுபோல், நற்செய்தியில் இயேசுவால் பலர் நலமடைவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சீமோனின் மாமியாரை நலப்படுத்திய இயேசு

தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வருகின்ற இயேசு சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குச் செல்கின்றார். அங்கு காய்ச்சலாய்க் கிடந்த சீமோனின் மாமியாரின் கையைப் பிடித்துத் தூக்கி, நலப்படுத்துகின்றார்.

கப்பர்நாகும் வருகின்றபொழுதெல்லாம் சீமோனின் வீட்டில் வந்து தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த இயேசு (மாற்கு 2:1, 3:20, 9:33, 10:10), இன்றைய நற்செய்தியிலும் சீமோனின் வீட்டிற்கு வருகின்றார். அவர் அங்கு வருகின்றபொழுது சீமோனின் மாமியார் காய்ச்சலாய்க் கிடப்பதைக் காண்கின்றார். உடனே அவர் அவருடைய கையைப் பிடித்துத் தூக்கி அவரை நலப்படுத்துகின்றார். அவரும் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்குகின்றார்.

இங்கு நாம் இரண்டு செய்திகளை நம்முடைய கருத்தில் கொள்வது நல்லது. ஒன்று, இயேசு சீமோனின் மாமியாரைத் தொட்டதால் அல்லது கையைப் பிடித்துப் தூக்கியதால் நலம்பெற்றது. தூய ஆவியாரின் வல்லமையைப் பெற்றிருந்த இயேசு (திப 10:38), தொட்டதெல்லாம் துலங்கியது. அந்த வகையால் இயேசு சீமோன் மாமியாரைத் தொட்டதால் அல்லது கையைப்பிடித்துத் தூக்கியதால் அவர் நலம்பெற்றதில் வியப்பேதும் இல்லை. இரண்டு. இயேசுவிடமிருந்து நலம்பெற்ற சீமோனின் மாமியார் அவர்களுக்குப் பணிவிடை செய்தது. சீமோனின் மாமியார் இயேசுவிடமிருந்து நலம்பெற்றதும், அதை அப்படியே மறந்துவிடவில்லை. இன்றைக்குப் பலர் கடவுளிடமிருந்து ஏராளமான ஆசியைப் பெற்றுவிட்டு, அதனை அப்படியே மறந்துபோய்விடுகின்றவர்களாக இருக்கின்றார்கள். சீமோனின் மாமியார் இப்படிப்பட்ட மனிதர்களப் போன்று இல்லாமல், பெற்றுக்கொண்ட நன்மைக்கு நன்றியுள்ளவராக, இயேசுவுக்கும் அவரோடு இருந்தவர்களுக்கும் பணிவிடை செய்கின்றார்.

பல்வேறு பிணிகளால் வருந்தியவர்களை நலப்படுத்திய இயேசு

இயேசு சீமோனின் மாமியாரை நலப்படுத்திய பின்பு, கதிரவன் மறையும் நேரத்தில் வீட்டு முன்பு கூடியிருந்த பல்வேறு பிணிகளால் வருந்திய பலரைக் குணப்படுத்துகின்றார்; பேய்களை ஓட்டுகின்றார். இயேசு சீமோன் மாமியாரைக் நலப்படுத்தியது ஓர் ஓய்வுநாளாகவே இருந்திருக்கவேண்டும். ஏனென்றால், சீமோனின் வீட்டிற்கு முன்பாகக் கதிரவன் மறையும் நேரத்தில் கூடியிருந்தவர்கள், கதிரவன் மறைவதற்கு முன்பாக இயேசுவிடமிருந்து நலம்பெற்றால் அது பெரிய குற்றமாகிவிடும்... கதிரவன் மறைந்த பின் ஓய்வுநாள் முடிந்துவிடும், அதன்பிறகு நலம்பெற்றால் சிக்கலில்லை... என்பதாலேயே அந்த நேரத்தில் கூடியிருக்கின்றார்கள். இயேசு அவர்கள் அனைவருக்கும் நலமளிக்கின்றார். இவ்வாறு அவர், இறைவாக்கினர் எசாயா உரைப்பது போன்று, எல்லாருடைய பிணிகளையும் தம் மேல் தாங்கிக்கொள்கின்றார் (எசா 53:4).

இறைவனிடம் வேண்டிய இயேசு

இயேசு, சீமோனின் மாமியாரை நலப்படுத்தியதிலிருந்து பல்வேறு பிணிகளால் வருந்தியவர்களை நலப்படுத்தியது வரைக்கும் அவருக்கு ஒன்று உந்து சக்தியாக இருந்தது. அதுதான் அவர்செய்து வந்த இறைவேண்டல். இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார் என்று வாசிக்கின்றோம். ஆம், இயேசுவின் செய்த இறைவேண்டல் அவருடைய பணி வாழ்விற்கு உந்து சக்தியாக இருந்தது.

பலவேறு பணிகளைச் செய்கின்ற நாம் இறைவனிடம் வேண்டுவதற்கு நேரம் ஒதுகுகுகின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

‘இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்’ (1 தெச 5: 17) என்பார் புனித பவுல். ஆகவே, நாம் பல்வேறு பணிகளைச் செய்தாலும், நம்முடைய வாழ்வின் ஆற்றலாக இருக்கும் இறைவேண்டலை இயேசுவைப் போன்று மேற்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.