சனிக்கிழமை
பொதுக்காலம் இரண்டாம் வாரம்
சனிக்கிழமை
மாற்கு 3:20-21
‘இறைவாக்கினர்களுக்கு ஏச்சுகளும் பேச்சுகளும் இலவசம்’
நிகழ்வு
ஓர் இளம்பெண், திருமணம் ஆகாமலேயே ஒரு குழந்தைக்குத் தாய் ஆனாள். இதனால் அவளுடைய ஊரைச் சேர்ந்த எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர். “உன்னை இந்த நிலைக்கு தள்ளியது யார்?, உன்னுடைய குழந்தையின் தந்தை யார்?” என்று கேட்டு அந்தப் பெண்ணை ஊர்மக்கள் மிகவும் நச்சரித்தனர்.
அந்தப் பெண் பதில் சொல்லத் தயங்கியதால் அவளை அடித்து, உடைத்து உண்மையைச் சொல் என்று மிரட்டினார்கள். அடி உதை தாங்கமுடியாத அந்தப்பெண், “உண்மையைச் சொல்கிறேன், என்னை விட்டுவிடுங்கள்... எனது இந்த நிலைக்குக் காரணம் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் துறவிதான்” என்றாள். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள் ஆத்திரத்தோடு அந்தப்பெண்ணையும் அவளது கைக்குழந்தையையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு வெளியே இருந்த துறவியின் குடிசைக்குச் சென்றனர்.
அவர்கள் அங்கு சென்றநேரம் துறவி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அதைப் பார்த்து கடுங்கோபம் கொண்ட ஊர்மக்கள் அவரைத் திட்டித் தீர்த்தனர்; அவரை அடித்து உதைத்து அவருடைய குடிசையையும் கீழே இழுத்துப்போட்டனர். “ஒன்றும் அறியாத அப்பாவிப் பெண்ணை ஏமாற்றி, இப்படிக் கர்ப்பிணியாக்கிக் குழந்தை கொடுத்துவிட்டு, நல்லவன் போட்டு நாடகமா போடுகிறாய்?” என்று ஆவேசப்பட்டனர். இன்னும் சிலரோ, “அந்தப் பெண்ணைக் கெடுத்ததன் மூலம் நீ பாவம் செய்துவிட்டாய். எனவே அந்தப் பெண்ணையும் குழந்தையையும் நீதான் பராமரிக்க வேண்டும்” என்றனர். இவ்வளவு நடந்தும் துறவி எதுவும் பேசாமல் அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்தார்.
பின்னர் ஊர்மக்கள் அந்தப்பெண்ணையும் அவளது குழந்தையையும் துறவியிடம் விட்டுவிட்டுச் சென்றனர். துறவி அந்தப் பெண்ணையும் அவளது குழந்தையையும் நன்றாகக் கவனித்துக்கொண்டார்; அவர்கள்மீது அன்பைப் பொழிந்தார். துறவியின் இந்தச் செயலால் அவரது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டது. அவரிடம் இருந்த சீடர்கள் ஒவ்வொருவருமாக அவரைவிட்டு விலகினார்கள். அப்போதும் அந்தத் துறவி ஒரே மனநிலையில்தான் இருந்தார்.
நாட்கள் நகர்ந்தன, அப்போதுகூட துறவியின் அன்பான செயல்கள் மாறவில்லை. இதனால் அந்தப் பெண்ணின் மனம் கலங்கியது. ‘இப்படிப்பட்ட ஒரு துறவிமீது அபாண்டமாகப் பழிசுமத்திவிட்டோமே” என்று அவளது உள்ளம் நெருஞ்சிமுள்ளாய் குத்தியது. எனவே அவள் மீண்டும் ஊர்மக்களிடம் சென்று, “நான் தவறு செய்துவிட்டேன்... என்னைக் கர்ப்பிணியாக்கியது எனது பக்கத்துக்கு வீட்டுக்காரன்தான். அவனது மிரட்டலுக்குப் பயந்துதான் நான் பாவமறியாத துறவிமீது பழி சுமத்தினேன். உண்மையில் என் குழந்தையின் தந்தை அந்தத் துறவி அல்ல” என்றாள்.
இதைக் கேட்டு ஊர்மக்கள் மிகவும் வருந்தினார்கள். ‘துறவிமீது இப்படி அபாண்டமாகப் பழி சுமத்தி, அவரைக் கடுமையாகத் துன்புறுத்திவிட்டோமே’ என்று வருந்தினர். அதன்பிறகு ஊர்மக்கள் அனைவரும் துறவியிடம் சென்று, உண்மையைத் தெரிவித்து மன்னிப்புக் கேட்டனர். துறவியோ அவர்களிடம், “ஓர் இறையடியாருக்கு இதெல்லாம் வாழ்வில் சகஜம்தான்... அந்த இளம்பெண் என்மீது அபாண்டமாகப் பழி சுமத்தியபோது, நான் பொறுமையாக இருக்கக்காரணம், என்றைக்காவது ஒருநாள் உண்மை வெளியேவரும் என்பதால்தால். இப்போது உண்மை வெளியே வந்துவிட்டது. என்மீது விழுந்திருந்த பழியும் நீங்கி விட்டது... இறைவனுக்கு நன்றி” என்று சொல்லி அவர்களை மன்னித்து அனுப்பினார்.
இறைப்பணி செய்கின்ற எல்லாருக்கும் ஏச்சுகளும் பேச்சுகளும் வரத்த்தான் செய்யும். அவற்றை நாம் பொறுமையோடு தாங்கிக்கொண்டு, தொடர்ந்து இறைப்பணி செய்வதே சாலச் சிறந்தது என்ற உண்மையை உரக்கச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
இயேசு மதிமயங்கிவிட்டார் எனப் பேசிய மக்கள்
ஆண்டவராகிய இயேசு கண் துஞ்சாமல், சரியாகச் சாப்பிடாமல் இறைப்பணியையும் மக்கள் பணியையும் ஒருசேரச் செய்துவந்தார். ஆனால், மக்களோ “இவர் மதிமயங்கிவிட்டார்” என்று பேசத் தொடங்கினார்கள். மக்களோடு மக்களாக, மக்களுக்காக இருந்த இயேசுவையே மக்கள் இப்படிப் பேசினார்கள் என்பதை நினைத்துப் பார்க்கின்றபோது நமக்கே அதிர்ச்சியாக இருக்கின்றது. இயேசுவுக்கு மட்டுமல்ல, இறைப்பணியை, மக்கள்பணியைச் செய்யக்கூடிய ஒவ்வொருவருக்கும் இதுதான் நடக்கும். பவுலடியாரையும்கூட பெஸ்து ‘பித்துப் பிடித்தவன்’ என்றுதான் கூறினான் (திப 26:24-25) என்பதை நம்மை இங்கே கருத்தில் கொள்ளவேண்டும்.
‘மக்கள் தன்னை மயங்கிவிட்டார்’ என்று பேசிக்கொண்டதற்காக இயேசுவோ அல்லது பவுலோ தங்களுடைய பணியிலிருந்து விலகிக்கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து தங்களுடைய பணியைச் செய்துதான் வந்தார்கள். ஆகையால், இறைப்பணி/மக்கள்பணி செய்யக்கூடிய ஒவ்வொருவரும் தங்கள்மீது விழும் ஏச்சுபேச்சுகளைக் கண்டு கவலைப்படாமல் தொடர்ந்து இலக்கை நோக்கி செல்வதே சிறப்பு.
சிந்தனை
இறைவழியில் நடக்கின்றபோது, மக்களுடைய ஏச்சு பேச்சுகளை நிச்சயம் நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அப்போது அவற்றைக் கண்டு மனந்தளராமல், தொடர்ந்து நம்முடைய இலக்கை நோக்கிப் பயணிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.