ஜனவரி 26
ஜனவரி 26
எபிரேயர் 9: 2-3, 11-14
தன் இரத்தத்தைப் பலியாகச் செலுத்தி, நமக்கு மீட்பு கிடைக்கச் செய்த இயேசு
நிகழ்வு
மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, கோடிக்கணக்கில் வசூலை ஈட்டித்தந்த ஒரு திரைப்படம்தான் பென்கர் என்பதாகும். இந்த திரைப்படத்தின் கதநாகயனாக வரும் பென்கர், இயேசுவின் சமகாலத்த்தில் வாழ்ந்துவந்த ஒரு மிகச் சிறந்த போர்வீரர். இயேசுவை நேரில் பார்த்திராவிட்டாலும், இயேசுவைக் குறித்தும், அவர் ஆற்றி வந்துவந்த அருமடையாளங்களைக் குறித்தும் அவர் நிறையவே கேள்விப்பட்டு வந்தார்.
இந்நிலையில் பென்கரின் தாயார் திடிரென தொழுநோயால் தாக்கப்பட, அவர் அக்கால வழக்கப்படி, ஊருக்கு வெளியே கொண்டுபோய் வைக்கப்பட்டார். தன் தாயார் தொழுநோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார் எனக் கேள்விப்படும் பென்கர் அவரை எப்படியாவது இயேசுவிடத்தில் கூட்டிச்சென்று, குணமாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையோடு எருசலேம் நோக்கி குதிரையில் வேகமாக வருகின்றார். ஆனால் அவர் வருகின்ற நேரத்தில் இயேசு பிலாத்துக்கு முன்பாக ஒரு கொலைக் குற்றவாளியைப் போல் நிறுத்தி வைக்கப்பட்டு, சிலுவைச் சாவுக்கு உட்படுத்தப்படுகின்றார்.
இதை அறியும் பென்கர் மிகவும் பதறுகின்றார். இருந்தாலும் இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கு முன்பாக, தன் தாயை அவரிடத்தில் எப்படியும் கொண்டுபோய் சேர்த்துவிட்டால், அவர் குணப்படுத்திவிடுவார் என்ற நம்பிக்கையோடு தாயைக் கூட்டிக்கொண்டு கல்வாரி மலையில் ஏறிச் செல்கின்றார். ஆனால், அதற்குள் படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றுவிடுகின்றார்கள். இதனால் மிகுந்த ஏமாற்றம் அடையும் பென்கர் தாயை கைத்தாங்கலாகக் கூட்டிக்கொண்டு மேலே நடக்கின்றார். ஏற்கனவே தொழுநோயினால் உடலில் வலுவில்லாமல் இருந்த பென்கரின் தாயார், மேலே நடக்கத் திராணியில்லாமல் ஒருகட்டத்தில் அப்படியே மயக்கம் போட்டுக் கீழே விழுகிறார்.
உடனே பென்கர் அவருக்கு மயக்கம் தெளிவித்து, அவரை இயேசுவின் சிலுவையின் அடியில் கொண்டுபோய் நிறுத்துவதற்காக அந்த மலையில் இருந்த ஒரு சிறிய நீரூற்றிலிருந்து அவருக்குக் கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொடுக்கின்றார். பென்கர் கொடுத்த அத்தண்ணீரை வாங்கிக் குடிக்கும் அவருடைய தாயார், அந்தத் தண்ணீரைக் குடித்த மறுகணம், அவருடைய தொழுநோய் நீங்கப் பெற்று நலமடைகின்றார்.
பென்கருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. சாதாரண தண்ணீர் எப்படி தன்னுடைய தாயின் தொழுநோயைப் போக்கியது என்று அவர் யோசித்துக்கொண்டே கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, அங்கே சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உடலிலிருந்து வழிந்துகொண்டிருந்த இரத்தம், நீரூற்றில் கலந்துகொண்டிருப்பதைக் கண்டார். அப்போதுதான் அவர் இயேசுவின் இரத்தம்தான் தன்னுடைய தாய்க்கு நோயிலிருந்து விடுதலை அளித்திருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்தார்.
ஆம், இயேசுவின் இரத்தத்திற்கு அவ்வளவு வல்லமை இருக்கின்றது. ஏனென்றால், அது சாதாரண இரத்தம் கிடையாது, நமக்கு மீட்பு கிடைப்பதற்காகச் சிந்தப்பட்ட இரத்தம்.
மீட்பளிக்கும் இயேசுவின் இரத்தம்
கடந்த ஒருசில நாட்களாகவே, எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்தே முதல் வாசகத்தைப் படிக்கக் கேட்கின்றோம். இன்றைய நாளிலும் முதல் வாசகத்தை அங்கிருந்தே படிக்கின்றோம். முதல் வாசகத்தில் அத்திருமுகத்தின் ஆசிரியர் கூறுகின்றார், “தலைமைக் குருவாகிய இயேசு பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல. அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒருமுறை தூயகத்துக்குள் சென்று, எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்தார்” என்கின்றார். இதை நாம் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் குருக்கள் ஆண்டவருக்கு பலி ஒப்புக்கொடுத்தார்கள். அது வெள்ளாட்டுக் கிடாய்களைக் கொண்டும், கன்றுக்குட்டிகளைக் கொண்டுமாக இருந்தது. இத்தகைய பலி முதலில் அவர்களுடைய பாவங்களைப் போக்கக்கூடியதாகவும், பிறகு மக்களுடைய பாவங்களைப் போக்கக்கூடியதாகும் ஒரு தூய்மைச் சடங்கைப் போன்று இருந்தது. ஆனால், ஆண்டவர் இயேசு ஒப்புக்கொடுத்த பலி அப்படி இல்லை. அவர் தன்னுடைய இரத்தத்தையே பலியாகச் சிந்தி, நமக்கு மீட்புக் கிடைக்கச் செய்தார். இதைத்தான் திருமுழுக்கு யோவான் இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சொல்லும்போது, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி, ஆட்டுக்குட்டியாம் இவரே உலகத்தின் பாவங்களைப் போக்குகின்றவர் (யோவா 1:29) என்கின்றார்.
இங்கே இன்னொரு செய்தியையும் புரிந்துகொள்ளவேண்டும், அது என்னவெனில் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாவப் பரிகாரப் பலிசெலுத்தினார்கள். ஆனால் இயேசுவோ தன்னுடைய இரத்தத்தை ஒரேமுறை சிந்தி, என்றுமுள்ள பலியாக மாற்றுகின்றார். இதுதான் இயேசுவினுடைய பலியின் சிறப்பாகும்.
சிந்தனை
“ஆடுகள் வாழ்வு பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு, இந்த மண்ணுலகிற்கு வந்தேன்” என்று சொல்லும் இயேசு, கல்வாரி மலையில் தன்னுடைய இரத்தத்தையே சிந்தி, நமக்கு மீட்பு வழங்கினார். எனவே, இத்தகைய ஒரு பேரன்பின் அடையாளமாக இருக்கும் இயேசுவின் அன்பினை உணர்ந்து, அவர் வழியில் நடப்பதே சிறந்தது.
ஆகவே, இயேசுவின் பேரன்பை உணர்ந்து, அவருக்கேற்ற மக்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.