26 சனவரி 2019, சனி

மறையுரைச் சிந்தனை

புனிதர்கள் திமொத்தேயு, தீத்து - மறையுரைச் சிந்தனை

 

இன்று திருச்சபையானது ஆயர்களான தூய திமெத்தேயு, தீத்து ஆகியோரின் விழாவைக் கொண்டாடுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் இருவருமே பவுலடியாரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். அவருடைய தூதுரைப் பயணங்களில் உடனிருந்தவர்கள். அப்படிப்பட்டவர்களின் விழாநாளில் அவர்கள் நமக்கு எத்தகைய முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

முதலாவதாக திமெத்தேயுவை குறித்துச் சிந்தித்துப் பார்த்தும்போது இவர் பவுலடியாரால் “வெளிவேடமற்ற நம்பிக்கைக்குச் சொந்தக்காரர்” என்று அழைக்கப்படுகின்றார் (2 திமொ1:5). லிஸ்திராவைக் சேர்ந்த இவர் புறவினத்தைச் சார்ந்த தந்தைக்கும், யூத இனத்தைச் சார்ந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தவர்.

இவர் பவுலடியாரின் இரண்டாம் தூதுரைப் பயணத்தில் உடன் சென்றவர்; அவரோடு நற்செய்தியை அறிவித்தவர். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்று சொன்னால் தெசலோனிக்கு நகரிலே பெரியப் பெரிய கலகம் ஏற்பட்டபோது, இவர்தான் அங்கே சென்று மக்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார். அதன்பிறகு கி.பி. 64 ஆம் ஆண்டு எபேசு நகரிலே ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அங்கே திருச்சபைக்கு எதிராக நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்துப் போராடினார்.. அதனால் எதிரிகள் இவரை தெருவில் பிடித்து இழுத்திச் சென்று கல்லால் எறிந்து கொன்று போட்டார்கள்.

தூய பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் கூறுவார், “கடவுளின் வல்லமைக்கு ஏற்ப, நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் பங்குகொள்” என்று. திமொத்தேயு நற்செய்திக்காக, ஆண்டவர் இயேசுவுக்காக துன்பத்தில் பங்குகொண்டவர். தன்னுடைய வாழ்வையே இயேசுவுக்காக பலியாக்கிவர்..

அடுத்ததாக தூய தீத்து. இவரைக் குறித்து தூய பவுலடியார் சொல்கிறபோது சொல்வார், “நம்பிக்கையின் அடிப்படையில் தீத்து என் உண்மைப் பிள்ளை” என்று (தீத்து 1:1). தீத்து நற்செய்தி அறிவிப்பாளராக மட்டும் இருந்ததோடு மட்டும் அல்லாமல், பவுலடியாரின் உடன் உழைப்பாளராகவும் இருந்தார். அவரோடு பயணித்தார். அவருக்கு பக்கபலமாக இருந்தார்.

பவுலடியார் கொரிந்து நகர மக்களுக்கு கடிதம் எழுதியபோது அது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக பவுலடியாரைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அத்தகைய நேரத்தில் தீத்துதான் அங்கேசென்று  மக்களிடம்  அமைதியை ஏற்படுத்தினார்.

மேலும் புதிதாக கிறிஸ்தவ மறையைத் தழுவும் யூதரல்லாத புறவினத்தார்கள் விருத்தசேதனம் செய்யவேண்டும் என்ற ஒரு சிக்கலைச் சந்தித்தார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க எருசலேம் நகரில் பொதுச்சங்கம் கூட்டப்பட்டது. இச்சங்கத்திற்கு பவுலடியார் சென்றார். கூடவே தீத்துவும் சென்றார் என்று விவிலியத்தில் நாம் படிக்கின்றோம். இப்படியாக தீத்து பவுலடியாரோடு எப்போதும் உடனிருந்தார்.

பவுலடியாரோடு ஒருசில ஆண்டுங்கள் இருந்து பணியாற்றிய பிறகு இவர் கிரிட் என்ற நகருக்குச் சென்று அங்கே நற்செய்தியை அறிவித்தார். தன்னுடைய 94 வயதில்  இறையடி சேர்ந்தார்.

ஆகவே தூய திமொத்தேயு, தீத்து ஆகிய இவர்கள் இருவரின் விழாவைக் கொண்டாடும் நாம் அவர்களிடம் இருந்த நற்செய்தி அறிவிக்கின்ற தாகத்தை நமதாக்கிகொண்டு வாழவேண்டும். அதோடு மட்டுமல்லாமல் எந்த ஒரு பணியையும் மிகச் துணிச்சலோடு செய்யவேண்டும். 2 திமொத்தேயு 1:7 ல் வாசிக்கின்றோம், “கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும், அன்பும், கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தினை வழங்கியுள்ளார்” என்று. எனவே நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வல்லமையுள்ள உள்ளத்தினை வைத்து, வல்லமையான காரியங்களைச் செய்வோம்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவது போன்று உங்களின் நான் அனுப்புகிறேன்” என்று. ஆகவே நற்செய்தி அறிவிக்கும் பணியானது மிகவும் சவால் நிறைந்தது என்று ஆண்டவர் இயேசுவே கூறுகிறார். அத்தகைய சூழலில் நாம் இறைவனின் பாதுகாப்பை உணர்ந்து, துணிவோடு பணிசெய்யவேண்டும் என்பதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கக்கூடிய காரியமாக இருக்கிறது. ஆதலால் நற்செய்தி அறிவிப்பில் இருக்கின்ற சவால்களைக் கண்டு கலங்காமல், துணிவோடு நற்செய்தியை அறிவிப்போம்.

அரசன் ஒருவன் இருந்தான். அவனைச் சந்தித்த சோசியன் ஒருவன் “உங்களுக்கு கண்டம் இருக்கிறது” என்று சொல்லிவிட்டுச் சென்றான். இதைக்கேட்டுப் பயந்த அரசன் அரண்மனையைச் சுற்றி பெரிய பெரிய கோபுரங்கள் எழுப்பினான். அதனைச் சுற்றி ஆயிரம் படைவீரர்களை நிறுத்தி வைத்தான். வெளியே என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக மட்டும் ஒரு ஜன்னலை வடிவமைத்திருந்தான்.

ஒருநாள் அரசன் இப்படி ஜன்னல் பக்கமாக அமர்ந்துகொண்டு வெளியே என்ன நடக்கிறது என்று பார்த்துகொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஞானி அரசனிடம், “எதற்காக இப்படி உள்ளே இருந்துகொண்டு பயந்து, பயந்து சாகின்றாய்” என்று கேட்டார். அதற்கு அரசன், “ஐயா! நான் வெளியே வந்தால் சாவு நிச்சயம் என்று சோசியர் ஒருவர் சொல்லிவிட்டுப் போனார். அதனால்தான் இப்படி இருக்கின்றேன்” என்றார். அதைக் கேட்ட ஞானி, “இப்போது மட்டும் எப்படி இருக்கிறாய்? இப்போதும் ஒவ்வொருநாளும் செத்துக்கொண்டுதானே இருக்கின்றாய். என்ன ஒரு வித்தியாசம், கல்லறையில் ஜன்னல் இருக்காது. இங்கே ஜன்னல் இருக்கின்றது” என்று ஒருபோடு போட்டார்.

சாவு எல்லோருக்கும் உண்டு, அதை நினைத்து ஒவ்வொருநாளும் செத்துக்கொண்டிருப்பது முறையாகுமா? என்பதை இக்கதையானது நமக்குத் தெளிவாக விளக்குகின்றது.

ஆகவே திமொத்தேயு, தீத்து ஆகியோரின் விழாவைக் கொண்டாடும் நாம் அவர்களைப் போன்று இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழுவோம். எத்தகைய சவால்கள் வந்தாலும் அதனைத் துணிவுடன் எதிர்கொள்வோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.

 

  • Maria Antony, Palayamkottai.