26 சனவரி 2019, சனி

மறையுரைச் சிந்தனை

















புனிதர்கள் திமொத்தேயு, தீத்து - மறையுரைச் சிந்தனை

 

இனி எல்லாம் சுகமே!
என் பிள்ளை

 

 

நாளை திமோத்தேயு, தீத்து திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இவர்கள் ஆயர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டபோது, அல்லது பவுல் இவர்களை முதலில் தெரிந்துகொள்ளும்போது இவர்களுக்கு 18 முதல் 23 வயதுதான் இருந்திருக்க வேண்டும். பவுல் இருவரையும், 'என் பிள்ளை' என்றே அழைக்கிறார்.

இந்த இரண்டு பெயர்களையும் நினைத்தவுடன் எனக்கு இளவல்களின் உருவங்கள்தாம் கண்முன் வருகின்றது.

தொடக்கத்திருஅவையில் பவுல் நியமித்த முதல் ஆயர்கள் இவர்கள். இவர்களுக்கு பவுல் எழுதிய, அல்லது பவுல் எழுதியதாக சொல்லப்படுகின்ற திருமுகங்கள், மேய்ப்புப்பணி திருமுகங்கள் என அழைக்கப்படுகின்றன.

1.    திமொத்தேயு இருவரில் இவர்தான் பவுலுக்கு நெருங்கியவராக இருந்திருக்க வேண்டும். இரண்டு கடிதங்களில் மூன்று முறை பவுல் இவரை, 'பிள்ளையே,' 'மகனே' என அழைக்கிறார். மேலும், இவரின் குடும்பம் - பாட்டி லோயி மற்றும் அம்மா யூனிக்கி - பவுலுக்கு தெரிந்திருக்கிறது (2 திமொ 1:5). திமொத்தேயுவிடம்தான் பவுல் தன் வாழ்வின் இறுதிகட்ட நிகழ்வுகளைப் பற்றி மனம் திறக்கிறார். இன்று பல கல்லறைகளில் எழுதப்பட்டுள்ள பவுலின் வரிகள் எழுதப்பட்டதும் திமொத்தேயுவுக்கே: 'நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்' (2 திமொ 4:7).

ஒரு அருள்பணியாளராக நான் அடிக்கடி என்னையே திமொத்தேயுவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பேன். ஒரு அருட்பணியாளரின் வாழ்வு ரோஜா படுக்கை அல்ல என்பதை திமொத்தேயுவின் கடிதம் வெள்ளிடைமலையாகக் காட்டுகிறது. அருட்பணியாளரின் வாழ்வில் வரும் தனிமை, சோர்வு, உடல் உணர்வுகளின் போராட்டம், மற்றவர்களால் அவர் புறக்கணிக்கப்படுதல், உடல்நலமின்மை என அனைத்தின் உருவகமாக இருக்கிறார் திமொத்தேயு. இந்த பிரச்சினைகளைக் குறித்த இவர் தன் 'அப்பாவாகிய' பவுலுக்கு எழுதியிருக்க வேண்டும். ஆகையால்தான், பவுல் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வை தன் கடிதங்களில் எழுதியிருக்கிறார்:

'நீ இளவயதின் இச்சைகளை விட்டு ஓடிவிடு!' (2 திமொ 2:22)

'அனைத்திலும் அறிவுத்தெளிவோடு இரு. துன்பத்தை ஏற்றுக்கொள். நற்செய்தியாளனின் பணியை ஆற்று. உன் திருத்தொண்டை முழுமையாகச் செய்.' (2 திமொ 4:5)

'நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னை தாழ்வாக கருதாதிருக்கட்டும்' (2 திமொ 4:11)

'உன்மீது கைகளை வைத்து திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே!' (1 திமொ 4:14)

'வயது முதிர்ந்த பெண்களை அன்னயைராகவும், இளம் பெண்களை தூய்மை நிறைந்த மனத்தோடு தங்கையராகவும் கருதி அறிவுரை கூறு!' (1 திமொ 5:2)

'தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின்பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து!' (1 திமொ 5:23)

'உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தைவிட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது!' (1 திமொ 6:7)

2.    தீத்து

தீத்து கொஞ்சம் இன்ட்டலெக்சுவல் டைப். இவருக்கான அறிவுரைகளில் 'நலந்தரும் போதனை' என்ற வார்த்தையை நான்கு முறை பயன்படுத்துகின்றார் பவுல்.

திமொத்தேயு, தீத்து - இருவரும் கிறிஸ்தவ மறையின் தொடக்ககால நம்பிக்கை நட்சத்திரங்கள்.

தங்களுக்கு கொஞ்ச வயதே ஆகி, குறைவான வாழ்க்கை அனுபவமே இருந்தாலும், அர்ப்பணத்தோடும், பிளவுபடா உள்ளத்தோடும், புன்னகையோடும், முணுமுணுக்காமலும் தங்கள் பணியைச் செய்தனர்.

இந்த இளவல்கள் எல்லா அருள்நிலை இனியவர்களுக்கும் முன்னோடிகள்.

-       Fr. Yesu Karunanithi, Madurai.