25 சனவரி 2019, வெள்ளி

வெள்ளிக்கிழமை

பொதுக்காலம் இரண்டாம் வாரம்

வெள்ளிக்கிழமை

மாற்கு 3: 13-19

 

தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்த இயேசு

 

நிகழ்வு

 

அரசர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர், தனக்கு ஒத்தாசையாக இருக்கவும் ஆட்சி குறித்தான விஷயங்களில் ஆலோசனை வழங்கவும் மந்திரி ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தார். அதன்பேரில் அவர் தன் அமைச்சரவையில் சம தகுதிபெற்ற நால்வரில் ஒருவரை மந்திரியாகத் தேர்தெடுக்க முடிவுசெய்தார்.

 

ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த நால்வரையும் அழைத்த அரசர் அவரிடம், "என்னிடம் ஒரு பூட்டு இருக்கிறது. அது கணித முறைப்படி வடிவமைக்கப்பட்டது. அதனை திறக்க உங்களுக்கு  ஒரு வாய்ப்பு வழங்கப்படும். யார் அதனை விரைவில் திறக்கின்றாரோ அவரே இந்நாட்டின் மந்திரி" என்று கூறினார். அவர்களும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, எப்படியும் மந்திரியாகிவிட  வேண்டும் என்ற ஆசையில், கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட அந்த பூட்டைத் திறக்க அன்று இரவு முழுவதும் பல ஓலைச்சுவடிகளை புரட்டிப் பார்த்தனர். ஆனால் எதுவுமே கிடைக்கவில்லை.

 

இதற்கு மத்தியில் அந்த நால்வரில் ஒருவர் மட்டும், எந்தவொரு பதற்றமும் இல்லாமல், ஒருசில ஓலைச் சுவடிகளை மட்டும் புரட்டி பார்த்துவிட்டு தூங்கப் போய்விட்டார். மறுநாள் அரசவையில், கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட அந்த பூட்டை சேவகர்கள் தூக்கி வந்து, அரசரின் முன்னிலையில் வைத்தனர். அதனை பார்த்த அனைவருக்கும் ஒரே படப்படப்பாக இருந்தது. அரசவைக்கு வரும்போது கொண்டு வந்திருந்த ஓலைச்சுவடிகளைகூட அவர்கள் முன்னும் பின்னும் புரட்டிப் பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு அதற்கான வழி மட்டும் புலப்படவில்லை. ஆகவே, அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர். ஆனால் அவர்களுள் ஒருவர் மட்டும் அந்த பூட்டின் பக்கம் வந்து பார்த்தார். என்ன அபூர்வம்! பூட்டு பூட்டப்படவில்லை. அதனால் அவர் அதனை எளிதாக திறந்தார். அரசரும் அவரை மந்திரியாகத் தேர்ந்தெடுத்தார்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் அரசன், தன்னோடு இருந்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு தேர்வெல்லாம் வைத்து மந்திரியைத் தேர்ந்தெடுத்தான்.  இயேசு அந்த அரசனைப் போன்று தேர்வெல்லாம் வைத்து திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை, மாறாக தான் விரும்பியவர்களைத் திருத்தூதராகத் தேர்ந்தெடுக்கின்றார்.

 

இயேசு திருதூதர்களைத் தேர்ந்தெடுத்ததன் நோக்கமென்ன? அவர்கள் வழியாக இயேசு என்ன செய்யப்போகிறார் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

 

தம்மோடு இருக்க, நற்செய்தியை அற்விக்க

 

ஆண்டவர் இயேசு கிறிஸ்து திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்ததன் மிக முக்கியமான நோக்கம், அவர்கள் தம்மோடு இருக்கவேண்டும் என்பதற்காகவே. வானத்திலிருந்து வையத்திற்கு இறங்கிவந்த இயேசு, யாரோடும் ஓட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று இருக்கவில்லை. மாறாக, அவர் உறவை அதிகம் விரும்புபவராக, உறவில் அதிகம் மகிழ்ச்சி கொள்பவராக இருந்தார். அதனால்தான் அவர், தன்னுடைய உடலை உணவாகவும் இரத்தைத்தை பானமாகத் தருகிறேன் என்று சொன்னதும், ஒருசில சீடர்கள் ‘இது மிதமிஞ்சிய பேச்சாக இருக்கின்றதே’ என்று விலகிசென்றபோது மற்ற சீடர்களிடம், “நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” என்று ஒருவிதமான தவிப்போடு கேட்கின்றார் (யோவா 6:67). இப்படி உறவை விரும்புபவராக இருந்ததால்தான் இயேசு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்.

 

அடுத்ததாக, தம்மோடு இருப்பதற்காக திருதூதர்களைத் தேர்ந்தெடுக்கும் இயேசு, அவர்களுக்கு நல்லவிதமாய் பயிற்சிகள் கொடுத்து நற்செய்தி அறிவிக்க அனுப்புகின்றார். ‘தூதர்’ என்றாலே ஒருவரிடமிருந்து செய்தியை பெற்றுக்கொண்டு இன்னொருவருக்கு அறிவிப்பவர்தானே. அத்தகைய வகையில் இயேசுவினுடைய திருத்’தூதர்கள்’ அவரிடமிருந்து நற்செய்தியைப் பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அறிவிக்கச் செல்கின்றார்கள். அப்படி அவர்கள் நற்செய்தியை அறிவிக்கச் செல்லும்போது வெறுமனே நற்செய்தியை  மட்டும் அறிவித்துக் கொண்டிருக்கவில்லை அல்லது போதித்துக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. மாறாக போதனைக்கு ஏற்ப நோய்களைக் குணமாக்கி செயல்வீரர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.  இயேசுவின் சீடராக நாம் இருக்கின்றோம் என்றால், வெறுமனே போதித்துக்கொண்டோ அல்லது இறைவார்த்தையைக் கேட்டுக்கொண்டோ மட்டும் இருக்கக்கூடாது செயல்வீரர்களாகவும் இருக்கவேண்டும்.

 

இயேசுவின் சீடர்களாக – திருத்தூதர்களாக - மாறியபின்பு சீமோன் பேதுரு அதாவது பாறையாகின்றார்; இடியின் மக்கள் என அழைக்கப்பட்ட யோவானும் யாக்கோபும் அன்பின் மக்களாக மாறுகிறார்கள். இது நமக்குச் சொல்லும் செய்தி, எப்போது நாம் இயேசுவின் வழியில் நடக்கத் தொடங்குகின்றோமோ அப்போதே நம்முடைய வாழ்வு மாறும் என்பதாகும்.

 

சிந்தனை

 

இயேசு திருத்தூர்களை அழைத்தபோது, அவர்கள் மகிழ்வோடு அவரிடத்தில் சென்றது போன்று, நாமும் அவர் நம்மை அழைக்கின்றபோது மகிழ்வோடு செல்வோம்; அவருடைய அன்பின் செய்தியை எல்லாருக்கும் அறிவிக்கும் சாட்சிகளாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.