25 சனவரி 2019, வெள்ளி

மறையுரைச் சிந்தனை

மறையுரைச் சிந்தனை (ஜனவரி 25)

பவுலின் மனமாற்றப் பெருவிழா

இன்று திருஅவையானது தூய பவுலின் மனமாற்றப் பெருவிழாவை கொண்டாடுகின்றது. திருஅவை உலகெங்கும் இன்று பரவியிருக்கிறது என்று சொன்னால் அதற்கு அடித்தளமிட்டவர் தூய பவுலடியார் என்பதை எவராலும் மறுக்க முடியாது. ‘புறவினத்தாரின் திருத்தூதர்’ என்று அழைக்கப்படும் தூய பவுலடியாரின் மனமாற்றப் பெருவிழாக் கொண்டாடும் இந்த நல்லநாளில் இவ்விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

விவிலியத்தில் ஒரு நிகழ்வு மூன்றுமுறை சொல்லப்படுகின்றது என்று சொன்னால் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளலாம் என்பது எழுதப்படாத விதி. அந்த விதத்தில் பவுலடியாரின் மனமாற்ற நிகழ்வும் மூன்றுமுறை சொல்லப்படுகிறது (திப. 9, 1-22, 22, 3-16, 26, 9-23) என்பதை அறிகின்றபோது அந்நிகழ்வு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். பவுலடியாரின் மனமாற்றம் கிறித்தவத்தின் - திருஅவையின் - எல்லைகளை உலகமெங்கும் விரிவுபடுத்தியது என்று சொன்னால் அது மிகையாகது.

இவ்விழாவை பவுலின் மனமாற்றப் பெருவிழா என்று அழைப்பதைவிடவும், பவுலின் அழைப்பு என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இந்த நிகழ்வின் வழியாக சவுலாக இருந்தவர் பவுலாக மாறுகின்றார்.

“மனமாற்றம் ஒருவரது வாழ்வின் உயர் குறிக்கோளை சரியான பாதையில் மாற்றி அமைக்கிறது. அதனால் பழக்கவழக்கத்திலும் பண்பாட்டிலும், நடத்தையிலும் முழுமையான மாற்றம் உண்டாகிறது. இதனால் உடன் இருப்பவர்களின் வெறுப்பைக் கூட பெறவேண்டிய நிலை உண்டாகிறது” என்பார் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட். ஆம், விவிலியத்தில் காணப்படும் சக்கேயுவின் மனமாற்றம் அப்படிப்பட்டதாக இருக்கிறது.

சக்கேயு வாழ்வைத் தொலைத்து வசதி வாங்கியவர். ஆனால் அவருடைய உள்ளத்தில் நிம்மதியில்லை. அவரின் இதயம் கரைதேடும் அலையாய் கடவுளைத் தேடுகிறது. அப்படிப்பட்டவரை இயேசு அழைக்கிறார்; “இன்று உன்னுடைய வீட்டில் நான் விருந்துண்ணப் போகிறேன்” என்கிறார். உடனே அவர் புத்தொளி பெற்றவராய் இயேசுவிடம் “எவரிடமாவது திருடி இருந்தால், யாரையாவது ஏமாற்றிக் கவர்ந்திருந்தால், ஏய்த்துப் பிழைத்திருந்தால், சொத்தை அவகரித்திருந்தால், நான்கு மடங்காய் திருப்பித் தந்துவிடுகிறேன்” என்கிறார். இதைகேட்ட இயேசு, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று” என்கிறார். இயேசு அழைத்ததால் சக்கேயு மனமாற்றம் பெற்று புதியதொரு வாழ்வை வாழத் தொடங்குகிறார்.

இதைப் போன்றுதான் பவுலடியாரும். கடவுள் தன்னை அழைப்பதற்கு முன்பாக திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி, ஒழிக்க முயன்றவர். அப்படிப்பட்டவரை இறைவன் தாயினும் சாலப்பரிந்து, தடுத்தாட்கொள்கிறார். இனி வாழ்பவன் நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார் என்று கூறக்கூடிய நிலையை அடையச் செய்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தன் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு அறிவிக்குமாறு உயரிய பணியையும் அவருக்குக் கொடுக்கிறார். அதனால்தான் தூய பவுல் கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்டவன் என்ற முறையில், தான் பெற்ற பேற்றை வையகத்துக்கு அளிக்க விரைகிறார்.

யார் கிறிஸ்தவ மதத்தை அடியோடு அழிக்க நினைத்தாரோ, யார் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களை சிறையில் அடைக்க நினைத்தாரோ அவரே கிறித்துவுக்காக உயிர் துறக்க துணிந்தார் என்பதுதான் மிகப்பெரிய விந்தையான ஒரு காரியமாக இருக்கிறது. 2கொரிந்தியர் 11 ஆம் அதிகாரத்தில் பவுலடியார் கிறிஸ்துவாக தான்பட்ட வேதனைகளை சுட்டிக்காட்டுவார், “நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன்.  ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். 25 மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்; ஒருமுறை கல்லெறிபட்டேன்; மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன்.

பயணங்கள் பல செய்தேன்; அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன்.  பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண்விழித்தேன்; பசிதாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்;  குளிரில் வாடினேன்;  ஆடையின்றி இருந்தேன்” என்று வரிசைப்படுத்திக் கொண்டே போவார்.

இவையெல்லாம் பவுலடியார் தான் துன்புறுத்திய இயேசுவின் திருச்சபைக்காக பட்ட கஷ்டங்கள் ஆகும். ஆக, பவுலடியார் எத்தனையோ துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்தாலும் அவர் கிறிஸ்துவாக எல்லாவற்றையும் செய்தார். எனவே பவுலடியாரின் மனமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் நாமும் உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்வதை விடுத்து, உண்மைக் கடவுளாகிய இயேசுவாக வாழ முயற்சி எடுக்கவேண்டும்.

இலண்டன் நகரிலே மிகப்பெரிய திருடன் ஒருவன் இருந்தான். அவன் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று, கையில் கிடைத்ததை எல்லாம் சுருட்டிக்கொண்டு வந்துவிடுவான். ஒருமுறை அவன் ஒரு பணக்காரப் கணவானின் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை எல்லாவற்றையும் திருடிக்கொண்டு வந்தான். கூடவே அவர் ஆசையாக வைத்திருந்த மூன்று ஆஸ்ட்ரேக்களையும் (சிகரெட் சாம்பலைத் தட்டிவைக்கப் பயன்படுத்தப்படும் கண்ணாடிப் பாத்திரம்) திருடிக்கொண்டு வந்துவிட்டான். தன்னுடைய பணம், நகை போனதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அந்தக் கணவான் காணாமல்போன மூன்று ஆஸ்ட்ரேகைகளைப் பற்றி மிகவும் வருந்தினார்.

சில நாட்களுக்குப் பிறகு அந்தக் கணவானின் வீட்டிற்கு ஒரு கூரியர் வந்தது. அதில் அவரது திருடுபோன மூன்று ஆஸ்ட்ரேக்கள் இருந்தன. கூடவே ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதி இருந்தது. “ஐயா என்னை மன்னித்துவிடுங்கள், ஏனென்றால் நான் உங்கள் வீட்டிலிருந்து திருடிய பணத்தையெல்லாம் செலவு செய்துவிட்டேன். இப்போது இந்த மூன்று ஆஸ்ட்ரேக்கள் மட்டுமே உள்ளன. இவை மூன்றும் எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் நான் ஒரு செயின் ஸ்மோக்கர். ஒருநாளைக்கு மூன்று சிகரெட் பாக்கெட்டுகளை காலிசெய்துவிடுவேன். ஆனால் இப்போது நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.  நீங்களும் சிகரெட் அதிகம் பயன்படுத்துவது போன்று தெரிகிறது. தயவுசெய்து அதை விட்டுவிடுங்கள். இல்லையென்றால் நீங்களும் புற்றுநோய்க்கு ஆளாக வேண்டிவரும்” என்று எழுதியிருந்தான்.

இதைப் படித்த அந்தக் கணவான் தனது புகைப்பிடிக்கும் பழகத்தை அறவேவிட்டுவிட்டு புதிய ஒரு மனிதனாக வாழ்ந்தான்.

நான் ஒவ்வொருவருமே தவறான வாழ்க்கை வாழ்வதைவிடுத்து புதிய வாழ்க்கை வாழவேண்டும் என்பதை இந்த நிகழ்வானது நமக்க்சு எடுத்துக்கிறது.

ஆகவே பவுலடியாரின் மனமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் நாமும் தவறான, உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்வதை விடுத்து, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழுவோம். உலகெங்கும் சென்று படைப்பிற்கு எல்லாம் நற்செய்தி அறிவித்து, இயேசுவுக்கு சான்று பகர்வோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.  – Fr. Maria Antony, Palayamkottai. 2016
















  இனி எல்லாம் சுகமே!  
எப்பொழுதும்

 

நாளை தூய பவுலின் மனமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

புதிய நம்பிக்கையாக வளர்ந்து கொண்டிருந்த நசரேய மதத்தை (கிறிஸ்தவம்) வேரறுக்க, கையில் வாளோடு புறப்பட்டவர், இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறார்.

ஆட்கொள்ளப்பட்ட அன்றே ஆள் புதிய மனிதராகின்றார்.

'நான்' என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும் மனம், இறைவன் பக்கம் திரும்பி, இனி எப்போதும் 'நீ' என்று சொல்வதுதான் மனமாற்றம்.

பவுல் இதை ஒருமுறை சொன்னது மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழ்ந்தும் காட்டுகிறார். அதனால்தான் அவரால், 'வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்!' என சொல்ல முடிந்தது.

தன் பின்புலம், தன் திருச்சட்டம், தன் இனம், தன் உறவு, தன் தொழில், தன் விருப்பு-வெறுப்பு, தன் நண்பர்கள் வட்டம், தன் சொந்த ஊர் அனைத்தையும் விட்டுவிட அவரால் எப்படி முடிந்தது? அவரின் தைரியம் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

இன்று நமக்கெல்லாம் மனமாற்றம் தேவையில்லைதான்.

நாம் பிறந்தவுடன் இயேசுவின் உடலுக்குள் திருமுழுக்கு பெற்றுவிட்டோம்.

இது மட்டும் போதுமா?

இல்லை.

மனமாற்றம் என்பது அர்ப்பணம்.

எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் வாக்குறுதி இது.

காலையில் 6 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து படிக்க வேண்டும் என்று தூங்கப்போய், 6 மணிக்கு அலாரம் அடிக்கும் போது, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்! என போர்வையை இழுக்க கை போகும்போது, 'வேண்டாம்' என்று என் மனம் சொன்னால், அது மனமாற்றம்.

அர்ப்பணத்தில் என்ன பிரச்சினை என்றால், அது நீண்ட காலம் நீடிக்க முடியாததுதான்.

மனமாற்றம் என்பது நீண்டகால அர்ப்பணம் (long-term or perpetual commitment).

இன்று நாம் வாழும் வியாபார உலகத்தில் எதுவும் நீண்டகாலம் இருப்பதற்கு உற்சாகப்படுத்தப்படுவதில்லை. இன்றைய மார்க்கெட் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு தேதியை குறித்து விடுகிறது. சீக்கிரம் முடிவு தேதி இருந்தால், சீக்கிரம் மக்கள் பயன்படுத்தி, சீக்கிரம் வியாபாரம் நடக்கும் என எல்லாமே நடக்கிறது. பால், தண்ணீர், பிஸ்கட், அரிசி, பருப்பு, கோக், தேன், மருந்து, பற்பசை, ரோஸ் பவுடர், மாய்சரைசர், எண்ணெய், க்ரீம், சீப்பு, சோப்பு, கண்ணாடி என எல்லாவற்றுக்கும் எக்ஸ்பைரி டேட் இருக்கிறது.

நாம் வாங்கிய இரண்டு நாட்களில், மற்றொரு புதிய பொருள் வந்துவிடுகிறது.

இது பொருட்களில் மட்டுமல்ல. நம் வாழ்க்கை மதிப்பீடுகளையும் முழுமையாக மாற்றிவிட்டது.

40 வருட திருமண வாழ்வு, 40 வருட ஆசிரியப் பணி என்றெல்லாம் இனி நாம் பெருமையடைய முடியாது. திருமணம், வேலை, நட்பு நீடிக்கும் காலமும் குறைந்துகொண்டே வருகிறது.

நாம் வாழும் நாட்களை கூட்டிவிட்டோம். ஆனால், இந்த நாட்களுக்குள் வாழும் வாழ்க்கையை குறைத்துவிட்டோம். இதுதான் பெரிய முரண்.

இன்று ஒருநாள் நான் குடிக்காமல் இருப்பதோ, திருடாமல் இருப்பதோ, இலஞ்சம் வாங்காமல் இருப்பதோ கஷ்டமல்ல. நீண்டகாலம் குடிக்காமலும், திருடாமலும், இலஞ்சம் வாங்காமலும் இருப்பதுதான் கஷ்டமாக இருக்கும்.

இப்பொழுதின் ஒவ்வொரு பொழுதும், 'நான்,' 'நீ' என இறைவன் பக்கம் நான் திரும்பினால், இப்பொழுது மட்டுமல்ல...எப்பொழுதும் மனமாற்றம், அர்ப்பணம் சாத்தியமே.

சின்னான் - Rev Fr YESU KARUNANIDHI 

Posted: 24 Jan 2017 10:41 AM PST

நாளை தூய பவுலின் மனமாற்றத்தின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

'பவுல்' என்றால் கிரேக்கத்தில் 'சிறியது' என்பது பொருள். ஆகையால்தான், பழைய மொழிபெயர்ப்பில் நாம் இவரை 'சின்னப்பர்' என அழைக்கின்றோம்.

இந்த 'சின்னான்' கிறிஸ்தவத்தின் தடத்தையே மாற்றியவர்.

வரலாற்றின் இயேசுவுக்கும், நம்பிக்கையின் கிறிஸ்துவுக்கும் இணைப்புக்கோடாய் இருப்பவர் இவர்.

இவரின் மனமாற்றம் பற்றி நான்கு இடங்களில் வாசிக்கிறோம் (திப 9:1-9, 22:6-16, 26:12-18, கலா 1:15-19). இந்த நான்கு கதையாடல்களுக்கும் இடையே நிறைய வேற்றுமைகள் இருந்தாலும், இவைகள் கொண்டிருக்கும் ஒரே ஒற்றுமை 'மனமாற்றம்'.

சவுலாக இருந்தவர் பவுலாக மாறுகிறார்.

'ஒரு கிறிஸ்தவனைக் கூட விட்டுவைக்க மாட்டேன்' என வாளெடுத்துச் சென்றவர், 'வாழ்வது நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்' என்று பல்டியடிக்கின்றார்.

பவுலின் மனமாற்றம் எனக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடங்கள் இவை:

அ. நம் திட்டம் அல்ல. அவரின் திட்டமே.

ஒவ்வொரு பொழுதும் நாம் ப்ளானரில் எடுத்து ஏதோ ஒரு நிகழ்வைக் குறிக்கும்போதெல்லாம் கடவுள் சிரிப்பார் என்பது என் நம்பிக்கை. 'இவனுக்கு நான் ஒரு ப்ளானர் வைத்திருக்க இவன் ஏதோ எழுதுகிறானே!' என அவர் தனக்குள் சொல்லிக்கொள்வார். பவுலும் வாளெடுத்துச் சென்றபோது கடவுள் தனக்குள் சிரித்துக்கொள்வார்.

ஆ. அதிக ஆழம். அதிக அன்பு.

அதிக ஆழமாக பவுல் விழுந்ததால் கடவுளை அதிகமாக அன்பு செய்கிறார். இது அகுஸ்தினாருக்கும் பொருந்தும். ஒரு கயிறு அறுந்து கட்டப்படும்போது அதன் இரண்டு நுனிகளும் தங்களை அறியாமல் அருகில் வருகின்றனவே. அது போல! அருள் இறங்க முடியாத ஆழம் என்று நம் வாழ்வில் எதுவும் கிடையாது. நாம் ஆழமாகச் சென்று ஒளிந்து கொண்டாலும் அவர் நம்மைத் தேடி வருவார். பவுலைத் தேடி வந்ததுபோல.

இ. நோ டர்னிங் பேக்

புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கியவுடன் தன் பழையவற்றோடு உள்ள இணைப்பை முழுவதுமாக வெட்டிக்கொண்டார். ஆங்கிலத்தில் இதை, 'படகுகளை எரிப்பது' என்று சொல்வார்கள். தான் வந்த படகை எரித்துவிட்டு புதிய இடத்தில் காலடிகளைப் பதித்துக்கொள்வது.

குதிரையில் வந்த சின்னான், விழுந்தார், எழுந்தார்.

அவரின் மனமாற்றம் நம் மனமாற்றம்கூட.

அவர் மனம் மாறிடாவிடில் கிறிஸ்தவம் யூத மதத்தின் ஒரு சின்ன ஸெக்ட் ஆக நின்று போயிருக்கும்.

என் மனமாற்றம் கூட எங்கோ இருக்கும் யாருக்கும் பயன்படலாம்.

கொஞ்சம் மனமாறுங்க பாஸ்!