25 சனவரி 2019, வெள்ளி

ஜனவரி 25

ஜனவரி 25

 

எபிரேயர் 8: 6—13

 

நம் தீச்செயல்களை மன்னிக்கும் இறைவன்

 

நிகழ்வு

 

         ரஷ்யாவைச் சார்ந்த எவ்கேனி எவ்டுஷேங்கோ (Yevgeny Yevtushenko) என்ற பெண்மணி தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிடுகின்ற ஒரு நிகழ்வு. இனி வரக்கூடியவை எவ்கேனியின் வார்த்தைகளில்.

 

“இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த தருணம். ஜெர்மன் நாட்டுப் படையினர் எங்கள் நாட்டின்மீது (ரஷ்யாவின்மீது) கடுமையான தாக்குதல் நடத்தி நாட்டையே அலங்கோலமாக்கி இருந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் நானும் என்னுடைய தாயும் மாஸ்கோவில் உள்ள எங்கள் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அன்றைய நாளில் மாஸ்கோவில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட ஜெர்மன் நாட்டுப் படைவீரர்களுடைய அணிவகுப்பானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாஸ்கோ நகரில் இருந்த பெண்கள் எல்லாம், ‘நம்முடைய கணவன்மார்களையும் சகோதர்களைகளையும் பிள்ளைகளையும் கொன்றுபோட்டுவிட்டு இவர்கள் அணிவகுப்பு வேறு நடத்தப்போகிறார்களா?’ என்று கடுங்கோபத்தில் இருந்தார்கள்.

 

சிறிது நேரத்தில் ஜெர்மன் நாட்டுப் படைத்தளபதியின் தலைமையில் அணிவகுப்பானது தொடங்கியது. படைத்தளபதி முன்னால் செல்ல, வீரர்களெல்லாம் அவர் பின்னால் வரிசையாக அணிவகுத்துச் சென்றார்கள். ஆனால் படைவீரர்களுடைய தோற்றம் பலநாட்கள் உணவு உண்ணாமல், பட்டினி கிடந்தவர்கள் போலும் முகத்தை மழிக்காமலும் இரத்தக்கறை படிந்த உடையோடும் இருந்தார்கள்.

 

இதைப் பார்த்துவிட்டு ஒரு பெண்மணி படைவீரர்களின் கூட்டத்திற்குள் நுழைந்து ஒரு படைவீரரிடம், தன்னுடைய கையில் இருந்த ஒரு ரொட்டித் துண்டை எடுத்துக் கொடுத்து, ‘இதைச் சாப்பிட்டுக் கொள்” என்று சொல்லிவிட்டு வந்தாள். அந்த பெண்மணியைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் அணிவகுத்துச் சென்றுகொண்டிருந்த படைவீரர்களிடத்தில் சென்று, ரொட்டியும், உடுத்திக் கொள்ள நல்ல ஆடைகளையும், அவர்களுக்குத் தேவையான பொருட்களையும் கொடுத்துவிட்டு வந்தார்கள். அதுவரைக்கும் ஏதோ மயான இடமாகக் காட்சியளித்த மாஸ்கோ நகர் புது ஒளிபெற்றது.

 

இவற்றையெல்லாம் என்னுடைய வீட்டு மேல்மாடியின் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. “தங்களுடைய கணவன்மார்கள், சகோதர்கள், பிள்ளைகள் எல்லாரையும் போரில் இந்தப் ஜெர்மன் நாட்டுப் படைவீரர்கள் கொன்றுபோட்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்களை மன்னித்து, இந்தப் பெண்கள் அவர்களின் பரிதாப நிலைகண்டு அவர்களுக்கு உதவச் செல்கின்றார்களே, இவர்களல்லவா உண்மையில் மனிதர்கள்” என்று எண்ணி வியந்தேன்”.

 

தங்களுடைய சொந்தங்களைக் கொன்றுபோட்ட ஜெர்மன் நாட்டுப் படைவீரர்களை மன்னித்து, அவர்களுடைய வறியநிலையில் அவர்களுக்கு உதவிய மாஸ்கா நகரத்தைச் சார்ந்த பெண்கள் உண்மையில் மன்னித்து வாழ்வதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள்.

 

தீச்செயல்களையும் பாவங்களையும் மன்னிக்கும் இறைவன்

 

         எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், அதன் ஆசிரியர், கடவுளை மன்னிக்கின்ற கடவுளாக எடுத்தியம்புகிறார்.

 

கடவுள் எப்படி மன்னிக்கின்ற கடவுளாக இருக்கின்றார் என்று நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது, சீனாய் மலையில் ஆண்டவராகிய கடவுளிடமிருந்து மோசே பத்துக் கட்டளைகளை வாங்கிக்கொண்டு, அவற்றை மக்களிடம் வாசித்துக் காட்டுகின்றபோது, அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், “ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம் என்பார்கள்” (விப 23:3). ஆனால், நாட்கள் செல்லச் செல்ல நடந்ததோ வேறொன்றாக இருந்தது. ஆம், இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு, வேற்று தெய்வங்களை வழிபடத் தொடங்கினார்கள். அதனாலேயே அவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள். ஆனாலும் கடவுள் அவர்களுடைய குற்றங்களை எல்லாம் மன்னித்து, அவர்களோடு புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்கின்றார். அந்த உடன்படிக்கையின்படி அவர் தந்தையாகவும், இஸ்ரயேல் மக்கள் – நாம் – அவருடைய பிள்ளைகளாகவும் மாறுகின்றோம்.

 

பாவங்களை மன்னிப்பதும், செய்த குற்றங்களை நினைவுகூராமல் இருப்பதும் அவ்வளவு எளிதான காரியமல்ல, ஆண்டவர் இயேசு நாம் செய்த குற்றங்கள் அனைத்தையும் மன்னித்து, நம்முடைய குற்றங்களை நினைவுகூடக் கொள்ளாமல், நம்மை அவருடைய அன்பு மக்களாக ஏற்றுக்கொள்கின்றார். இதற்கு நாம் நன்றிகெட்டவர்களாக இருக்கக்கூடுமோ? ஒருபோதும் கூடாது. இதற்கு நாம் என்ன செய்யவேண்டுமெனில், தூய பேதுரு தன்னுடைய இரண்டாவது திருமுகத்தில் சொல்வது போல, “தீய நாட்டங்களிலிருந்து விலகியோடி, இறைத்தன்மையில் பங்குகொள்ள வேண்டும்” என்பதுதான் (2 பேது 1 1-4). ஆம், நாம் இறைவன்மீதும், அவர்மகன் இயேசுவின் மீதும் நம்பிக்கை கொண்டு, அவருக்கு உகந்த வழியில் நடப்பதே நாம் செய்யவேண்டிய ஏற்புடைய செயலாகும்.

 

சிந்தனை

 

“நீர் எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால் யார்தான் நினைத்து நிற்க முடியும்?” என்பார் திருப்பாடல் ஆசிரியர் (திபா 130:3). இறைவன் நம்முடைய குற்றங்களை மனதில் கொண்டிராமல், மன்னிப்பு அருளுகின்றவர். ஆகவே, அவருடைய மன்னிப்பை உணர்ந்தவர்களாய், அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.