25 சனவரி 2019, வெள்ளி

திருத்தூதர் பவுல் - மனமாற்றம் விழா

சனவரி 25

திருத்தூதர் பவுல் - மனமாற்றம் விழா

முதல் வாசகம்

எழுந்து இயேசுவின் திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப்பெற்றுத் திருமுழுக்குப் பெறும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22: 3-16

அந்நாள்களில் பவுல் மக்களை நோக்கிக் கூறியது: ``நான் ஒரு யூதன்; சிலிசியாவிலுள்ள தர்சு நகரத்தில் பிறந்தவன்; ஆனால் இந்த எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன்; கமாலியேலின் காலடியில் அமர்ந்து நம் தந்தையரின் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றவன்; நீங்கள் அனைவரும் இன்று கடவுள்மீது ஆர்வம் கொண்டுள்ளதுபோன்று நானும் கொண்டிருந்தேன்.

கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையில் அடைத்தேன்; சாகும்வரை அவர்களைத் துன்புறுத்தினேன். தலைமைக் குருவும் மூப்பர் சங்கத்தாரும் இதற்குச் சாட்சி. இவர்களிடமிருந்து தமஸ்கு நகரிலுள்ள சகோதரர்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டு அங்குள்ள கிறிஸ்தவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவந்து தண்டிப்பதற்காக அங்குச் சென்றேன்.

நான் புறப்பட்டுத் தமஸ்கு நகரை நெருங்கியபோது நண்பகல் நேரத்தில் திடீரென வானிலிருந்து ஒரு பேரொளி என்னைச் சூழ்ந்து வீசியது. நான் தரையில் விழுந்தேன். அப்போது, `சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?' என்ற குரலைக் கேட்டேன். அப்போது நான், `ஆண்டவரே நீர் யார்?' என்று கேட்டேன். அவர், `நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே' என்றார். என்னோடு இருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்; ஆனால் என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை. `ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?' என நான் கேட்க, ஆண்டவர் என்னை நோக்கி, `நீ எழுந்து தமஸ்குவுக்குச் செல். நீ செய்வதற்கெனக் குறிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அங்கே உனக்குக் கூறப்படும்' என்றார்.

அந்த ஒளியின் மிகுதியால் நான் பார்க்க முடியவில்லை. என்னோடு இருந்தவர்கள் எனது கையைப் பிடித்துத் தமஸ்குவினுள் அழைத்துச் சென்றார்கள். அங்கு அனனியா என்னும் ஒருவர் இருந்தார். அவர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்துக் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்; அங்கு வாழ்ந்து வந்த யூதர் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர். அவர் என்னிடம் வந்து அருகில் நின்று, `சகோதரர் சவுலே, மீண்டும் பார்வையடையும்' என்றார். அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன்.

அப்போது அவர், `நம் மூதாதையரின் கடவுள் தம் திருவுளத்தை அறியவும் தம் நேர்மையாளரைக் காணவும் தம் வாய்மொழியைக் கேட்கவும் உம்மை ஏற்படுத்தியுள்ளார். ஏனெனில், நீர் கண்டவைகளுக்கும் கேட்டவைகளுக்கும் அனைவர் முன்பும் நீர் சாட்சியாய் இருக்க வேண்டும். இனி ஏன் காலம் தாழ்த்த வேண்டும்? எழுந்து அவரது திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப்பெற்றுத் திருமுழுக்குப் பெறும்' என்றார்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

அல்லது

சவுல் ``ஆண்டவரே நீர் யார்?'' எனக் கேட்டார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-22

அந்நாள்களில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் சீடர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி, இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைது செய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார். இவ்வாறு அவர் புறப்பட்டுச் சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது.

அவர் தரையில் விழ, ``சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?'' என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார். அதற்கு அவர், ``ஆண்டவரே நீர் யார்?'' எனக் கேட்டார். ஆண்டவர், ``நீ துன்புறுத்தும் இயேசு நானே. நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்'' என்றார். அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர்.

ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர். சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை.

தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார்.

ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ``அனனியா'' என அழைக்க, அவர், ``ஆண்டவரே, இதோ அடியேன்'' என்றார்.

அப்போது ஆண்டவர் அவரிடம், ``நீ எழுந்து நேர்த்தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கிறார். அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார்'' என்று கூறினார்.

அதற்கு அனனியா மறுமொழியாக, ``ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமில் உள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான்'' என்றார்.

அதற்கு ஆண்டவர் அவரிடம், ``நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் இருக்கிறார். என் பெயரின் பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக்காட்டுவேன்'' என்றார்.

அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று கைகளை அவர்மீது வைத்து, ``சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வையடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்'' என்றார்.

உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே, அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்.

பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார். சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார். உடனடியாக அவர் இயேசுவை இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார். கேட்டவர் அனைவரும் மலைத்துப்போய், ``எருசலேமில் இந்தப் பெயரை அறிக்கையிடுவோரை ஒழிக்க முற்பட்டவன் இவனல்லவா? அவ்வாறு அறிக்கையிடுவோரைக் கைது செய்து, தலைமைக் குருக்களிடம் இழுத்துச் செல்லும் எண்ணத்தோடு இங்கே வந்தவன்தானே இவன்'' என்றார்கள்.

சவுல் மேன்மேலும் வல்லமை பெற்றவராய், `இயேசுவே கிறிஸ்து' என்பதை மெய்ப்பித்துத் தமஸ்குவில் வாழ்ந்து வந்த யூதர்கள் அனைவரும் மனம் குழம்பச் செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 117: 1. 2 (பல்லவி: மாற் 16: 15)

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

அல்லது: அல்லேலூயா.

1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி

2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 16 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-18

அக்காலத்தில் இயேசு பதினொருவருக்கும் தோன்றிக் கூறியது: ``உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.

நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

அழைப்பு பெற்றவர்கள் நாம்.

அழைப்பின் அர்த்தத்தை உணர்ந்திட வேண்டும்.

அழைப்பிலே ஆழம் காண வேண்டும்.

அழைப்பினை அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்திட வேண்டும்.

திருமுழுக்கு பெற்ற எல்லாருக்கும் இது பொதுவானதே.

GOSPEL  READING: MARK 16:15-18

Belief in God and the baptism are essential for the salvation. God wanted that the whole world should be saved. This was the reason for the commission which sent the disciples into the whole world. Proclamation of the good news became the top priority for the salvation.

The signs that accompanied them were clear indications of the spread of the kingdom of God. They had control over demons (spirit world); they had mastery over languages (spread over other land); they had the gift of life (poison and serpents had no effect on them); they also had the gift of wholeness (healed people).

நற்செய்தியை பறைசாற்றுதல் வழியாக நம்பிக்கை வளர்கிறது. நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர். மீட்புப் பெறுதல்தான் இறைவன் இவ்வுலகிற்கு கொடுக்கும் சிறந்த கொடை. நம்பிக்கைகொண்டவர்கள் தீமை மீதும்> மொழிகள் மீதும்> உடல் மீதும்> உயிர் மீதும் அதிகாரம் கொண்டிருப்பர். – Fr. Theo SDB