07 டிசம்பர் 2021, செவ்வாய்

புனித அம்புரோஸ் - ஆயர், மறைவல்லுநர்

நினைவுக்காப்பு

முதல் வாசகம்

கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு அறிவிக்க.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-12

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு அறிவிக்கவும், எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்குள் ஊழிக் காலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென யாவருக்கும் தெளிவுபடுத்தவும், இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையனாகிய எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பல வகையில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான் வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு கடவுள் ஊழிக் காலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார். கிறிஸ்துவின்மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 89: 1-2. 3-4. 20-21. 24,26 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.

1
ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2
உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. - பல்லவி

3
நீர் உரைத்தது: ‘நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4
உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’ - பல்லவி

20
என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.
21
என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். - பல்லவி

24
என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.
26
‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-16

அக்காலத்தில்

இயேசு கூறியது: “நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக் கொண்டுபோய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப் பற்றிக் கவலை இல்லை.

நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.

இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.