07 டிசம்பர் 2021, செவ்வாய்

“அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்”

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை


திருப்பாடல் 96: 1-2, 3, 10, 11-12, 13 (எசா 40:10a)

“அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்”

உயிரற்றவைக்காக உயிருள்ளதைக் கொல்லவேண்டுமா?


முன்பொரு காலத்தில் மன்னர் ஒருவர் இருந்தார். அவர் நீதி வழுவாமல் மக்களுக்குத் தீர்ப்பு வழங்கி வந்தார். அதனால் குடிமக்கள் அனைவரும் அவருடைய ஆட்சிக்காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். அந்த மன்னருக்கு அரிதாகக் கிடைக்கும் சிற்பங்களைச் சேகரிக்கும் பழக்கம் இருந்தது. ஆகவே, அவர் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அங்கே கிடைக்கும் அரிதான சிற்பங்களை வாங்கிக்கொண்டு வந்துவிடுவார். இவ்வாறு அவர் சேகரித்த சிற்பங்களுக்கென்றே ஒரு பெரிய கலைக்கூடம் கட்டி எழுப்பியிருந்தார். அந்தக் கலைக்கூடத்திலிருந்த மூன்று சிற்பங்கள் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. அந்த மூன்று சிற்பங்களையும் அவர் தனிக்கவனம் செலுத்திப் பராமரித்து வந்தார்.

ஒருநாள் கலைக்கூடத்தில் வேலைசெய்து வந்த பணியாளர் ஒருவர் மூன்று சிற்பங்களில் ஒன்றைத் தெரியாமல் உடைத்துவிட்டார். இதை அறிந்து வெகுண்டெழுந்த மன்னர் சிற்பத்தை உடைத்த பணியாளரைத் தூக்கிலிடுமாறு உத்தரவிட்டார். தூக்கிலிடப்படுவதற்குச் சிறிதுநேரத்திற்கு முன்பாக அந்தப் பணியாளர் மீதமிருந்த இரண்டு சிற்பங்களையும் உடைத்துப் போட்டார்.

இதை அறிந்த மன்னர் இன்னும் சினமடைந்தவராய்ப் பணியாளரை அழைத்து, “உனக்கு என்ன பைத்தியமா பிடித்துவிட்டது, எதற்காக நீ எஞ்சி இருந்த இரண்டு சிற்பங்களையும் உடைத்தாய்?” என்று சீறினார். அதற்குப் பணியாளர் அவரிடம், “மன்னா! சிற்பங்கள் என்றென்றைக்கும் இருப்பவை அல்ல, அவை என்றாவது ஒருநாள் அழியத்தான் போகின்றது. ஒரு சிற்பத்தை நான் உடைத்திட்டேன் என்பதற்காக எனக்குத் தூக்குத் தண்டனை விதித்திருக்கிறீர்கள். மீதமுள்ள இரண்டு சிற்பங்களை யார் வேண்டுமானாலும் என்றாவது ஒருநாள் தெரியாமல் உடைத்து, மரணதண்டனைக்கு உள்ளாகலாம் அல்லவா! அப்படியெல்லாம் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஏற்கெனவே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நான் அவற்றை வேண்டுமென்றே உடைத்தேன். மேலும் உயிரற்ற சிற்பங்களுக்காக உயிருள்ள என்னைக் கொல்லக்கூடாது என்பதற்காகத்தான்” என்றார். அப்பொழுதுதான் மன்னருக்குத் தன் தவறு புரிந்தது. ஆகையால் அவர் அந்தப் பணியாளரை விடுதலை செய்தார்.

ஆம், இந்த நிகழ்வில் வரும் மன்னர் நீதி வழுவாத மன்னராக இருந்தாலும், அவர் மனிதர் என்பதால் நீதி வழுவும் நிலை ஏற்பட்டது. ஆனால், ஆண்டவர் அப்படிக் கிடையாது. அவர் என்றென்றைக்கும் நீதி வழுவாமல் தீர்ப்பிடக்கூடியவர். அத்தகைய செய்தியை எடுத்துரைக்கும் இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலைக் குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பிறகு சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்த யூதா நாட்டு மக்கள் உருக்குலைந்து போயிருந்த எருசலேம் திருக்கோயிலைக் கட்டி முடித்த பின் பாடிய பாடல்தான் திருப்பாடல் 96 என்று சொல்வர்.

இத்திருப்பாடல், “ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்” என்று தொடங்கி,. நாம் ஏன் ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாட வேண்டும் என்கிறது ஆண்டவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். அதனால் ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடவேண்டும். இத்திருப்பாடல் மெசியாவாம் இயேசுவோடு நெருங்கிய தொடர்புடையது. காரணம், அவரே மக்களுக்கு நீதி வழுவாது தீர்ப்பிடுகின்றவர். ஆதலால், நாம் அவரை ஏற்றுக்கொண்டு, அவர் வழியில் நடப்போம்.

சிந்தனைக்கு:

 நீதி ஆண்டவரோடு தொடர்புடையது என்பதால், நீதியோடு நடப்பவர்கள் ஆண்டவரின் மக்கள்

 மண்ணுலகை ஆள்பவர்கள் மக்களை நீதியோடும் நேர்மையோடும் ஆள நாம் கடவுளிடம் மன்றாடுவோம்.

 நம்மோடு இருப்பவர்களுக்கு நாம் உரிய நீதியை வழங்குவோம்.

இறைவாக்கு:

‘ஆண்டவர் நீதியின் கடவுள்’ (எசா 30:18) என்பார் இறைவாக்கினர் எசாயா. எனவே, நாம் நீதியின் கடவுள் நம்மை ஆள்வதற்கு, அவரது ஆட்சி மலர வேண்டி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.