07 டிசம்பர் 2021, செவ்வாய்

“நீங்கள் வழிதவறிச் செல்லும் ஆட்டைத் தேடிச் செல்பவரா?”

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை


I எசாயா 40: 1-11
II மத்தேயு 18: 12-14

“நீங்கள் வழிதவறிச் செல்லும் ஆட்டைத் தேடிச் செல்பவரா?”

தொலைந்து போன நாய்க்குட்டி:


சிறுவன் ஒருவன் ஆசை ஆசையாய் ஒரு நாய்க்குட்டி வளர்த்து வந்தான். அதனுடனேயே அவன் தன்னுடைய பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டான். ஒருநாள் அவன் பள்ளிக்கூடம் விட்டு, வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, வீட்டில் இருந்த அவனுடைய நாய்க்குட்டி காணானது கண்டு பதறிப் போனான். வீட்டுத் தோட்டத்தில் தேடித் பார்த்தான், நாய்க்குட்டி அங்கு இல்லை. பக்கத்து வீட்டில் இருந்தவர்களிடம் அவன் விசாரித்துப் பார்த்தான். “எதுவும் எங்களுக்குத் தெரியாது” என்று அவர்கள் கைவிரித்து விட்டார்கள். இதனால் அவன் மிகவும் கலக்கத்தோடு தெருவெங்கும் தன்னுடைய நாய்க்குட்டியைத் தேடித் பார்த்தான். எங்கும் காணக் கிடைக்கவில்லை.

இதனால் அவன் ‘சாலையில், யாருடைய வண்டியிலாவது சிக்கி அடிபட்டு இறந்துவிட்டதோ?’ என நினைத்துக்கொண்டு, தன்னுடைய வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த சாலைக்கு வேகமாக வந்தான். அங்கே சாலையோரத்தில் அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரரின் அருகில் அவனுடைய நாய்க்குட்டி இருப்பதைக் கண்டு அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

பின்னர் அவன் அந்தப் பிச்சைக்காரரின் அருகில் சென்று, “இது என்னுடைய நாய்க்குட்டி; எனக்கு வேண்டும்” என்று தயக்கத்தோடு கேட்டான். அதற்கு அந்தப் பிச்சைக்காரர், “சாலையில் இது இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தது. வண்டியில் அடிபட்டுவிடக்கூடாது என்பதற்காக நான்தான் இதைப் பிடித்து வந்து என்னோடு வைத்திருக்கிறேன். இந்தா வாங்கிக்கொள்” என்று, நாய்க்குட்டியை அவனிடம் கொடுத்தான். அவனோ அவருக்குப் புன்னகையைப் பரிசாக அளித்துவிட்டு மிகுந்த உற்சாகத்தோடு வீடு திரும்பினான்.

ஆம், தொலைந்து போனதை அல்லது வழி தவறிப் போனதைத் தேடிக் கண்டடையும்போது, அதிலுள்ள மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை. நற்செய்தியில் இயேசு ஒருவரும் நெறி தவறிப் போய்விடக்கூடாது என்ற உண்மையை உணர்த்த காணாமல் போன ஆடு உவமையைச் சொல்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

தங்களை எகிப்திலிருந்து விடுவித்து, பாலும் தேனும் பொழிகின்ற கானான் நாட்டில் குடியமர்த்திய ஆண்டவராகிய கடவுளுக்கு இஸ்ரயேல் மக்கள் உண்மையாய் இருந்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு இல்லாமல் வேற்று தெய்வங்களை வழிபட்டார்கள். இதனாலேயே அவர்கள் நாடு கடத்தப்பட்டு அன்னிய அடிமைகளாய் வாழ்ந்து, பலவிதமான துன்பங்களை அனுபவித்தார்கள். இத்தகைய சூழ்நிலையில் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக, “ஆறுதல் கூறுங்கள்” என்று சொல்லி, “அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் கையில் இரு மடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்” என்கிறார். இது குறித்து நாம் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம்.

நற்செய்தியில் இயேசு வழி தவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்லும் ஆயன் உவமையைக் கூறுகின்றார். இயேசு இந்த உவமையின் வழியாக, யாரும் வழிதவறிப் போய்விடக் கூடாது என்று உண்மையை விளக்கிக் கூறுகின்றார். கடவுளுக்கு நாம் ஒவ்வொருவருமே விலை மதிப்பில்லாதவர்கள். அதனாலேயே அவர் நம்மைத் தேடி வருகின்றார். இந்த உண்மையை உணர்ந்தவர்களாய் நாம் அவரை அணுகிச் செல்வோம்.

சிந்தனைக்கு:

 நன்மையை விட தீமை கண்களுக்குப் பளபளப்பாக இருப்பதால் பலரும் தீமையில் விழுந்துவிடுகின்றார்கள்.

 மனிதர்கள் தாங்கள் விதைத்ததையே அறுவடை செய்கிறார்கள்.

 மன்னிப்பதில் கடவுளுக்கு நிகர் யாரும் இல்லை. அதனால் நாம் அவரை அங்கிச் சென்று, அவரது மன்னிப்பைப் பெறுவோம்.

இறைவாக்கு:

‘என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன்; மதிப்பு மிக்கவன்’ (எசா 43:4) என்பார் ஆண்டவர். எனவே, கடவுளுடைய பார்வைக்கு மிகவும் மதிப்பு மிக்கவர்களாய் இருக்கும் நாம், அவரது பேரன்பை உணர்ந்து, அவரிடம் திரும்பி வந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.