07 டிசம்பர் 2021, செவ்வாய்

மறைவல்லுநர் - பொது

முதல் வாசகங்கள்

பழைய ஏற்பாட்டிலிருந்து

1

ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 11-14

அந்நாள்களில்

கடவுள் சாலமோனிடம், “நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை. அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன்.

இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான். மேலும், உன் தந்தை தாவீதைப் போல் நீயும் என் வழிகளில் நடந்து, என் நியமங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடித்து வந்தால், உனக்கு நீண்ட ஆயுளையும் வழங்குவேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

2

உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக ஞானத்தின் மீது அன்புகொண்டேன்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 7-10, 15-16

நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக் கல்லும் அதற்கு ஈடில்லை; அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்குமுன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும்.

உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன் மீது அன்புகொண்டேன்; ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது.

கடவுளது திருவுளத்திற்கு ஏற்பப் பேசவும், நான் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு ஏற்பச் சிந்திக்கவும், கடவுள் எனக்கு அருள்புரிவாராக! ஏனெனில் ஞானத்துக்கு அவரே வழிகாட்டி, ஞானிகளைத் திருத்துகிறவரும் அவரே. நாமும் நம் சொற்களும் அவருடைய கைகளில் இருக்கின்றோம். அதுபோல் எல்லா அறிவுத்திறனும் கைத்திறனும் அவருடைய கைகளில் உள்ளன.

ஆண்டவரின் அருள்வாக்கு.

3

அவர்கள் அருந்த, அறிவுக்கூர்மை எனும் உணவை ஞானம் கொடுக்கும்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 15: 1-6

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் இவற்றையெல்லாம் செய்வார்கள்; திருச்சட்டத்தைக் கற்றுத் தேர்ந்தவர்கள் ஞானத்தை அடைவார்கள். தாய் போன்று ஞானம் அவர்களை எதிர்கொள்ளும்; இளம் மணமகள் போல் அவர்களை வரவேற்கும்.

அறிவுக்கூர்மை எனும் உணவை அவர்கள் அருந்தக் கொடுக்கும்; ஞானமாகிய நீரைப் பருக அளிக்கும். அவர்கள் அதன்மீது சாய்ந்து கொள்வார்கள்; விழ மாட்டார்கள்; அதைச் சார்ந்து வாழ்பவர்கள் இகழ்ச்சி அடைய மாட்டார்கள். அடுத்திருப்பவருக்கு மேலாக அது அவர்களை உயர்த்தும்.

சபை நடுவில் பேச நாவன்மை நல்கும். அவர்கள் அக்களிப்பையும் மகிழ்ச்சியின் முடியையும் கண்டடைவார்கள்; நிலையான பெயரை உரிமையாக்கிக் கொள்வார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

4

மறைநூல் அறிஞர்கள் அறிவுக்கூர்மையால் நிரப்பப்படுவார்கள்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 39: 6-10

மாண்புமிகு ஆண்டவர் விரும்பினால், மறைநூல் அறிஞர்கள் அறிவுக்கூர்மையால் நிரப்பப்படுவார்கள்; தங்கள் ஞானத்தின் மொழிகளைப் பொழிவார்கள்; தங்கள் வேண்டுதலில் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவார்கள். தங்கள் அறிவுரையையும் அறிவாற்றலையும் நேரிய வழியில் செலுத்துவார்கள்; ஆண்டவருடைய மறைபொருள்களைச் சிந்தித்துப் பார்ப்பார்கள்.

தாங்கள் கற்றறிந்த நற்பயிற்சியை விளக்கிக் காட்டுவார்கள்; ஆண்டவருடைய உடன்படிக்கையின் திருச்சட்டத்தில் பெருமை கொள்வார்கள். பலர் அவர்களுடைய அறிவுக் கூர்மையைப் பாராட்டுவர்; அவர்களது புகழ் ஒருநாளும் நினைவிலிருந்து அகலாது; அவர்களுடைய நினைவு மறையாது; தலைமுறை தலைமுறைக்கும் அவர்களது பெயர் வாழும்.

நாடுகள் அவர்களது ஞானத்தை எடுத்துரைக்கும். மக்கள் சபையும் அவர்களது புகழ்ச்சியை அறிவிக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பாஸ்கா காலத்தில்

முதல் வாசகங்கள்

புதிய ஏற்பாட்டிலிருந்து

1

இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவும் ஆக்கினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14a, 22-24, 32-36

பெந்தக்கோஸ்து நாளன்று பேதுரு பதினொருவருடன் சேர்ந்து எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்ல செயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே. கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார்மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.

கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். அவர் கடவுளின் வலப் பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார்.

நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான். விண்ணுலகிற்கு உயர்த்தப் பட்டவர் தாவீது அல்ல. ஏனெனில், ‘ஆண்டவர் என் தலைவரிடம், “நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” எனக் கூறினார்’ என்று அவரே சொல்கிறாரே.

ஆகையால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவும் ஆக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

2

இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக வாக்குறுதியை நிறைவேற்றினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 26-33

அந்நாள்களில்

பவுல் பிசிதியாவிலுள்ள அந்தியோக்கிய நகர தொழுகைக் கூடத்தில் கூறியது: சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.

எருசலேமில் குடியிருக்கும் மக்களும் அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறியவில்லை; ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைப் புரிந்துகொள்ளவில்லை; ஆயினும் அவருக்கு அவர்கள் தீர்ப்பளித்த போது அவ்வார்த்தைகள் நிறைவேறின. சாவுக்குரிய காரணம் எதுவும் அவரிடம் இல்லாதிருந்தும், அவரைக் கொல்ல அவர்கள் பிலாத்திடம் கேட்டார்கள். மறைநூலில் அவரைப் பற்றி எழுதியுள்ள அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தார்கள். பின்பு அவரைச் சிலுவையிலிருந்து இறக்கிக் கல்லறையில் வைத்தார்கள்.

ஆனால் இறந்த அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார். அவர் கலிலேயாவிலிருந்து தம்முடன் எருசலேம் வந்தவர்களுக்குப் பல நாள்கள் தோன்றினார். அவர்கள் இப்போது அவர்தம் சாட்சிகளாக மக்கள்முன் விளங்குகின்றார்கள்.

இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பிள்ளைகளாகிய நமக்கென நிறைவேற்றினார். இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி. இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில், ‘நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்’ என்று எழுதப்பட்டுள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்கள்

1

திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: 9b)

பல்லவி: ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை நீதியானவை.

அல்லது: (யோவா 6: 63b): ஆண்டவரே, உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.

7
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி

8
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி

9
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி

10
அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலை மிக்கவை; தேனினும், தேனடையினின்று சிந்தும் தெளிதேனினும் இனிமையானவை. - பல்லவி

2

திபா 37: 3-4. 5-6. 30-31 (பல்லவி: 30a)

பல்லவி: நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்.

3
ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ்.
4
ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். - பல்லவி

5
உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
6
உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். - பல்லவி

30
நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும்.
31
கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை. - பல்லவி

3

திபா 119: 9-10. 11-12. 13-14 (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.

9
இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?
10
முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலகவிடாதேயும். - பல்லவி

11
உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.
12
ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும். - பல்லவி

13
உம் வாயினின்று வரும் நீதித்தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.
14
பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவது போல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். - பல்லவி

இரண்டாம் வாசகங்கள்

1

மடமை என்று கருதப்பட்ட நற்செய்தி வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18-25

சகோதரர் சகோதரிகளே,

சிலுவை பற்றிய செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.

ஏனெனில், “ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. இவ்வுலகைச் சார்ந்த ஞானி எங்கே? அறிவாளி எங்கே? வாதிடுவோர் எங்கே? இவ்வுலக ஞானம் மடமை எனக் கடவுள் காட்டிவிட்டாரல்லவா?

கடவுளுடைய ஞானத்தால் அவரை அறிந்துகொள்ள முடியும். ஆனால் உலகினர் தம் ஞானத்தால் கடவுளை அறிந்துகொள்ளவில்லை. எனவே மடமை என்று கருதப்பட்ட நற்செய்தியைப் பறைசாற்றியதன் வழியாக நம்பிக்கை கொண்டோரை மீட்கக் கடவுள் திருவுளம் கொண்டார்.

யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக் கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்.

ஏனெனில் மனித ஞானத்தை விடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையை விட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

2

மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப் பற்றியே நாங்கள் பேசுகிறோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-10a

சகோதரர் சகோதரிகளே,

கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை.

நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறிய வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே.

எனினும் முதிர்ச்சி பெற்றவர்களோடு நாங்கள் ஞானத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் இது உலக ஞானம் அல்ல; உலகத் தலைவர்களின் ஞானமும் அல்ல. அவர்கள் அழிவுக்குரியவர்கள். வெளிப்படுத்தப் படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப் பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது. இவ்வுலகத் தலைவர்கள் எவரும் அதை அறிந்துகொள்ளவில்லை. அறிந்திருந்தால், அவர்கள் மாட்சிக்குரிய ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள். ஆனால் மறைநூலில் எழுதியுள்ளவாறு, “தம்மிடம் அன்பு கொள்ளுகிறவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை; செவிக்கு எட்டவில்லை; மனித உள்ளமும் அதை அறியவில்லை.” இதைக் கடவுள் தூய ஆவியாரின் வழியாக நமக்கு வெளிப்படுத்தினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

3

நாமோ கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 10b-16

சகோதரர் சகோதரிகளே,

தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார். மனிதரின் உள்ளத்தில் இருப்பதை அவருள் இருக்கும் மனமே அன்றி வேறு எவரும் அறிய முடியாது அன்றோ! அவ்வாறே, கடவுள் உள்ளத்தில் இருப்பதை அவர்தம் ஆவியே அன்றி வேறு எவரும் அறியார்.

ஆனால், நாம் இவ்வுலக மனப்பாங்கைப் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக, தூய ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுள்ளோம். இவ்வாறு கடவுள் நமக்கு அருளிய கொடைகளைக் கண்டுணர்ந்து கொள்கிறோம். ஆவிக்குரியவர்களுக்கு ஆவிக்குரியவற்றைப் பற்றி விளக்கிக் கூறும்போது நாங்கள் மனித ஞானத்தால் கற்றுக்கொண்ட சொற்களைப் பேசுவதில்லை; மாறாக, தூய ஆவியார் கற்றுத்தரும் சொற்களையே பேசுகிறோம்.

மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. அவை அவருக்கு மடமையாய்த் தோன்றும். அவற்றை அவரால் அறிந்து கொள்ளவும் முடியாது. ஏனெனில் அவற்றைத் தூய ஆவியின் துணை கொண்டே ஆய்ந்துணர முடியும். ஆவிக்குரியவரோ அனைத்தையும் ஆய்ந்துணர்வார். எவரும் அவரை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. “ஆண்டவருடைய மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்?”

நாமோ கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

4

கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு அறிவிக்க.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-12

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு அறிவிக்கவும், எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்குள் ஊழி காலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென யாவருக்கும் தெளிவுபடுத்தவும், இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையவனாகிய எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பல வகையில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான் வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு கடவுள் ஊழி காலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார். கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

5

இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், தம் மறையுடலைக் கட்டியெழுப்பவுமே கிறிஸ்து எங்களை ஏற்படுத்தினார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-7, 11-13

சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறை மகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

6

தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 13-14; 2: 1-3

அன்பிற்குரியவரே,

கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு என்னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள். நமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள்.

என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவின் அருளால் வலிமை பெறு. சான்றாளர் பலர் முன்னிலையில் நீ என்னிடம் கேட்டவற்றை, மற்றவர்களுக்குக் கற்பிக்கும் திறமையுள்ளவர்களும் நம்பிக்கைக்கு உரியவர்களுமாகிய மனிதரிடம் ஒப்படை.

கிறிஸ்து இயேசுவின் நல்ல படைவீரனைப் போன்று துன்பங்களில் பங்கு கொள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

7

நற்செய்தியாளனின் பணியை ஆற்று; உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5

அன்பிற்குரியவரே,

கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப்போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப் போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது: இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.

ஒரு காலம் வரும். அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்க மாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் தீய நாட்டங்களுக்கேற்பத் தங்களுக்கெனப் போதகர்களைத் திரட்டிக் கொள்வார்கள். உண்மைக்குச் செவிசாய்க்க மறுத்துப் புனைக் கதைகளை நாடிச் செல்வார்கள்.

நீயோ அனைத்திலும் அறிவுத் தெளிவோடு இரு; துன்பத்தை ஏற்றுக் கொள்; நற்செய்தியாளனின் பணியை ஆற்று; உன் திருத்தொண்டை முழுமையாய்ச் செய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலிகள்

1. மத் 5: 16

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.

2. மத் 23: 9a, 10b

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். அல்லேலூயா.

3. யோவா 6: 63b, 68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

4. யோவா 15: 5

அல்லேலூயா, அல்லேலூயா! நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

5. திப 16: 14b காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உம் திருமகன் கூறியதை ஏற்றுக்கொள்ளுமாறு எங்கள் உள்ளத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.

6. 1 கொரி 1: 18

அல்லேலூயா, அல்லேலூயா! சிலுவை பற்றிய செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை. அல்லேலூயா.

7. 1 கொரி 2: 7

அல்லேலூயா, அல்லேலூயா! வெளிப்படுத்தப்படாமல் மறை பொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப் பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது. அல்லேலூயா.

8.

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையே விதை; அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைந்தவனோ என்றென்றும் நிலைத்திருப்பான். அல்லேலூயா.

நற்செய்தி வாசகங்கள்

1

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-19

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின்மீதே வைப்பர். அப்பொழுது தான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.

திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்று வதற்கே வந்தேன். ‘விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

2

அதிகாரத்தோடு அவர்களுக்கு இயேசு கற்பித்தார்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்.

ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின் மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல் மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”

இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

3

புதியவையும் பழையவையும்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-52

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையே இருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”

“இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?” என்று இயேசு கேட்க, அவர்கள் “ஆம்” என்றார்கள்.

பின்பு அவர், “ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்” என்று அவர்களிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

4

நீங்கள் ஆசிரியர் என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 8-12

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நீங்கள் ‘ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள்.

இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.

நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.

உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.

தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

5

விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-10, 13-20

அக்காலத்தில்

இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது:

“இதோ, கேளுங்கள். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.

அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்துகொண்டு, உவமைகளைப் பற்றி அவரிடம் கேட்டார்கள்.

மேலும் அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறை வார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்.

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-9

அக்காலத்தில்

இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது:

“இதோ, கேளுங்கள். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

6

உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 43-45

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “கெட்ட கனி தரும் நல்ல மரமும் இல்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமும் இல்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாரும் இல்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாரும் இல்லை.

நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.