11 ஜூன் 2021, வெள்ளி

திருப்பலி முன்னுரை

இயேசுவின் திருஇதயம் பெருவிழா


திருப்பலி முன்னுரை


கல்லான இதயத்தைக் கரைத்து கனிவுள்ள இதயத்தை எம்முள் உருவாக்க தம் குருதியைச் சிந்தி, இதயத்தின் கருணையை வெளிப்படுத்திய நம் அன்பர் இயேசுவின் திரு இதயப் பெருவிழாத் திருப்பலிக்கு அன்புடனே அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இதயம் என்பது இரத்தத்தை உடலெங்கும் ஓடச் செய்யும் எந்திரம். இது அறிவியற்சிந்தனை. ஆனால் அகிலத்தை மீட்டெடுக்க, குருதிக்கொடை வழங்கி, இதயத்தை கிழித்தவர்களை இருகரம் கொண்டு அணைத்த இயேசுவின் அன்பு அறியப்பட்ட பின்புதான் இதயம் ஒரு அன்பின் ஆலயம் ஆனது. இது ஆன்மீகச் சிந்தனை. இதுவே நம் விசுவாசம். அத்தகைய விசுவாசத்தினை வார்த்தைகளால் அறிக்கையிடுவதைவிட இதயத்தின் வாஞ்சையால் அறிக்கையிடவே இன்று அழைக்கப்பட்டிருக்கிறோம்.

“என் இரக்கம் பொங்கி வழிகின்றது” என்று இறைவன் தம் மக்களாகிய இஸ்ரயேல் மக்கள் மீது வெளிப்படுத்திய பேரன்பை இன்றைய முதல் வாசகத்தில் ஓசேயா இறைவாக்கினர் எடுத்துரைக்கிறார். ஒரு தாய் தன் குழந்தையை எவ்வளவு அன்பாய், ஆசையாய் வளர்ப்பாளோ, அதே போல் இறைவனின் வழிநடத்துதல் தொடர்கிறது.

தவறுகள் அங்கீகரிக்கப்படும்போது
அராஜகம் மேலோங்குகிறது.
தவறுகள் கண்டிக்கப்படும்போது
செயல்கள் நேர்த்தியாக்கப்படுகிறது.

“என் இரக்கம் பொங்கி வழிகின்றது. என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்” என்கிறார் இறைவன். இத்தகைய இதயம் கொண்டவர்களாய் நாமும் வாழ்வோம்; இறைத்தன்மையை வெளிப்படுத்துவோம்.

இன்றைய நற்செய்தியில், இயேசுவின் மட்டற்ற அன்பு வெளிப்படுகிறது. பாவத்தை மீட்க பாவமற்ற இரத்தம் தெளிக்கப்படுகிறது. பிறப்பும் இறப்பும் பலருக்கு சாதாரண சம்பவம் தான். ஆனால் இயேசுவுக்கு காலத்தையே வெல்லும் வரலாறு. அளவற்ற அன்பு தான் அனைத்தையும் வென்று விட்டது. எருசலேமில் மட்டும் நின்றுவிடாமல், அகிலம் முழுவதும் ஆட்சி செய்கிறது.

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
உயிரும் உடம்பும் சேர்ந்த வாழ்வு அன்போடு பொருத்தி வாழும் வாழ்க்கையே என்பது இக்குறளின் பொருள்.

‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே’ என்றார் பாரதியார். திரு இதயப் பெருவிழா, ஆலய பிராத்தனையோடு நின்றுவிடாது, நம்மால் பலருக்கும் நம் வாழ்வால் அறிவிக்கப்பட வேண்டும். அத்தகைய எண்ணங்களை இதயத்தில் தாங்கி இப்பெருவிழாவை சிறப்புறச் செய்ய பலியில் இணைவோம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அளவற்ற செல்வமாகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க அழைப்பவரே எம் இறைவா!
திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, திரு அவைப் பணியாளர்கள், அழைப்பின் குரலுக்கு மகிமை சேர்க்கும் விதமாக நற்செய்திப் பணியை முதன்மையாக்கிப் பணி செய்திட வரம் அருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மாசில்லா இரத்ததால் உலகை மீட்டெடுத்தவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் தலைவர்கள், அதிகாரிகள் தன்னலம் பாராமல், சேவை மனப்பான்மையுடன் ஆட்சி செய்யவும், நாட்டின் வளர்ச்சியை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயலாற்றவும், விலையேற்றம் செய்து மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யாமல், அறிவின் துணை கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்த ஞானம் அருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பால் அகிலத்தை ஆள விரும்புபவரே எம் இறைவா!
குடும்பங்களில் அன்பு அதிகரிக்கவும், வீண் வாதங்களாலும், தேவையற்ற காரணங்களாலும், பிரிந்து கிடக்கும் உறவுகளுக்கிடையே அன்பால் இணைப்பு ஏற்படவும், பொறுமை, அன்பு, விட்டுக்கொடுத்தல் போன நல்குணங்கள் மேலோங்கி, பிரிந்து கிடக்கும் உறவுகள் ஒன்றாகிட வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. குணமாக்கும் வல்லவரே எம் இறைவா!
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோயின் தாக்கம் கட்டுப்படவும், நோயால் வாடுவோரின் உடல் நலம் சீராகி, நலம் பெறவும், இயல்பு வாழ்வு திரும்பி, தொழில்கள் சீராகி பொருளாதாரம் மேம்படவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.