11 ஜூன் 2021, வெள்ளி

இயேசுவின் திருஇதயம்

பெருவிழா

முதல் வாசகம்

என் உள்ளம் உன் பக்கம் திரும்பியுள்ளது.

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 11: 1, 3-4, 8c-9

ஆண்டவர் கூறியது:

இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள். பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்.

என் உள்ளம் அதை வெறுத்து ஒதுக்குகின்றது, என் இரக்கம் பொங்கி வழிகின்றது. என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்; எப்ராயிமை அழிக்கத் திரும்பிவரமாட்டேன்; நான் இறைவன், வெறும் மனிதனல்ல; நானே உங்கள் நடுவிலிருக்கும் தூயவர், ஆதலால், நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

எசா 12: 2-3. 4bcd. 5-6 (பல்லவி: 3)

பல்லவி: மீட்பருளும் ஊற்றினின்று அகமகிழ்வோடு முகந்து கொள்வீர்.

2
இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
3
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். - பல்லவி

4bcd
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர்செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். - பல்லவி

5
ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக.
6
சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். - பல்லவி

இரண்டாம் வாசகம்

அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-12, 14-19

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப்பற்றிய நற்செய்தியை பிற இனத்தாருக்கு அறிவிக்கவும், எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்குள் ஊழி காலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென யாவருக்கும் தெளிவுபடுத்தவும், இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையவனாகிய எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பலவகையில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான்வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு கடவுள் ஊழி காலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார். கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது.

இதன் காரணமாக, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன். அவருடைய அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூய ஆவி வழியாகத் தந்தருளுவாராக! நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன் மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக!

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 29ab

அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


அல்லது

1 யோவா 4: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 31-37

அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள்.

ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார் உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.

இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார். “எந்த எலும்பும் முறிபடாது” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் “தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்றுநோக்குவார்கள்” என்றும் மறைநூல் கூறுகிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

வாசகங்கள்



பிற நாட்கள்