11 ஜூன் 2021, வெள்ளி

“நான் நம்பிக்கையோடு இருந்தேன்”

பொதுக்காலம் பத்தாம் வாரம் வெள்ளிக்கிழமை


திருப்பாடல் 116: 10-11, 15-16, 17-18 (17a)

“நான் நம்பிக்கையோடு இருந்தேன்”

நெப்போலியன்மீது நம்பிக்கையோடு இருந்த படைத்தளபதி:


மாவீரன் நெப்போலியனுடைய படையில் இருந்த படைத்தளபதி நெப்போலியன்மீது மிகுந்த நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருந்தார். ஒருமுறை எதிரிநாட்டவரோடு நடந்த போரில் இவர் உடல் முழுவதும் பலத்த காயமடைந்தார்.

இதனால் இவர் ஒரு படைவீரரை நெப்போலியனிடம் அனுப்பி வைத்து, அவர் தன்னைப் பார்க்கவருமாறு கேட்டுக்கொண்டார். நெப்போலியனும் இவர் அழைத்ததும், இவர் இருந்த இடத்திற்கு வந்தார் சாவின் விளம்பில் இருந்த படைத்தளபதி நெப்போலியனின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, “தலைவரே! சாவின் விளம்பில் இருக்கும் என்னை நீங்கள்தான் காப்பாற்றவேண்டும்” என்று கெஞ்சி கேட்டார். அதற்கு நெப்போலியன் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்.

படைத்தளபதி அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு விடாமல், “நீங்கள் எவ்வளவு பெரிய மாவீரர்! உங்களால் எப்படியும் என்னைக் காப்பாற்ற முடியும். தயதுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சினார். அப்பொழுதும் நெப்போலியன் எதுவும் செய்ய முடியாமல், அமைதியாகவே இருந்தார். ஒருகட்டத்தில் நெப்போலியனால் தன்னைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்த படைத்தளபதி, “உங்களால் என்னைக் காப்பாற்ற முடியும் என்றிருந்தேனே! உங்களால் என்னைக் காப்பாற்றவே முடியாதா?” என்று அவநம்பிக்கையோடு தன் உயிரைத் துறந்தார்.

இந்த நிகழ்வில் வருகின்ற படைத்தளபதி நெப்போலியனால் தன் உயிரைச் சாவிலிருந்து காப்பாற்ற முடியும் என்று நம்பினார். அவரால் அது முடியவில்லை. ஆம், மனிதர்களால் நம் உயிரைச் சாவிலிருந்து காப்பாற்ற முடியாது; ஆனால், ஆண்டவரால் நம் உயிரைச் சாவிலிருந்து காப்பாற்ற முடியும். அதற்கு நாம் ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ள முடியும். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், “மிகவும் துன்புறுகிறேன் என்று சொன்னபொழுதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன்” என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 116, சாவினின்று தப்பியவர் ஆண்டவரை நோக்கிப் பாடும் பாடலாக இருக்கின்றது. இத்திருப்பாட்லைப் பாடியவர் யார் என்பதற்கான சரியான குறிப்பு இல்லை. ஆனால், இவர் ஆண்டவர்மீது ந்மபிக்கையோடு இருந்ததால், ஆண்டவர் இவரைச் சாவினின்று விடுவித்து, இவரது கண் கலங்காதபடியும், கால் இடறாதபடியும் செய்ததார். எனவே, இவர் ஆண்டவரை நோக்கி, “நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்” என்கிறார்.

மனிதர்களாகிய நமக்குப் பலரிடமிருந்தும் ஆபத்துகளும் துன்பங்களும் வரலாம். இத்தகைய தருணங்களில் நாம் ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையை இழக்காமல், அவரில் உறுதியாக இருந்தால், நாம் எத்தகைய இடர்கள் மற்றும் ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றப்படுவோம்.

சிந்தனைக்கு:

 மனிதர்மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புவதே நலம் (திபா 118: 8).

 நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான் (எசா 28: 16).

 நமது வாழ்வில் துன்பம் வருகின்றபொழுது மட்டுமல்லாமல், எல்லா வேளையிலும் ஆண்டவரிடம் நம்பிக்கை வைத்து வாழ்கின்றோமா? சிந்திப்போம்.

இறைவாக்கு:

‘ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோரை அவரது பேரன்பு சூழ்ந்து நிற்கும்’ (திபா 32: 10) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.