04 மே 2021, செவ்வாய்

பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் புதன்கிழமை


திருப்பாடல் 122: 1-2, 4-5 (1)

“அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்”

எப்படி இவ்வளவு நல்லவனாய் இருக்கின்றாய்?


ஜார்ஜ் என்றோர் இளைஞன் இருந்தான். இவன் இருந்த பகுதியில் யார் என்ன உதவி செய்யச் சொல்லிக் கேட்டாலும், அதைத் தட்டாமல், மனமுவந்து செய்தான். இவனுடைய வீட்டிற்குப் பக்கத்தில் மூதாட்டி ஒருத்தி இருந்தார். அவரும் ஜார்ஜிடம் உதவி கேட்டும்பொழுதெல்லாம், இவன் தட்டாமல் உதவி செய்வதைப் பார்த்துவிட்டு வியந்தாள்.

ஒருநாள் மூதாட்டி ஜார்ஜிடம், “ஜார்ஜ்! அது எப்படி உன்னால் மட்டும் எல்லாருக்கும் மனமுவந்து உதவி செய்ய முடிகின்றது?” என்றார். அதற்கு ஜார்ஜ் சிறிதும் தாமதியாமல் அவரிடம், “சிறுவயதில் என்னுடைய பெற்றோர் என்னை ஒவ்வொரு நாளும் கோயிலுக்குக் கூட்டிக் கொண்டு போவார்கள். கோயிலில் அருள்பணியாளர், ‘நம்மால் இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்யவேண்டும்’ என்று அடிக்கடி சொல்வார். அது என்னுடைய மனத்தில் அப்படியே பதிந்துவிட்டது. அதனால்தான் நான் என்னால் முடிந்தவரை பிறருக்கு மனமுவந்து உதவிகளைச் செய்துகொண்டிருகின்றேன்” என்றான்.

ஆம், கோயிலுக்குச் செல்வதால், அங்குப் போதிக்கப்படும் இறைவார்த்தையைக் கேட்பதால், ஒருவருடைய வாழ்வு எவ்வளவு சிறப்பாக இருக்கின்றது என்பதற்கு மேலே உள்ள நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், “அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்றோர் அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

திருப்பயணப் பாடல் என்று சொல்லப்படுகின்ற திருப்பாடல் 122, எருசலேம் திருக்கோயிலை நோக்கிச் செல்லும்போதோ அல்லது அங்கிருந்து இல்லத்திற்குத் திரும்பி வரும்போதோ பாடப்பட்ட ஒரு பாடல் எனச் சொல்லப்படுகின்றது. இத்திருப்பாடல், “அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்கிறது. காரணம், எருசலேம் திருக்கோயிலில் ஆண்டவராகிய கடவுள் வீற்றிருக்கின்றார். அவர் ஆற்றலின் ஊற்றானவர்; அடிமைத் தன வீடாகிய எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவித்தவர்; செங்கடலைக் கால் நனையாமல் கடக்கச் செய்தவர். மட்டுமல்லாமல், பத்துக் கட்டளைக் கொடுத்து இஸ்ரயேல் மக்கள் வாழ்வில் பல வல்ல செயல்களையும் நன்மைகளையும் செய்தவர். அப்படிப்பட்டவர் உறைந்திருக்கும் திருக்கோயிலுக்கு அகமகிழுந்து செல்ல வேண்டும் என்கிறார் திருப்பாடல் ஆசிரியர். இத்திருப்பாடல் தாவீது மன்னருக்கு உரியது என்றிருந்தாலும், இது வேறு ஒருவரால் பாடப்பட்டது எனச் சொல்லப்படுகின்றது.

இஸ்ரயேல் மக்கள் வாழ்வில் ஏராளமான நன்மைகளைச் செய்தது போன்று நம்முடைய வாழ்விலும் அவர் பல நன்மைகளைச் செய்திருப்பார். எனவே, நாமும் அவரைத் தொழ, அகமகிழ்வோடு அவரது இல்லத்திற்குச் செல்வோம்.

சிந்தனைக்கு:

 என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு (எசா 56: 7).

 அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள் (மத் 6: 33).

 நாம் ஆண்டவரின் இல்லத்திற்கு எத்தகைய மனநிலையோடு செல்கின்றோம்?

ஆன்றோர் வாக்கு:

‘கோயில் பாவிகளுக்கான மருத்துவமனை’ என்பார் திமொத்தி கெல்லர். எனவே, பாவிகள் யாவருக்கும் நலம் தரும் மருத்துவமனையாக இருக்கும் கோயிலும் அகமகிழ்வோடு சென்று, அங்குப் போதிக்கப்படும் இறைவார்த்தைக் கேட்டு, அதன்படி வாழ்ந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்