04 மே 2021, செவ்வாய்

இயேசு தரும் அமைதி

பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை


I திருத்தூதர் பணிகள் 14: 19-28
II யோவான் 14: 27-31b

இயேசு தரும் அமைதி

அமைதியைத் தந்த மரமே உயிரைப் பறித்தது:


ஒருவர் கடற்கரையோராமாய் இருந்த ஒரு குடிசையில் வாழ்ந்துவந்தார். அவருடைய வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தடியில்தான் அவர் இளைப்பாறினார்; அதுவே தனக்கு அமைதி தரும் இடம் என்று உறுதியாக நம்பினார். சில நேரங்களில் கடலில் கொந்தழிப்பு ஏற்பட்டுக் கடல்தண்ணீர் அவர் இருந்த பகுதிக்குள் வந்தது. அப்படிப்பட்ட சூழலிலும் அவர் வேறு எங்கும் அடைக்கலம் புகாமல், அந்த மரத்தில் ஏறித் தன்னைக் காத்துக்கொண்டார்.

ஒருமுறை கடலில் மிகப்பெரிய புயல் ஏற்பட்டது. இதை அறிந்து அவருடைய குடிசைக்கு அருகில் வாழ்ந்த எல்லாரும் பாதுகாப்பான இடத்திற்கு ஓடிவிட, இவர் மட்டும் தனது குடிசைக்கு அருகில் இருந்த மரத்தில் ஏறி அமர்ந்துகொண்டார். முடிவில் வேகமாக வந்த புயல், இவர் ஏறி அமர்ந்திருந்த மரத்தை வேரோடு சாய்க்க, அந்த மரம் இவர்மீது விழுந்து, இவரைக் கொன்றது.

ஆம், இந்த நிகழ்வில் வரும் மனிதர் எந்த மரம் தனக்கு இளைப்பாறுதலையும் அமைதியையும் அடக்கலமும் தரும் என்று நினைத்தாரோ, அந்த மரமே அவர்மீது விழுந்து அவருடைய உயிரைப் பறித்தது. இந்த உலகம் தரும் அமைதியும் இந்த மரம் தரும் அமைதியைப் போன்று நிலையில்லாததாக இருக்கின்றது. இத்தகைய சூழலில், இன்றைய நற்செய்தியில் இயேசு, “நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல” என்கிறார். இயேசு தரும் அமைதி எத்தகையது என்று நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

அமைதியின் அரசரான இயேசு (எசா 9: 6) தன் சீடர்களை விட்டுப் பிரியும் நேரத்தில் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான், “...நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல” என்பதாகும். இந்த உலகம் மயான அமைதியே உண்மையான அமைதி என நினைத்துக்கொண்டிருக்கின்றது. இயேசு தரும் அமைதி அத்தகையது அல்ல, அது நமது வாழ்வில் நாம் சந்திக்கக்கூடிய சவால்கள், போராட்டங்கள் ஆகியவற்றைத் துணிவோடு தாங்கிக்கொள்வதற்கான ஆற்றலைத் தருவது.

முதல்வாசகத்தில் பவுல் யூதர்களால் கல்லால் எறியப்பட்டபொழுதும் தன் முயற்சியிலிருந்து பின் வாங்காமல், ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்குத் தொடர்ந்து அறிவிக்கின்றார்; அவர்களை நம்பிக்கையில் திடப்படுத்துகின்றார். அத்தோடு அவர், “நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்” என்கிறார். இதுவே பவுல், இயேசு தந்த அமைதியைப் பெற்றுக்கொண்டதற்குச் சான்றாக இருக்கின்றது. நாமும் புனித பவுலைப் போன்று இயேசு தந்த அமைதியை அனுபவித்தவர்களாய், துன்பத்திலும் உறுதியாக இருப்போம்.

சிந்தனைக்கு:

 இயேசுவே நமக்கு அமைதியை அருள்பவர் (எபே 2: 14).

 அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே – அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ்.

 நாம் அமைதியின் தூதர்களாய் இருக்கின்றோமா?

ஆன்றோர் வாக்கு:

‘பொருளாதார, ஆன்மிக வறுமையை ஒழிக்கவும், அமைதியைக் கட்டியெழுப்பவும் உறவுப் பாலங்களாய் உருவாக்கவும் நாடுகள் முயற்சிக்க வேண்டும்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் இயேசுவின் அமைதியை உணர்ந்தவர்களை அமைதியைக் கட்டியெழுப்பி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்