04 மே 2021, செவ்வாய்

“உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு”

பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை


திருப்பாடல் 145: 10-11, 12-13, 21

“உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு”

உலக அரசுகளின் நிலையைத் தன்மை:


ஒன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மனியை ஆண்டவர் சார்லஸ் (747-814) என்ற மாமன்னர். மக்களுக்கு நல்லாட்சி வழங்கிய இவர் இறந்தபொழுது, இவருடைய ஆதரவாளர்கள், இவருடைய தலையில் கிரீடத்தை வைத்து, கையில் செங்கோலை வைத்து அடக்கம் செய்தார்கள். இதைப் பார்த்துவிட்டு ஒருசிலர், “இறந்த பிறகு இவருக்குத் தலையில் கிரீடமும் கையில் செங்கோலும் தேவையா?” என்று கேலி செய்தார்கள்.

ஆம், இந்த மண்ணுலகத்தில் ஒருவர் என்னதான் நல்லாட்சியே வழங்கினாலும், அவருடைய ஆட்சி என்றுமே நிலைத்திருப்பதில்லை; ஆனால், ஆண்டவருடைய ஆட்சி, அவரது அரசு அப்படிக் கிடையாது. அவரது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு. அதைத்தான் இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இன்று நாம் பாடக்கேட்ட திருப்பாடல் 145, புனித ஆரிஜனால், “மிகச் சிறந்த நன்றிப் பாடல்” என்று சொல்லப்படுகின்றது. புனித அகுஸ்தின் இதை, “எல்லாச் சூழல்களுக்கும் நிகழ்வுகளுக்கும் பொருத்தமான சிறந்த இறை வேண்டல்” என்று கூறுவார். இவர்களுடைய கூற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்பொழுது திருப்பாடல் 145 எவ்வளவு சிறப்பான பாடல் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

` இத்திருப்பாடலின் மையமே 13 வது இறைவார்த்தையில் அடங்கியுள்ளது என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த இறைவார்த்தை கடவுளின் அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு என்றும், தலைமுறை தலைமுறையாக உள்ளது என்றும், ஆண்டவர் தம் வாக்குறுதிகள் அனைத்திலும் உண்மையானவர் என்றும், தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர் என்றும் கூறுகின்றது.

இந்த மண்ணுலகத்தில் எத்தனையோ அரசுகள் தோன்றியிருக்கலாம். சில காலங்களிலேயே அவை மக்களுடைய மனங்களை விட்டு மறைந்திருக்கலாம்; ஆனால், கடவுளின் அரசு அல்லது இறையரசு அப்படியில்லை. அது எல்லாக் காலங்களிலும் நிலைத்திருக்கும் அரசு. ஏனெனில் அது உண்மையின் அரசு, நீதியின் அரசு. இத்தகைய அரசில் நாம் பங்கு பெற வேண்டும் என்றால், உண்மையாய், தூய்மையாய் இருக்கவேண்டும் என்பது நியதி.

சிந்தனைக்கு:

 ஆண்டவர் ஆட்சி செய்கிறார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார் (திபா 93: 1).

 அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது (லூக் 1: 32).

 என்றுமுள்ள கடவுளின் ஆட்சியில் நாம் பங்குபெற கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ முயற்சி செய்வோம்.

இறைவாக்கு:

‘அவரது திருப்பெயரோ அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்’ (எசா 9: 6) என்கிறது இறைவார்த்தை. எனவே, அமைதியின் அரசராம் இயேசுவின் ஆட்சியுரிமையில் நாம் பங்குபெற அவருக்கு உகந்த வழியில் நடந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்