14 சனவரி 2021, வியாழன்

“ஆண்டவரின் குரலுக்குச் செவிசாயுங்கள்”

பொதுக்காலம் முதல் வாரம் வியாழக்கிழமை


திருப்பாடல் 95: 6-7a, 7b-9, 10-11 (7,8)

“ஆண்டவரின் குரலுக்குச் செவிசாயுங்கள்”


அறிவுரையின்படி நடக்காத மாணவி:

பன்னிரண்டாம் வகுப்புப் படித்து வந்த இரண்டு கிறிஸ்தவ மாணவிகள் கல்வியாண்டின் இறுதியில் இவ்வாறு பேசிக்கொண்டார்கள். “இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் நம்முடைய பங்குப் பணியாளரைச் சந்தித்தேன். அவர் எனக்குப் பல நல ஆலோசனைகளை வழங்கினார். அவை யாவும் மிகவும் புதிதாக இருந்தன” என்றாள் ஒரு மாணவி. அதற்கு இன்னொரு மாணவி, “பங்குப் பணியாளர் உனக்கு பல நல்ல ஆலோசனைகளை வழங்கினார் என்கின்றாய், அவற்றை உன்னுடைய வாழ்வில் செயல்படுத்தினாயா?” என்றாள்.

“பங்குப் பணியாளர் எனக்கு வழங்கிய ஆலோசனைகளை எல்லாம் என்னுடைய வாழ்வில் செயல்படுத்த நினைத்தேன்; ஆனால், மற்ற செயல்களில் நான் கவனம் செலுத்தியதால், பங்குப்பணியாளர் எனக்கு வழங்கிய ஆலோசனைகளை என்னுடைய வாழ்வில் செயல்படுத்த முடியாமலேயே போய்விட்டது” என்று வருத்தத்தோடு சொன்னாள் முதல் மாணவி.

பலரும் இந்த நிகழ்வில் வருகின்ற மாணவியைப் போன்றுதான், பெரியவர்களின் அறிவுரையை அலல்து கடவுளின் வார்த்தையைத் தங்களுடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வதே இல்லை. இந்நிலையில் இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல் நமது உள்ளத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாமல், கடவுளின் குரலுக்குச் செவிசாய்த்து, அதன்படி வாழவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

திருப்பாடல் தொண்ணூற்று ஐந்திலிருந்து பாடப்பட்ட இன்றைய பதிலுரைப்பாடல், தாவீது மன்னர் பாடிய பாடல் என்று சொல்லப்படுகின்றது. இதை எபிரேயர் திருமுகம் 4: 7 இல் இடம்பெறும் வார்த்தைகள் உறுதிசெய்கின்றன. இத்திருப்பாடல் இரு பகுதிகளைக் கொண்டிருக்கின்றது. இதன் முதற்பகுதி - இது இன்றைய பதிலுரைப்பாடலில் இடம்பெற வில்லை – ஆண்டவரைப் புகழ்ந்து பாட வேண்டும் என்றும், இரண்டாவது பகுதி ஆண்டவரைச் சோதிக்காமல், அவருடைய குரலுக்குச் செவிகொடுத்து வாழவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது.

இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் நடந்து வந்தபொழுது மெரிபா என்ற இடத்தில் தண்ணீர் கேட்டு ஆண்டவரைச் சோதித்தார்கள் (விப 17: 1-7; எண் 20: 1-13). இதனால் அவர்கள் கடவுள் அளிக்க இருந்த கானான் நாடாம் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையாமலே போனார்கள். ஆதலால், நாம் கடவுளின் குரலுக்குச் செவிகொடுக்க வேண்டுமே ஒழிய, அவரைச் சோதிக்கக் கூடாது

சிந்தனைக்கு:

 செவிகொடுத்தல் என்பது கடவுளின் வார்த்தையைக் கேட்பது மட்டுமல்ல, அவரது வார்த்தையின் படி நடப்பது.

 ஒருவரது உயர்வும் தாழ்வும் அவர் கடவுளின் வார்த்தையைக் கேட்டு நடப்பதைப் பொறுத்தே உள்ளது.

 சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலிலும் உண்மையான அன்பை வெளிப்படுத்துவோம் (1 யோவா 3: 18)

இறைவாக்கு:

‘நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ்நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களா! இதனால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்’ (இச 6: 2) என்பார் ஆண்டவர். எனவே, நாம் கடவுளின் கட்டளைக்குச் செவிகொடுத்து, அதன்படி வாழ்ந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.