14 சனவரி 2021, வியாழன்

“திட நம்பிக்கை கொண்டு வாழ்வோம்”

பொதுக்காலம் முதல் வாரம் வியாழக்கிழமை


I எபிரேயர் 3: 7-14
II மாற்கு 1: 40-45

“திட நம்பிக்கை கொண்டு வாழ்வோம்”


நம்பிக்கையோடு வேண்டிவந்த பெண்மணி:

அமெரிக்காவில் ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். இதில் மனைவி கடவுள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். கணவரோ அவருக்கு முற்றிலும் மாறாக கடவுள் நம்பிக்கை இல்லாது இருந்தார். மனைவி தன் கணவர் எப்படியாவது மனம்மாறி, ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து மன்றாடி வந்தார்.

இந்நிலையில் ஒருநாள் கணவர் திடீரென நோய்வாய்ப்பட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர், “உங்கள் கணவர் ஏற்கெனவே இறந்துவிட்டார்” என்று மனைவியிடம் சொன்னார். இதைக் கேட்ட மனைவி, “என்னுடைய கணவர் இறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், என் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, ‘உன் கணவர் இறப்பதற்குள் என்மீது நம்பிக்கை கொள்வார்’ என்று எனக்கு வெளிப்படுத்தியிருக்கின்றார்” என்றார். இப்படிச் சொல்லிவிட்டு, மனைவி தன் கணவரின் தலைமாட்டில் முழந்தாள் படியிட்டு, கடவுளிடம் மிக உருக்கமாக வேண்டத் தொடங்கினார். அவர் இவ்வாறு கடவுளிடம் வேண்டிய ஒருசில மணிநேரங்களில், அவருடைய கணவர் உயிரோடு படுக்கையிலிருந்து எழுந்தார். இதைக் கண்டு, அங்கிருந்த மருத்துவர் உட்பட எல்லாரும் மலைத்துப் போயினர். இதற்குப் பின் அந்தப் பெண்மணியின் கணவர், தன்னுடைய உயிரைத் திருப்பித் தந்த இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டார்.

மனைவியின் நம்பிக்கை நிறைந்த வேண்டுதலால், அவருடைய கணவர் உயிர்பெற்று எழுந்தது மட்டுமல்லாமல், ஆண்டவர்மீது நம்பிக்கையும் கொண்டார். இன்றைய இறைவார்த்தை கடவுள்மீது கொள்ளும் திட நம்பிக்கையினால் ஒருவர் பெறும் நன்மைகளைப் பற்றிக் கூறுகின்றது.

திருவிவிலியப் பின்னணி

எபிரேயர் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம் கொண்டோர் வாழும் கடவுளை விட்டு விலகுவர்; கடவுளிடம் திட நம்பிக்கை கொண்டிருக்கும் நல்ல உள்ளங்கள் கிறிஸ்துவின் பங்காளிகளாவர் என்கின்றார். ஆம், ஒருவர் கடவுளிடம் நம்பிக்கை கொள்ளும்போது கிறிஸ்துவின் பங்காளியாவதோடு அல்லாமல், அவர் கடவுள் அளிக்கும் நன்மைகளைப் பெறுகின்றார். நற்செய்தியில், ‘இயேசுவிடம் சென்றால் அவர் நலம் தருவார்’ என்ற நம்பிக்கையோடு வருகின்ற தொழுநோயாளருக்கு இயேசு நலம் தருகின்றார். ஆகவே, கடவுளிடமும் அவர் மகன் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு, அவர் தருகின்ற நன்மைகளைப் பெறுவோம்

சிந்தனைக்கு:

 நம்பிக்கையிலான்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க முடியாது (எபி 11: 6)

 இயேசுவால் நமக்கு நலம் தரமுடியும் என்பதை நம்புகின்றோமா?

 நாம் கடவுளை விட்டு விலகிச் செல்பவரா? அல்லது அவரை நெருங்கிச் செல்பவரா?

இறைவாக்கு:

‘நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்’ (மாற் 9: 23) என்பார் இயேசு. எனவே, நாம் இயேசுவின்மீது திடநம்பிக்கை கொண்டு, அவரை அணுகிச் சென்று, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.