16 செப்டம்பர் 2020, புதன்

லூக்கா 7: 31-35

பொதுக்காலம் இருபத்து நான்காம் வாரம் புதன்கிழமை

லூக்கா 7: 31-35

குறைகூறுவதைக் குலத்தொழிலாகக் கொண்டு வாழ்பவர்கள்

நிகழ்வு



ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்டில் இளைஞன் ஒருவன் இருந்தான். ஒருநாள் இவன் அருகில் இருந்த காவல்நிலையத்திற்குச் சென்று, “எனக்கு இந்த நகரில் வாழப் பிடிக்கவில்லை. அதனால் நான் இங்கிருந்து இடத்தைக் காலி செய்துவிட்டு, இந்த நாட்டின் மேற்குப் பகுதிக்குச் சென்று வாழலாம் என்று இருக்கிறேன். அதற்கு நீங்கள் எனக்கு அனுமதி தாருங்கள்” என்றான்.

“நீ ஏன் இங்கிருந்து இடத்தைக் காலி செய்கின்றாய்...? ஒருவேளை இங்கு நீ மகிழ்ச்சியாக இல்லையா?” என்றார் காவல்துறை அதிகாரி. இதற்கு அந்த இளைஞன், “என்னால் புகார் அளிக்க முடியவில்லை” என்றான். மீண்டுமாகக் காவல்துறை அதிகாரி அவனிடம், “நீ இங்கு செய்துகொண்டிருக்கும் வேலை உனக்குப் பிடிக்கவில்லையா?” என்று கேட்க, அவன், “என்னால் புகார் அளிக்க முடியவில்லை” என்றான். காவல்துறை அதிகாரி மறுபடியும் அவனிடம், “இங்கு நீ வாழ்வதற்குச் சரியான சூழல் இல்லையா?” என்றார். அப்பொழுது அவன், “என்னால் இங்கு புகார் அளிக்க முடியவில்லை” என்றான்.

கடைசியாகக் காவல்துறை அதிகாரி அவனிடம், “இந்த இடத்தைக் காலிசெய்துவிட்டு, அங்கு செல்வதற்கான உன்னுடைய நோக்கம் என்ன?” என்றார். “அங்குச் சென்றால், நான் நினைத்த நேரம் யார்மீது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். அதனால்தான் நான் அங்குச் செல்கின்றேன்” என்று மிகச் சாதாரணமாகச் சொன்னான் அந்த இளைஞன்.

இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞனைப் போன்றுதான் இன்றைக்குப் பலரால், அடுத்தவர்மீது புகாரளிக்காமல் அல்லது அடுத்தவரைப் பற்றிக் குறைகூறாமல் இருக்க முடிவதில்லை. ஏனென்றால், அடுத்தவரைப் பற்றிக் குறைகூறுவதுதான் அவர்களுடைய குலத்தொழிலே! நற்செய்தியில் இயேசு அடுத்தவரைக் குறைகூறிக் கொண்டே இருந்த பரிசேயர்களை, யூத மதத் தலைவர்களை சந்தையில் விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பிடுகின்றார். இயேசு ஏன் அவர்களைச் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பிடுகின்றார் என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

திருமுழுக்கு யோவானப் ‘பேய் பிடித்தவன்’ என்று குறைகூறியவர்கள்

நற்செய்தியில் இயேசு, பரிசேயர்களையும் திருச்சட்ட அறிஞர்களையும் சந்தையில் விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பிடுகின்றார். இயேசு ஏன் அவர்களைச் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பிடுகின்றார் என்பது பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.

மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயார்செய்த திருமுழுக்கு யோவான் வெட்டுக்கிளியையும் காட்டுத் தேனையும் உண்டு, ஒட்டக முடியாலான ஆடையை உடுத்திப் பாலைநிலத்தில், கடுமையாக நோன்பிருந்து வாழ்ந்து வந்தார். இத்தகையதொரு வித்தியாசமான வாழ்க்கை வாழ்ந்து வந்த திருமுழுக்கு யோவானை யூத மதத் தலைவர்களான பரிசேயர்களும் திருச்சட்ட அறிஞர்களும் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்; ஆனால் அவர்கள் திருமுழுக்கு யோவானை ஏற்றுக்கொள்ளாமல், அவரைப் “பேய்பிடித்தவன்” என்கின்றார்கள்.

இயேசுவைப் “பெருந்தீனிக்காரன்” என்று குறைகூறியவர்கள்

திருமுழுக்கு யோவான் மக்களோடு அவ்வளவாகப் பேசவில்லை; மக்களோடு இருக்கவில்லை. அதனால் யூத மதத் தலைவர்கள் அவரைப் ‘பேய்பிடித்தவன்’ என்று குறைகூறினார்கள் என்றால், மக்களோடு இருந்து, அவர்களுடைய இன்பத்திலும் துன்பத்திலும் கலந்துகொண்டு, அவர்களோடு உண்டு வந்த இயேசுவை அவர்கள், “பெருன்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்” என்கிறார்கள். இதனாலேயே இயேசு பரிசேயர்களையும் திருச்சட்ட அறிஞர்களையும் சந்தையில் விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பிடுகின்றார்.

இங்கு நாம் ஒன்றைக் கவனித்தாக வேண்டும். அது என்னவெனில், யூத மதத் தலைவர்களின் குறைகாணும் போக்கதான். ஆம், அவர்கள் ஒருவர் எப்படி வாழ்ந்தாலும் அவரைக் குறைகூறுவதற்குத் தயாராக இருந்தார்கள். இன்றைக்கும் ஒருசிலர், ஒருவர் எப்படி வாழ்ந்தாலும் குறைகூறுவதற்குத் தயாராக இருக்கின்றார்கள். ஒருவர் வறுமையில் வாழ்ந்தால், அவரை “உழைத்தால்தான் முன்னுக்கு வரமுடியும்” என்று குறைகூறுவார்கள். ஒருவர் கடினமாக உழைத்து முன்னுக்கு வந்துவிட்டால், அவரை, “குறுக்கு வழியில் முன்னுக்கு வந்திருப்பார்” என்று குறைகூறுவார்கள். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒருசிலர் குறைகூறுவதற்குத் தயாராக இருக்கின்றார்கள். அவர்களால் மற்றவரைக் குறைகூறாமல் இருக்க முடியாது. ஏனெனில், குறைகூறுவதுதான் அவர்களுடைய குலத் தொழிலே!

இத்தகைய சூழ்நிலையில் நாம் மற்றவர் நம்மைக் குறைகூறுகின்றார்களே என்று அதையே நினைத்து, வருந்திக்கொண்டிருந்தால், நம்முடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியாது. பரிசேயர்கள் இயேசுவைக் குறைகூறியதைக் கேட்டு, அவர் தன்னுடைய பணியை நிறுத்திக்கொள்ளவில்லை. மாறாகத் தொடர்ந்து தன்னுடைய இலக்கை நோக்கி நடைபோட்டார். நாமும் இயேசுவைப் போன்று, மற்றவர் நம்மைக் குறைகூறுகின்றபொழுது, அதைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து நம்முடைய இலக்கை நோக்கி நடைபோடுவோம்.

சிந்தனை

‘போற்றுவார் போற்றட்டும். புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும். தொடர்ந்து சொல்வேன் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால், எடுத்துரைப்பேன். எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்’ என்பார் கவிஞர் கண்ணதாசன். ஆகையால், நாம் மற்றவர் நம்மைப் பற்றிக் குறைகூறுவதைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து இயேசுவின் வழியில் நடந்து, அவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.