16 செப்டம்பர் 2020, புதன்

1 கொரிந்தியர் 12: 31-13:13

பொதுக்காலம் இருபத்து நான்காம் வாரம் புதன்கிழமை

1 கொரிந்தியர் 12: 31-13:13

“அன்பு நன்மை செய்யும்”

நிகழ்வு



அமெரிக்காவைச் சார்ந்த பிரபல மருத்துவர் மற்றும் உளவியலார் கார்ல் மென்னிஞ்கர் (Karl Menninger).

ஒருநாள் இவர், ‘நம்முடைய மருத்துவமனைக்கு வரும் நோயாளர்கள் ஏன் நோய்வாய்ப்படுகின்றார்கள்...? நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவர்கள் ஏன் நலமடையாமல் பல நாள்களாக இங்கு இருக்கின்றார்கள்...?’ என்பதைக் குறித்து மிகத் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார். அப்பொழுதுதான் அவருக்கு ‘அன்பில்லாமையே’ மனிதர்கள் நோய்வாய்ப்படுவதற்கும், நோய்வாய்ப்பட்ட பிறகு பல நாள்களாக நலமடையாமலும் இருக்கின்றார்கள் என்பது புரிந்தது.

உடனே அவர் தன்னுடைய மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என யாவரையும் அழைத்து அவர்களிடம், “நம்முடைய மருத்துவமனையில் அன்பில்லாத சூழல் நிலவுவதை உணர்கின்றேன். இனிமேலும் நம்முடைய மருத்துவமனையில் அப்படிப்பட்ட சூழ்நிலை நிலவக்கூடாது. இனிமேல் நீங்கள் நோயாளர்களிடம் பணிசெய்யும்பொழுது, அன்புள்ளத்தோடு பணிசெய்ய வேண்டும்; அவர்களை மதிப்புடன் நடத்தவேண்டும். ஒரு வாக்கியத்தில் சொல்லவேண்டும் என்றால், இந்த மருத்துவமனையே அன்புமயமானதாக மாறவேண்டும்” என்றார்.

கார்ல் மென்னிஞகர் இவ்வாறு சொன்னதற்கு சரியென்று சொன்ன அவருடைய மருத்துவமனையில் பணியாற்றி வந்த யாவரும், அதற்குப் பின்பு மருத்துவமனையில் இருந்த நோயாளர்களிடத்தில் அன்புள்ளத்தோடு பணிசெய்யத் தொடங்கினார்கள். ஒருசில மாதங்களிலேயே அந்த மருத்துவமனை அன்புமயமானது. இதனால் அந்த மருத்துவமனைக்கு வந்த நோயாளர்கள் விரைவிலேயே நலம்பெற்றுச் சென்றார்கள்.

ஆம், பிறரிடத்தில் அன்போடு நடந்துகொள்ளும்பொழுது, அதனால் மிகப்பெரிய நன்மை ஏற்படும். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகம், அன்பு நன்மை செய்யும் என்று தொடங்கி, அன்பின் பல பரிமாணங்களையும், அன்பே தலைசிறந்தது என்றும் எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

பரவசப் பேச்சுப் பேசும் கொடை ஒழிந்துபோம்

இன்றைய முதல் வாசகம், நேற்று நாம் வாசித்த முதல் வாசகத்தின் இறுதி இறைவார்த்தையான, “நீங்கள் மேலான அருள்கொடையையே ஆர்வமாய் நாடுங்கள்” என்ற இறைவார்த்தையோடு தொடங்குகின்றது.

கொரிந்து நகரத் திருஅவையில் இருந்தவர்கள் கடவுள் தங்களுக்குக் கொடுத்த கொடைகளைக்கொண்டு தங்களுக்குள், ‘நான் பெரியவன்’, ‘நீ சிறியவன்’ என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு அறிவுரைகூறும் வகையில்தான் புனித பவுல், “நீங்கள் மேலான அருள்கொடையையே ஆர்வமாய் நாடுங்கள்” என்ற வார்த்தைகளை எழுதுகின்றார்.

கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்த மக்களிடம் மேலான அருள்கொடையை ஆர்வமாய் நாடுங்கள் என்று சொல்லும் புனித பவுல், அந்த மேலான அருள்கொடை வேறொன்றுமில்லை; அன்புதான் என்று குறிப்பிடுகின்றார். அன்பு ஏன் மேலான அருள்கொடை எனில், இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் ஒழிந்துபோம்; பரவசப் பேச்சுப் பேசும் கொடைகூட ஒழிந்துபோகும்; ஆனால், அன்பு ஒருபோதும் அழியாது. அதனால்தான் புனித பவுல் அன்பு என்ற மேலான அருள்கொடையை ஆர்வமாய் நாடுங்கள் என்று குறிப்பிடுகின்றார்.

அன்பு ஒருபோதும் அழியாது

அன்பே மேலான அருள்கொடை என்று சொல்லும் புனித பவுல், அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது என்று அன்பின் தன்மைகளைப் பட்டியலிடுகின்றார். இதன்மூலம் அவர் அன்பே தலைசிறந்தது என்று குறிப்பிடுகின்றார்.

புனித பவுல் இங்கு குறிப்பிடுகின்ற ‘அன்பு’ என்ற சொல்லுக்கு, இதன் மூலத்தில் ‘Agape’ என்ற சொல்லானது பயன்படுத்தப்படுகின்றது. இதன் பொருள் தன்னலமில்லாத அன்பும், கடவுள் மனுக்குலத்தின்மீது கொண்ட அன்பும் என்று வருகின்றது. பேரன்பு கொண்ட கடவுள் தன்னுடைய அன்பின் வெளிப்பாடாகத் தன்னுடைய ஒரே மகனை இவ்வுலகிற்குத் தந்தார் (யோவா 3: 16). ஆதலால், நாமும் கடவுள் நம்மை அன்புசெய்வது போன்று, இயேசு நம்மை அன்புசெய்வது எந்தவொரு பிரதிபலனும் பாராமல், தன்னலமின்றி அன்பு செய்யவேண்டும்.

இன்றைக்குப் பலர் அன்பு என்ற சொல்லின் அர்த்தம் புரியாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அன்பு என்பது சொல்லல்ல, அது செயல். ஆகையால், நாம் மேலான அருள்கொடையாகிய அன்பை நம்முடைய வாழ்வில் ஆர்வமாய் நாடுவோம். அதன்மூலம் பேரன்பு கொண்ட கடவுளின் அன்பு மக்களாவோம்.

சிந்தனை

‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பார் திருவள்ளுவர். ஆகையால், நாம் இயேசு நம்மை அன்பு செய்தது போன்று, ஒருவர் மற்றவரை அன்பு செய்து, இவ்வுலகை அன்பு மயமாக மாற்றுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.