16 செப்டம்பர் 2020, புதன்

பொதுக்காலம் 24ஆம் வாரம் - புதன்

முதல் வாசகம்

நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 31- 13: 13

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் மேலான அருள்கொடையையே ஆர்வமாய் நாடுங்கள். எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.

நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும், என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும், என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும், என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.

இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சுப் பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது. ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம். நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப் போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப் போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டு விட்டேன். ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பது போல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.

ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 33: 2-3. 4-5. 12,22 (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

2
யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.
3
புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். - பல்லவி

4
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5
அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி

12
ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
22
உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 6: 63b, 68b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-35

அக்காலத்தில்

இயேசு, “இத்தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை’ என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.

எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு அருந்தவும் இல்லை; திராட்சை மது குடிக்கவும் இல்லை; அவரை, ‘பேய் பிடித்தவன்’ என்றீர்கள்.

மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.