01 ஆகஸ்ட் 2020, சனி

மத்தேயு 14: 1-12

பொதுக்காலம் பதினேழாம் வாரம் சனிக்கிழமை

மத்தேயு 14: 1-12

“முறையல்ல!”

நிகழ்வு


தமிழகத்தின் முதல் முதலமைச்சராக இருந்தவர் ஓமந்தூர் இராமசாமி. ஒருமுறை இவர் பணிநிமித்தமாகத் திண்டிவனம் வரை முதலமைச்சருக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வண்டியில் சென்றார். இரவில் இவர் அங்கிருந்த விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு அதிகாலையில் சென்னைக்குச் திரும்பி வந்தார்.

அன்றைய நாளில் இவர், வண்டியை ஓட்டிவந்த ஓட்டுநரைத் தற்செயலாகப் பார்த்தபொழுது, அவர் பலாப்பழத்தை நறுக்கிக்கொண்டிருந்தார். “உனக்கு இது எங்கு கிடைத்தது?” என்று இவர் ஓட்டுநரை வினவிய பொழுது, “நேற்று நாம் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் இதைக் கண்டேன். பார்பதற்குப் பெரிதாக இருந்தது. அதுதான் பறித்துக்கொண்டு வந்துவிட்டேன்” என்று ஓட்டுநர் மிகவும் சாதாரணச் சொன்னார்.

இதைக் கேட்டு சினங்கொண்ட ஓமந்தூரார், “நீ செய்தது கொஞ்சம்கூட முறையில்லை. இந்தா! இந்த இரண்டு உரூபாயைக் வைத்துக்கொண்டு, திண்டிவனத்திற்குச் சென்று, எந்த இடத்தில் இந்தப் பலாப்பழத்தைப் பறித்தாயோ, அந்த இடத்தில் கொடுத்துவிட்டு வா. இப்பொழுது நான் உனக்குக் கொடுத்திருக்கும் இந்த இரண்டு உரூபாயை இந்த மாதச் சம்பளத்தில் பிடித்துக்கொள்கின்றேன்” என்றார்.

இதைக் கேட்டு அதிர்ந்துபோன அந்த ஓட்டுநர், “ஐயா! இந்தப் பலாப்பழத்தின் விலை ஒரு உரூபாய்தான் இருக்கும். இதற்காக இரண்டு உரூபாய் செலவுசெய்து திண்டிவனத்திற்குப் போய்விட்டு வரவேண்டுமா...? மேலும் இந்த இரண்டு உரூபாயைக்கூட மாதச் சம்பளத்தில் பிடித்துக் கொள்வதாகச் சொல்கிறேர்களே, கொஞ்சம் தயவு காட்டுங்கள்” என்று கெஞ்சிக் கேட்டார். இதற்கு ஓமந்தூரார் அவரிடம், “முதலமைச்சரிடம் ஓட்டுநராக வேலை பார்க்கின்றாய் என்ற அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு இதுதான் தண்டனை” என்றார் (அறிஞர்கள் வாழ்வில் – எஸ். சந்திரா).

தன்னிடம் வேலை பார்த்துவந்த ஓட்டுநர் தவறு செய்தபொழுது, ‘இது முறையல்ல’ என்று சுட்டிக்காட்டிய ஓமந்தூராரின் நேர்மையை, அவருடைய துணிவை நாம் கட்டாயம் பாராட்டியாக வேண்டும். இன்றைய நற்செய்தியில், ஏரோது மன்னன் தவறு செய்தபொழுது, அதைத் துணிவோடு சுட்டிக்காட்டுகின்ற திருமுழுக்கு யோவானைக் குறித்து வாசிக்கின்றோம். திருமுழுக்கு யோவான் ஏரோது மன்னனுக்கு எதிராக உரைத்த சொற்கள் என்ன, அதற்காக அவர் கொடுத்த விலை என்ன என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மனம்மாறுங்கள்... விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது எனப் போதித்து வந்த யோவான்

இன்றைய நற்செய்தி வாசகமானது, இயேசுவைக் குறித்துக் கேள்விப்படும் ஏரோது அந்திப்பா மன்னன், ‘நாம்தான் யோவானைக் கொன்றுபோட்டுவிட்டோமே...! அவரைக் குறித்து இப்படியெல்லாம் கேள்விப்படுகின்றோமே...! ஒருவேளை கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்துவிட்டாரோ!’ என்று கூறுவதோடு தொடங்குகின்றது.

திருமுழுக்கு யோவான் யூதேயாவில் உள்ள பாலைநிலத்திற்கு வந்து, “மனம் மாறுங்கள்; விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்று பறைசாற்றத் தொடங்குகின்றார். பின்னர் யோர்தான் ஆற்றில் திருமுழுக்குக் கொடுத்தார். இப்படியிருக்கும்பொழுது அவர், தன்னுடைய சகோதரரான பிலிப்பின் மனைவியோடு வாழ்ந்து வந்த ஏரோதிடம், “...முறையல்ல” என்கின்றார். முறைகேடாக வாழ்ந்தது மன்னனாக இருந்தாலும், நீ வாழும் வாழ்க்கை முறையல்ல... (மனம்மாறு...) என்று சொல்வதற்குத் திருமுழுக்கு யோவானுக்கு நிறைய துணிச்சல் இருந்திருக்கவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். தான் மன்னனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டுவதால், தன்னுடைய உயிருக்கே ஆபத்து வரும் என்பதெல்லாம் திருமுழுக்கு யோவானுக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும், அவர் மன்னனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றார்.

தான் கொண்ட கொள்கைக்காக உயிரையும் தந்த யோவான்

திருமுழுக்கு யோவான் ஏரோதின் தவற்றைச் சுட்டிக்காட்டியதால், சிறையில் வைக்கப்படுகின்றார். பின்னர் அவனுடைய பிறந்த நாளின்பொழுது ஏரோதியாளின் நயவஞ்சகத்தால் கொல்லப்டுகின்றார். திருமுழுக்கு யோவான் அதிகாரத்தில் இருந்தவர்களால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டாலும், அவர், தான் கொண்ட கொள்கைக்காக, கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்தற்காகக் கொல்லப்பட்டது நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. நாமும் திருமுழுக்கு யோவானைப் போன்று கடவுளின் வார்த்தையை, உண்மையை எத்தகைய இடர்வரினும் யாருக்கும் அஞ்சாமல், துணிவோடு எடுத்துரைக்கவேண்டும். அதுவே உண்மையான சாட்சிய வாழ்வு.

இன்றைக்கு நாம் நம் கண்ணெதிரே தவறு நடந்தாலும், கண்டும் காணாமல் செல்லக்கூடியவர்களாக இருக்கின்றோம். இத்தகையதொரு போக்கை நாம் நம்மிடமிருந்து மாற்றி, திருமுழுக்கு யோவானைப் போன்று உண்மையை உரக்கச் சொல்பவர்களாக மாறுவோம்.

சிந்தனை

‘நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே’ (எரே 1: 17) என்று ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எரேமியாவிடம் கூறிய அதே சொற்களை, இன்று நம்மிடமும் கூறுகின்றார். எனவே, நாம் ஆண்டவரின் வார்த்தையை யாருக்கும் அஞ்சாமல் அறிவித்து, அவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்