01 ஆகஸ்ட் 2020, சனி

பொதுக்காலம் 17ஆம் வாரம் - சனி

முதல் வாசகம்

இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க ஆண்டவர் உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 26: 11-16, 24

அந்நாள்களில்

குருக்களும் இறைவாக்கினரும் தலைவர்களையும் மக்கள் அனைவரையும் நோக்கி, “இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன்; ஏனெனில் நீங்களே உங்கள் காதால் கேட்டதுபோல, இந்நகருக்கு எதிராக இவன் இறைவாக்கு உரைத்துள்ளான்” என்று முறையிட்டனர்.

அப்பொழுது தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரிடமும் எரேமியா கூறியது: “நீங்கள் கேட்ட இச்சொற்களை எல்லாம் இக்கோவிலுக்கும் இந்நகருக்கும் எதிராக அறிவிக்குமாறு ஆண்டவரே என்னை அனுப்பி யுள்ளார். எனவே, இப்பொழுதே உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்படுத்திக்கொள்ளுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அறிவித்திருந்த தண்டனை பற்றி ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக்கொள்வார். இதோ, நான் உங்கள் கையில் இருக்கிறேன். நல்லது எனவும் நேரியது எனவும் நீங்கள் கருதுவதை எனக்குச் செய்யுங்கள். ஆனால் ஒன்றை மட்டும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்; என்னை நீங்கள் கொல்வீர்களாகில், மாசற்ற இரத்தப்பழி உங்கள் மேலும் இந்நகர் மேலும், அதில் குடியிருப்போர் மேலும் உறுதியாக வந்து விழும். ஏனெனில் இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க ஆண்டவர் உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார்."

பின்னர் தலைவர்களும் மக்கள் எல்லாரும் குருக்களையும் இறைவாக்கினரையும் நோக்கி, “கொலைத் தீர்ப்பு இந்த ஆளுக்கு வேண்டாம்; ஏனெனில் நம் கடவுளான ஆண்டவரின் பெயராலேயே இவன் நம்மிடம் பேசியுள்ளான்” என்றார்கள்.

ஆனால், மக்கள் கையில் எரேமியா அகப்பட்டுக் கொல்லப்படாதவாறு, சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 69: 14-15. 29-30. 32-33 . (பல்லவி: 13ab காண்க)

பல்லவி: எனது விண்ணப்பத்திற்கு கடவுளே பதில் மொழி தாரும்.

14
சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து என்னைக் காத்தருளும்; என்னை வெறுப்போரிடமிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் என்னை விடுவித்தருளும்.
15
பெருவெள்ளம் என்னை அடித்துக் கொண்டு போகாதிருப்பதாக! ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக! படுகுழி தன் வாய் திறந்து என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக! - பல்லவி

29
எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!
30
கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். - பல்லவி

32
எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
33
ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஏரோது யோவானின் தலையை வெட்டச் செய்தான். யோவானுடைய சீடர் வந்து இயேசுவிடம் அறிவித்தனர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12

அக்காலத்தில்

குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப் பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான். அவன் தன் ஊழியரிடம், “இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்” என்று கூறினான்.

ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் அவனிடம், “நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல” என்று சொல்லி வந்தார். ஏரோது அவரைக் கொலை செய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.

ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள். அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான். அவள் தன் தாய் சொல்லிக் கொடுத்தபடியே, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் வருந்தினான்; ஆனாலும் தான் விருந்தினர்முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்; ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்; அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.

யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

வாசகங்கள்பிற நாட்கள்