01 ஆகஸ்ட் 2020, சனி

எரேமியா 26: 11-16,24

பொதுக்காலம் பதினேழாம் வாரம் சனிக்கிழமை

எரேமியா 26: 11-16,24

ஆண்டவரின் வார்த்தையை உரக்க அறிவித்த எரேமியா

நிகழ்வு


அது ஒரு நகர்ப்புறப் பங்கு. அந்தப் பங்கில் பங்குப்பணியாளராக பணியாற்றிய அருள்பணியாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியின்போது மிகவும் உற்சாகமாக மறையுரை ஆற்றினார்; ஆனால், மக்களில் பெரும்பாலனவர்கள் தூங்கி வழிந்தார்கள். ‘நன்றாகத்தானே மறையுரை ஆற்றுகின்றோம்...! பிறகு எதற்கு இவர்கள் இப்படித் தூங்கி வழிகின்றார்கள்’ என்று அவர் காரணம் புரியாமல் திகைத்தார்.

உடனே அவர் சம்பந்தமே இல்லாமல் ஒரு சம்பத்தைச் சொல்லத் தொடங்கினார்: “சில நாகளுக்கு முன்பாக, நான் என்னுடைய இருசக்கர வண்டியில் ஒரு கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்தேன். வழியில் ஒரு விவசாயி தான் வளர்த்து வந்த பத்துக்கும் மேற்பட்ட பன்றிக்குட்டிகளுக்கு உணவளித்துக்கொண்டிருந்தார். அந்தப் பன்றிக்குட்டிகளைப் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருந்தன. ஏனென்றால், அவற்றின் நெற்றியில் கொம்புகள் இருந்தன.”

அருள்பணியாளர் இப்படிச் சொல்லிகொண்டே மக்களைப் பார்த்தார். அதுவரைக்கும் தூங்கி வழிந்துகொண்டிருந்தவர்கள், அவர் இப்படியொரு சம்பவத்தைச் சொன்னதைக் கேட்டு, தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, அவர் சொல்வதை ஆர்வமாய்க் கேட்கத் தொடகினார்கள். அப்பொழுது அவர் மக்களிடம், “இவ்வளவு நேரம் கடவுளின் வார்த்தையை – உண்மையை – எடுத்துரைக்கும்பொழுது யாரும் கேட்கவில்லை! இப்பொழுது நான் ஒரு பொய்யான சம்பத்தைச் சொல்லும்பொழுது, அதை இவ்வளவு ஆர்வமாய்க் கேட்கின்றீர்களே! நல்லதற்குக் காலமில்லை!” என்று சொல்லி நொந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் வருகின்ற அருள்பணியாளர் கடவுளின் வார்த்தையை மக்களிடத்தில் எடுத்துரைத்தபொழுது, அதை அவர்கள் கேட்பதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் தாயராக இல்லாததுபோல், இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா ஆண்டவருடைய வார்த்தையை மக்களிடம் எடுத்துரைத்தபோது, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இறைவாக்கினர் எரேமியா மக்களிடம் அறிவித்த இறைவார்த்தை என்ன, அதற்கு அவர்கள் எப்படி எதிர்வினையாற்றினார்கள் என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுளின் வார்த்தையை மக்களிடம் எடுத்துரைத்த எரேமியா

இன்றைய முதல் வாசகம், நேற்றைய முதல் வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கின்றது. நேற்றைய முதல்வாசகத்தில் (எரே 26: 1-9) இறைவாக்கினர் எரேமியா ஆண்டவர் தன்னிடத்தில் சொன்னது போன்று, அவர் எருசலேம் திருக்கோயிலின் முற்றத்தில் நின்றுகொண்டு, திருக்கோயிலுக்குக் வந்த எல்லா மக்களிடத்திலும், நீங்கள் ஆண்டவருக்குச் செவிக்கொடுத்து வாழவேண்டும், அப்படி நீங்கள் வாழ்ந்தால் கடவுள் உங்கள்மேல் அனுப்புவதாக இருந்த தண்டனையை அனுப்பமாட்டார்; ஒருவேளை நீங்கள் ஆண்டவருக்குச் செவிகொடாமல் வாழ்ந்தால், எருசலேம் திருக்கோயிலைக் சிலோவைப் போல் ஆக்குவார்... எருசலேம் திருநகரை எல்லா மக்களினத்தார் நடுவிலும் சாபக் குறியாக மாற்றுவார் என்று உரைக்கின்றார்.

இறைவாக்கினர் எரேமியா உரைத்த இந்த வார்த்தைகளைக் கேட்ட குருக்களும் (போலி) இறைவாக்கினர்களும் தலைவர்களிடமும் மக்களிடமும், “இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன். ஏனெனில், இவன் இந்நகருக்கு எதிராக இறைவாக்கு உரைத்துள்ளான்” என்கின்றார்கள். இதைத்தான் நாம் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். இறைவாக்கினர் எரேமியா எருசலேம் திருக்கோயிலுக்கும், அந்த நகருக்கும் அழிவு என்று சொன்னதை கேட்டு, அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் எருசலேம் நகரம் ஆண்டவரின் நகரம்... அதனால் அதற்கு அழிவே கிடையாது என்று அவர்கள் நினைத்தார்கள்; ஆனால், அங்கிருந்தவர்கள் உண்மைக் கடவுள் மறந்து, பாகால் தெய்வத்தை வழிபட்டதால், பாபிலோனியர்கள் வழியாக அந்நகருக்கும், அங்கிருந்த மக்களுக்கும் அழிவு வந்தது.

கடவுளின் வார்த்தையைக் கேட்டால் வாழ்வு, இல்லையேல் சாவு

இறைவாக்கினர் எரேமியா, ஆண்டவர் தன்னிடம் சொன்னதுபோன்று, எருசலேம் நகருக்கு அழிவு வரும் என்று அந்நகரில் இருந்தவர்களிடம் சொன்னதுபோது, அவர்கள், “இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன்” என்கின்றார்கள். இதைத் தொடர்ந்து இறைவாக்கினர் எரேமியா அவர்களிடம், ஆண்டவர் என்னிடம் சொன்னதையே உங்களிடம் சொன்னேன் என்றும், இதை நீங்கள் கேட்டு நடந்தால், ஆண்டவர் உங்கள்மீது அனுப்புவதாகச் சொன்ன தண்டனைத் தீர்ப்பை அனுப்ப மாட்டார் என்றும் ஒருவேளை நீங்கள் என்னைக் கொல்வீர்களானால், மாசற்ற இரத்தப்பழி உங்கள்மீதும் நகரில் குடியிருப்போர் மேலும் விழும் என்கிறார். இதனால் குருக்களும் போலி இறைவாக்கினர்களும், இவன் ஆண்டவர் பெயராலேயே பேசியுள்ளான் என்றும், அதனால் இவன்மீது கொலைத் தீர்ப்பு வேண்டாம் என்றும் சொல்லி, எரேமியாவை ஒன்றும் செய்யாமல் விடுகின்றார்கள்.

இந்த இறைவார்த்தைப் பகுதி நமக்குச் சொல்லக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான். அதுதான், நாம் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு நடந்தால் ஆசியும், அவருடைய வார்த்தையைக் கேளாமல் நடந்தால் தண்டனையும் பெறுவோம் என்பதாகும். ஆகையால், நாம் இறையடியார்கள் வழியாக இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்து, ஆண்டவருக்கு உகந்த மக்களாக வாழ முற்படுவோம்.

சிந்தனை

‘எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைப் பின்பற்றுகின்றோர் நற்பேறு பெற்றோர்’ (நீமொ 8: 32) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் ஆண்டவருக்குச் செவிகொடுத்து அவர் வழியில் நடந்து, நற்பேறு பெறுவோம்; இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்பிற நாட்கள்