30 ஜூன் 2020, செவ்வாய்

மத்தேயு 8: 23-27

பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை

மத்தேயு 8: 23-27

“அவரை எழுப்பினார்கள்”

நிகழ்வு


முன்பெல்லாம் கடலில் செல்லக்கூடிய கப்பல்களில் பாய்மரங்கள் பயன்படுத்தப்படும். இன்றைக்கும் ஒருசில சொகுசுக் கப்பல்கள் பாய் மரங்களைப் பயன்படுத்துகின்றன. இந்தப் பாய்மரங்களைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் என்னவெனில், இந்தப் பாய் மரங்களுக்கு நடுவே உள்ள கம்பத்தைச் சரியாகப் பொருத்துவதுதான்.

காற்று வேகமாக வீசிக்கொண்டிருக்கும்பொழுது கப்பல் தளபதி, கப்பலில் உள்ள மாலுமியிடம் கம்பத்தின் மீது ஏறி, அதை அவிழ்க்கச் சொல்வார். சில நேரங்களில் அவர் மாலுமியிடம், காற்றுவீசும் திசையை நோக்கி, கம்பத்தின்மீது ஏறி அதைச் சரிசெய்யச் சொல்வார். மாலுமி கம்பத்தின்மீது ஏறும்பொழுது, தப்பித்தவறி கீழே பார்க்க நேர்ந்தால், குலையே நடுங்கிவிடும். அதனால் கம்பத்தின்மீது பாய்மரத்தைச் சரி செய்யவோ அல்லது அதை அவிழ்க்கவோ சொல்கின்றபொழுது, கப்பல் தளபதி, கம்பத்தின்மீது ஏறக்கூடிய மாலுமியிடம் “மேல் நோக்கிப் பார்” என்று சொல்வார்.

ஆம், கம்பத்தின் மீது ஏறக்கூடிய மிகக்கடினமான பணியைச் செய்யும் மாலுமி, கீழ் நோக்கிப் பார்த்தால், அச்சத்தில் நடுங்கத் தொடங்கிவிடுவார் என்பதாலேயே, கப்பல் தளபதி அவரிடம் மேல் நோக்கிப் பார் என்று சொல்கின்றார். நம்முடைய வாழ்க்கையிலும் ஆபத்துகள் வருகின்றபொழுது கீழ்நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்காமல், மேல் நோக்கிப் பார்த்தால், விண்ணகத்தில் உள்ள இறைவன் நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்பது உறுதி. அதைத்தான் இந்த உண்மை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தியில், சீடர்கள் கடலிலில் சென்றுகொண்டிருக்கும்பொழுது, பெருங்கொந்தளிப்பு ஏற்பட, அவர்கள் இயேசுவின் உதவியை நாடுகின்றார்கள். இதனால் அவர்கள் ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுகின்றார்கள். மத்தேயு நற்செய்தியில் இடம்பெறும் இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆபத்து மிகுந்த கலிலேயாக் கடல்

யூத வரலாற்று ஆசிரியரான ஜோசபுஸ், கலிலேயாக் கடலைக் குறித்து ஒருசில தரவுகளைத் தருகின்றார். அவை நம்முடைய கவனத்திற்கு உரியவையாக இருக்கின்றன. ‘பதின்மூன்று கிலோமீட்டர் நீளமும், ஏழு கிலோமீட்டர் அகலமும் கொண்ட கலிலேயாக் கடல் எப்பொழுதும் ஆபத்து நிறைந்ததாகவே இருக்கும். சில நேரங்களில் இருபது அடிக்கும் மேலே எழும் அலையில், கடலில் பயணம் செய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இப்படிப்பட்ட சவால் நிறைந்த கலிலேயாக் கடலில், குறைந்தது முன்னூறு படகுகள் எப்பொழுதும் இருந்துகொண்ட இருக்கும் (Life Application New Testament Commentary –Brue Barton, D.min. pg. 41).

இப்படி ஆபத்துகள் நிறைந்த கலிலேயாக் கடலில்தான் இயேசுவும், அவருடைய சீடர்களும் மாலை வேளையில் (மாற் 4: 35) பயணம் செய்கின்றார்கள். அப்பொழுதுதான் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்படுத்துகின்றது. அதைப் பார்த்துவிட்டுத்தான் அவர்கள் அஞ்சி இயேசுவை எழுப்புகின்றார்கள் .

ஆண்டவரை எழுப்பிய இயேசுவின் சீடர்கள்

கடலில் ஏற்பட்ட பெருங்கொந்தளிப்பைக் கண்டு இயேசுவின் சீடர்கள் அவரை எழுப்பியது நமக்கு இரண்டு செய்திகளைச் சொல்கின்றது. ஒன்று, சீடர்களின் அவநம்பிக்கை. இரண்டு, சீடர்கள் இயேசுவின் உதவியை நாடுதல் அல்லது மேலே, விண்ணை நோக்கிப் பார்த்தல்.

இயேசுவின் சீடர்களின் ஏழுபேர் மீனவர்கள் (யோவா 21: 1-2). அவர்களுக்கு, கடலில் ஆபத்து வந்தால் எப்படிச் சமாளிக்கவேண்டும் என்பது பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனாலும், அவர்கள் கடலில் ஏற்பட்ட பெருங்கொந்தளிப்பைக் கண்டு அஞ்சினார்கள் எனில், அவர்கள் நம்பிக்கை இல்லாமல் இருந்தார்கள் என்பதையே காட்டுகின்றது. அதனால்தான் இயேசு அவர்களை, ‘நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?’ என்று கேட்கின்றார்.

சீடர்கள், கடலில் ஏற்பட்ட பெருங்கொந்தளிப்பைக் கண்டு அஞ்சி, தூங்கிக்கொண்டிருந்த இயேசுவை எழுப்பியது, நாம் ஒவ்வொருவரும் இறைவனுடைய உதவியை நாடவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. அருளாளர் இவான் மெர்ஸ் இப்படிச் சொல்வார்: “மனிதர்களால் ஒன்றும் முடியாது; ஆனால், ஆண்டவரால் எல்லாம் முடியும்.” இங்குச் சீடர்கள் தங்களுக்கு ஆபத்து வந்ததும், ஆண்டவருடைய உதவியை நாடினார்கள்; அதனால் அவர்கள் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்கள். நாமும் துன்பம் அல்லது ஆபத்து வருகின்றபொழுது ஆண்டவரின் உதவியை நாடினால், அவர் நம்மை ஆபத்திலிருந்து காப்பார் என்பது உறுதி.

ஆகையால், நம்மிடம் இருக்கின்ற அவ நம்பிக்கையை அகற்றி, நமக்குக் கேடயமாக இருக்கும் ஆண்டவருடைய உதவியை நாடுவோம்; அவரது பாதுகாப்பையும் அரவணைப்பையும் பெற்றுக்கொள்வோம்.

சிந்தனை

‘இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதுமில்லை’ (திபா 121: 4) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நம்மைக் கண்ணயராமல் காக்கின்ற இறைவனிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு, அவரை உற்றுநோக்கி, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்பிற நாட்கள்