30 ஜூன் 2020, செவ்வாய்

ஆமோஸ் 3: 1-8; 4: 11-12

பொதுக்காலம் பதிமூன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை

ஆமோஸ் 3: 1-8; 4: 11-12

‘எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத்தான் சிறப்பாக அறிந்துகொண்டேன்’

நிகழ்வு



பில் பிரைட் என்பவர் எழுதிய மிகச்சிறந்த புத்தகம், ‘The Four Spiritual Laws’. இப்புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, இலட்சக்கணக்கான பிரதிகள் விற்றுள்ளன.

இந்தப் புத்தகத்தை முழுவதும் எழுதிவிட்டு, அச்சகத்திற்கு அனுப்புவதற்கு முந்தைய நாள் இரவு, பில் பிரைட்டிற்கு ஒரு சிந்தனை உதித்தது. அது என்ன சிந்தனை எனில், இந்தப் புத்தகத்தில் முதல் சட்டமாக இருந்த, ‘மனிதன் தான் செய்த பாவத்தினால், கடவுளைவிட்டு வெகுதொலைவு சென்றுவிட்டான்’ என்பதைத் திருத்தி, ‘கடவுள் ஒவ்வொருவரையும் சிறப்பாக அழைத்திருக்கின்றார்; அவர்களுக்கென்று ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றார்’ என்று எழுதவேண்டும் என்பதாகும்.

பில் பிரைட் தனக்கு உதித்த இந்த சிந்தனையின் படி, ஏற்கெனவே இருந்த முதல் சட்டத்தை மாற்றி, “கடவுள் ஒவ்வொருவரையும் சிறப்பாக அழைத்திருக்கின்றார்; ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றார்’ என்று எழுதி அச்சகத்திற்கு அனுப்பி வைத்தார். அதன் விளைவு, புத்தகம் இவர் எதிர்பார்த்ததை விடவும் அமோகமாக விற்பனையானது; பலரையும் சென்றுசேர்ந்தது.

ஆம். பில் பிரைட் தன்னுடைய புத்தகத்தில் கூறுவதுபோல, கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றார். அதனால் அவர் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதமாய் அழைக்கின்றார். இந்த உண்மையை உணர்ந்து நாம் வாழ்ந்தோமெனில், நம்முடைய வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. முதல் வாசகத்தில், ஆமோஸ் இறைவாக்கினர், கடவுள், இஸ்ரயேல் மக்களைச் சிறப்பாக அழைத்ததைக் குறித்துப் பேசுகின்றார். இஸ்ரயேல் மக்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட சிறப்பான அழைப்பினைச் சிறப்பாகப் பயன்படுத்தினார்களா என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுளால் சிறப்பாக அழைக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள்

‘உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள். மண்ணுகிலுள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாக கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டார்...’ (இச 7: 6-8) என்று இணைச்சட்ட நூலில் ஆண்டவராகிய கடவுள் கூறுவார். கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தன் மக்களாகச் சிறப்பாக அழைத்தார் எனில், அவர்களுக்கென்று ஒருசில பொறுப்புகளையும் அவர் கொடுத்திருந்தார்.

ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமிடம் பேசுகின்றபொழுது, “...உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசிபெறும்” (தொநூ 12: 3) என்பார். ஆபிரகாமிற்குக் கொடுக்கப்பட்ட அந்த அழைப்பு, இஸ்ரயேல் மக்கள் அனைவருக்குமான அழைப்பாகும். ஆதலால், இஸ்ரயேல் மக்கள் மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசிபெறுவதற்குக் கருவியாக இருந்து செயல்பட்டிருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அப்படிச் செயல்படவில்லை என்பதே வேதனை கலந்த உண்மை.

கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அழைப்பை வீணடித்த இஸ்ரயேல் மக்கள்

கடவுளால் சிறப்பாக அழைக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள், மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசிபெறுவதற்கு ஒரு கருவியாக இருந்து செயல்பட்டிருக்கவேண்டும் என்று மேலே பார்த்தோம். இஸ்ரயேல் மக்களுக்கு இன்னொரு கடமையும் இருந்தது. அது என்ன கடமை என்பதை, யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “...நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகின்றோம்... அவர் தோன்றும்பொழுது அவரைப் போல் இருப்போம்” (1 யோவா 3: 1-2). ஆம், கடவுளால் சிறப்பாக அழைக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் அவர் தூயவராக இருந்தது போல, இருந்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் நேற்றைய முதல் வாசகத்தில் நாம் வாசித்துபோல, அநீதியாகவும் ஒழுக்கக்கேடாகவும் சிலை வழிபாடு செய்பவர்களாகவும் நடந்துகொண்டார்கள். இதனால் அவர்கள்மீது கடவுளின் சினம் பொங்கி எழும் என்று கூறுகின்றார் ஆமோஸ் இறைவாக்கினர்.

இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் வருகின்ற, “ஆகையால்! இஸ்ரயேலே! இப்படி நான் செய்யப்போவதால், உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு” என்ற வார்த்தைகள், இஸ்ரயேல் மக்கள் தாங்கள் பெற்ற சிறப்பான அழைப்பினை வீணடித்ததற்காகப் பெறவிருக்கும் தண்டனையை எடுத்துக் கூறுவதாக இருக்கின்றது. ஆகையால், நாம் இஸ்ரயேல் மக்களைப் போன்று கடவுளிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட அழைப்பினை வீணடிக்காமல், நமக்கென கடவுள் வைத்திருக்கும் திட்டத்தையும் வீணடிக்காமல், அவற்றை நல்லவிதமாய்ப் பயன்படுத்துவோம்.

சிந்தனை

‘நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்..’ (யோவா 15: 16) என்பார் இயேசு. ஆகையால், கடவுளிடமிருந்து சிறப்பான அழைப்பினைப் பெற்றிருக்கும் நாம், அந்த அழைப்பினை, கடவுள் நமக்கென வைத்திருக்கும் திட்டத்தை வீணடிக்காமல் நல்ல முறையில் பயன்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்