30 ஜூன் 2020, செவ்வாய்

உரோமைத் திருச்சபையின் முதல் மறைச்சாட்சியர்

வி.நினைவு

முதல் வாசகம்

சாவோ, வாழ்வோ கடவுளின் அன்பிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-39

சகோதரர் சகோதரிகளே,

கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாது இருப்பாரோ? கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!

கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? “உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம், வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம்” என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம். ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்போ நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 124: 2-3. 4-5. 7b-8 (பல்லவி: 7a)

பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.

2
ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,
3
அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். - பல்லவி

4
அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;
5
கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். - பல்லவி

7b
கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.
8
ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் பெயரின் பொருட்டு எல்லா மக்கள் இனத்தவரும் உங்களை வெறுப்பர்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 4-13

அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே மெசியா’ என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர். போர் முழக்கங்களையும் போர்களைப் பற்றிய செய்திகளையும் கேட்கப் போகிறீர்கள். ஆனால் திடுக்கிடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இவையே முடிவாகா. நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பல இடங்களில் பஞ்சமும் நில நடுக்கங்களும் ஏற்படும். இவையனைத்தும் பேறுகால வேதனைகளின் தொடக்கமே.

பின்பு உங்களைத் துன்புறுத்திக் கொல்வதற்கென ஒப்புவிப்பர். என் பெயரின் பொருட்டு எல்லா மக்கள் இனத்தவரும் உங்களை வெறுப்பர். அப்பொழுது பலர் நம்பிக்கையை இழந்து விடுவர்; ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பர்; ஒருவரையொருவர் வெறுப்பர். பல போலி இறைவாக்கினர் தோன்றிப் பலரை நெறிதவறி அலையச் செய்வர். நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்து போகும். ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

வாசகங்கள்



பிற நாட்கள்