14 பிப்ரவரி 2020, வெள்ளி

மாற்கு 7: 31-37

பொதுக்காலம் ஐந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை

மாற்கு 7: 31-37

“இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்றார்”

நிகழ்வு


அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில் இருந்த ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் கேத்ரின் ட்ரெக்சல் (Katherine Drexel) என்பவர்.

ஒருமுறை இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு சேரியின் வழியாகச் சென்றுகொண்டிருக்கும்பொழுது அங்கிருந்த மக்களின் வாழ்க்கையைப் பார்த்துவிட்டு மிகவும் அதிர்ந்துபோனார். காரணம் அந்த மக்களின் வாழ்க்கை அவ்வளவு பரிதாபமாக இருந்தது. அப்பொழுது அவருக்குள் ஓர் எண்ணம் தோன்றியது. ‘இந்த மக்களுடைய வாழக்கையை உயர்த்த இவர்களுக்காக ஒரு சபையைத் தொடங்கினால் என்ன?’ என்பதுதான் அந்த எண்ணம்.

உடனே இவர் மேலிடத்திலிருந்து உரிய அனுமதியைப் பெற்று, ஒரு சபையைத் தொடங்கி, அந்த மக்களுக்காகத் தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். இதனால் இவர் 2000 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் புனிதையாக உயர்த்தப்பட்டார்.

புனித கேத்ரின் ட்ரெக்சல் சேரியில் வாழ்ந்த மக்கள்மீது மிகுந்த அன்பும் பரிவும் கொண்டார். அதனால் அவர்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்து அவர்களுடைய வாழ்வில் புது ஒளி ஏற்றினார். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு காது கேளாதவரும் திக்கப் பேசுபவருமான ஒருவர்மீது பரிவுகொண்டு அவருடைய வாழ்வில் புது ஒளியை ஏற்றி வைக்கின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மாற்கு நற்செய்தியில் மட்டும் இடம்பெறும் நிகழ்வு


நற்செய்தியில் இயேசு தீர், சீதோன் வழியாக தெக்கப்போலி வந்து கலிலியேக் கடலை அடைகின்றார். அங்கு அவரிடம் சிலர், காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைக் கொண்டுவந்து, அவரைத் தொட்டு நலப்படுத்துமாறு கேட்கின்றார்கள். மாற்கு நற்செய்தியில் மட்டுமே இடம்பெறும் இந்த நிகழ்வு நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. அவை என்னென்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஒவ்வொருவருக்கும் தனிக்கவனம் செலுத்தும் இயேசு

காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான மனிதரை இயேசுவிடம் கொண்டுவருகின்ற சிலர், அவரைத் தொட்டு நலப்படுத்துமாறு கேட்கின்றபோழுது, இயேசு அவரைத் தனியாக அழைத்துக்கொண்டு போய் நலப்படுத்துகின்றார். இயேசு ஏன் இவ்வாறு செய்தார் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

பொதுவாக மனிதர்கள் ஒரு பார்வையற்றவரையோ அல்லது கால் ஊனமுற்றவரையோ கண்டால் அவர்மீது பரிதாபப்படுவார்கள் (!). சிலர் அதைக்கூடச் செய்யமாட்டார்கள் என்பது இன்னும் கசப்பான உண்மை. ஆனால், காதுகேளாதவரின் நிலை இதைவிடக் கொடியது. ஏனென்றால் காதுகேளாதவரைக் கண்டால், மக்கள் அவரைக் கேலி செய்வார்களே அன்றி, இரக்கப்பட மாட்டார்கள். ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். இப்படிப்பட்ட நிலைமைதான் கேளாதவர்களின் நிலைமை. இதை நன்கு உணர்ந்த இயேசு காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான மனிதரை எல்லாருக்கும் முன்பாக வைத்து நலப்படுத்தாமல், அவரைத் தனியே அழைத்துச் சென்று நலப்படுத்துகின்றார். இதுவே இயேசு ஒவ்வொருவர்மீதும் தனிக்கவனம் செலுத்துகின்றார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது.

காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான மனிதரைத் தனியே அழைத்துச் செல்லும் இயேசு அவருடைய காதுகளில் தம் விரலையிட்டு, உமிழ்நீரால் அவருடைய நாவைத்தொட்டு, வானத்தை அண்ணார்ந்து பார்த்து ‘எப்பத்தா’ என்கின்றார். இதில் இயேசு செய்கின்ற ஒவ்வொரு செயலும் கவனத்திற்குரியது. காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான மனிதரை இயேசுவிடம் கொண்டுவந்த மனிதர்கள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப இயேசு தன்னுடைய விரலாலும் நாவாலும் அவரைத் தொடுக்கின்றார். மட்டுமல்லாமல், வானத்தை அண்ணார்ந்து பார்ப்பதன் மூலம் தந்தைக் கடவுளின் அருளையும் இரக்கத்தையும் அவருக்காக வேண்டி, அவரை பேசவும் கேட்கவும் செய்கின்றார். இவ்வாறு இயேசு தன்னை பரிவன்புமிக்கவராக நிலைநிறுத்துகின்றார்.

எவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்ட இயேசு

இயேசு காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான மனிதரை நலப்படுத்திவிட்டு, அவரிடம், “இதை எவருக்கும் சொல்லவேண்டாம்” என்று கட்டளையிடுகின்றார். இயேசு அந்த மனிதரிடம் சொல்லவேண்டாம் என்று கட்டளையிடுவது என்பது கண்டிப்பாய்ச் சொன்னார் என்ற பொருளில் எடுத்துக் கொள்ளலாம். இயேசு அவரிடம் ஏன் அவ்வாறு சொல்லவேண்டும் என்று தெரிந்துகொள்வது நல்லது.

ஒருவேளை அந்த மனிதர் மக்களிடம் சென்று நடந்தது அனைத்தையும் சொன்னால், மக்கள் இயேசுவை வெறுமென அருமடையாளம் நிகழ்த்துபவராகவே மட்டும் பார்க்கக்கூடும்.. அது தன்னுடைய பணிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதாலேயே இயேசு அவரிடம் அவ்வாறு சொல்கின்றார். ஆனால், இயேசு அவரிடம் சொன்னதற்கு மாறாக, நடந்ததை அவர் எல்லாரிடமும் சொல்கின்றார். இதனால் இயேசு சற்றுத் தனித்திருக்கும் நிலை ஏற்படுகின்றது.

இயேசு அருமடையாளங்கள் நிகழ்த்துபவர் மட்டுமல்ல; அவர் இறைமகன், மெசியா என்ற புரிதல் நமக்கு இருப்பது நல்லது.

சிந்தனை

‘ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுங்கள்’ (செக் 7:9) என்பார் இறைவாக்கினர் செக்கரியா. ஆகையால், நாம் இயேசுவைப் போன்று எளியவர், வறியவர் ஆகியோரிடம் அன்பும் பரிவும் காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.