14 பிப்ரவரி 2020, வெள்ளி

புனிதர்கள் சிரில் - துறவி, மெத்தோடியுஸ் - ஆயர்

நினைவு

முதல் வாசகம்

நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 46-49

அந்நாள்களில்

பவுலும் பர்னபாவும் துணிவுடன், “கடவுளின் வார்த்தையை உங்களுக்குத்தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலைவாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக்கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம். ஏனென்றால், ‘உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்’ என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்” என்று எடுத்துக் கூறினார்கள்.

இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 117: 1. 2 (பல்லவி: மாற் 16: 15)

பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

அல்லது: அல்லேலூயா.

1
பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! - பல்லவி

2
ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18-19

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9

அக்காலத்தில்

ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.

அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.

வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.