14 பிப்ரவரி 2020, வெள்ளி

1 அரசர்கள் 11: 29-32; 12:19

பொதுக்காலம் ஐந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை

1 அரசர்கள் 11: 29-32; 12:19

உன்னைவிட்டு விலகாத ஆண்டவரை விட்டு விலகாதே நீ

நிகழ்வு


மிகப்பெரிய மறைப்பணியாளரான டேவிட் லிவிங்ஸ்டன் இறந்தபோது அவருடைய உடலுக்கு மரியாதை செலுத்த பலர் வந்துபோய்க்கொண்டிருந்தார்கள். அவர்களோடு மிகவும் அழுக்குப் படிந்த உடையணிந்த ஒருவர் வந்தார். அவர் டேவிட் லிவிங்ஸ்டனின் உடலுக்கு மரியாதை செலுத்துவிட்டு தேம்பித் தேம்பி அழுதார்.

அவரைப் பார்த்துவிட்டு டேவிட் லிவிங்ஸ்டனின் உறவினர்கள் அவரிடம், “நீங்கள் யார்? உங்களுக்கு இவரை எப்படித் தெரியும்? என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் அவர்களிடம், “டேவிட் லிவிங்ஸ்டனும் நாம் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பிறகு இவர் ஆண்டவர் இயேசுவால் தொடப்பட்டு, ஆப்பிரிக்காவிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்று மிகப்பெரிய மறைப்பணியாளரானார். நான்தான் ஆண்டவரை மறந்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி, என்னுடைய வாழ்க்கையை இப்படிச் சீரழித்து வைத்திருக்கின்றேன். ஒருவேளை நானும் இவரைப் போன்று ஆண்டவரைத் தேடி, அவருடைய வழியில் நடந்திருந்தால், என்னுடைய வாழ்க்கை எப்படியோ இருந்திருக்கும்” என்று வருத்ததோடு சொன்னார்.

மேலே உள்ள நிகழ்வில் வருகின்ற டேவிட் லிவிங்ஸ்டனின் வகுப்புத் தோழரின் வாழ்க்கை நமக்கு ஓர் உண்மையை மிக ஆணித்தரமாக எடுத்துக் கூறுகின்றது. அது என்னவெனில், நாம் ஆண்டவரை மறந்து, அவரை விட்டு அகன்றுசென்றால், நம்முடைய வாழக்கை சீரழிந்துவிடும் என்பதாகும். அதே நேரத்தில் நாம் ஆண்டவரோடு ஒன்றித்திருந்து, அவருடைய வழியில் நடந்தால், அவரது ஆசி மேலும் மேலும் நம்மில் தங்கும். இன்றைய முதல் வாசகம் சாலமோன் அரசர் ஆண்டவரை விட்டு விலகிச் சென்றதால், என்ன நடந்தது என்பதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவரை மறந்த சாலமோன் அரசர்

இஸ்ரயேல் மக்களை தாவீதுக்குப் பின் அரசாளத் தொடங்கிய சாலமோன் அரசர் வேற்றினத்துப் பெண்களை மணந்தார். இதனால் அவர்கள் அவரைத் தங்களுடைய தெய்வங்களை வழிபடச் செய்துசெய்துவிட்டார்கள். யாவே இறைவன் இஸ்ரயேல் மக்களிடம், “நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது” (விப 20: 2-3) என்று தன்னுடைய ஊழியர் மோசே வழியாக கட்டளை தந்தார். அந்தக் கட்டளையை சாலமோன் அரசர் வசதியாக மறந்துவிட்டுப் பிற தேவைகளை வழிபடத் தொடங்கினார். இதனால் கடவுளின் சினம் அவர்மேல் எழ, “நான் உனக்கு விதித்த நியமங்களையும் மீறி, நீ இவ்வாறு நடந்து கொண்டதால் உன் அரசை உன்னிடமிருந்து பறித்து அதை உன் பணியாளனுக்குக் கொடுக்கப்போவது உறுதி” என்று கூறுகின்றார்.

ஆண்டவர் சாலமோனிடம் சொன்னது நிறைவேறியதா என்பதைத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எரொபவாம் வடநாட்டிற்கு அரசராதல்

ஆண்டவராகிய கடவுள் சாலமோன் அரசரிடம் சொன்னது நிறைவேறுகின்றது. அதுதான் இன்றைய முதல் வாசகமாக அமைந்திருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் அகியா தான் போர்த்தியிருந்த புதுச் சால்வையை பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்து, அவற்றில் பத்துத் துண்டுகளை எரொபவாமிடம் கொடுத்து, ஆண்டவர் அவருக்குச் சொன்னதைச் சொல்கின்றார். இந்த எரொபவாம் எப்ரோயிமைச் சார்ந்த நெபாற்று என்பவர் மகன்; சாலமோன் அரசரின் பணியாளருள் ஒருவர். ஆற்றல்மிக்கவரும் செயல் திறன்மிக்கவருமாய் இருந்த இவரை சாலமோன் அரசர் யோசேப்பின் வீட்டிலிருந்து கட்டாய வேலைசெய்ய வந்தவர்களைக் கண்காணிக்குமாறு சொல்லியிருந்தார். இப்படிப்பட்டவரைத் தான் ஆண்டவர் சாலமோனுக்குப் பின் இஸ்ரயேல் மக்கள் அரசாளச் செய்கின்றார்.

ஆண்டவருக்கு உரியவற்றை நாடுவோம்

இன்றைய இறைவார்த்தையைக் கருத்தூன்றிப் படிக்கின்றபொழுது ஒரு சிந்தனை மேலோங்கி வருகின்றது. அதுதான் நாம் ஆண்டவருக்கு உரியவற்றை நாடவேண்டும் என்பதாகும். சாலமோன் அரசர் ஆண்டவருக்கு உகந்தவற்றை நாடவில்லை; தேடவில்லை. அதனால் அவரிடமிருந்து அரசாட்சி பறிக்கப்பட்டு, அவருடைய பணியாளர்களுள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியானால் நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருக்கு உகந்தவற்றை நாடித் தேடவேண்டும். அப்பொழுதுதான் நாம் ஆண்டவரின் ஆசியைப் பெற்றுக்கொள்ளமுடியும். இறைவாக்கினர் ஆமோஸ் இவ்வாறு கூறுவார்: “ஆண்டவரைத் தேடுங்கள்; நீங்கள் வாழ்வீர்கள்.” (ஆமோ 5:4). ஆகையால், நாம் ஆண்டவரைத் தேடி அவருடைய திருவுளத்தின் படி நடக்கும் மக்களாய் வாழ்வோம்.

சிந்தனை

‘ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்பொழுது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்” (மத் 6:33) என்பார் இயேசு. எனவே, நாம் கடவுளைத் தேடி, அவருடைய திருவுளத்தின்படி நடக்கும் மக்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.