27 சனவரி 2019, ஞாயிறு

திருப்பலி முன்னுரை

பொதுக்காலம் 03ஆம் ஞாயிறு 27 01 2019

திருப்பலி முன்னுரை

கதிரவனைக் கண்டதும் காணாமல் போகும் பனித்துளி போல இறைவனின் அன்பு பார்வை நம்மை சூழ்ந்திட கவலைகள் காணாமல் போகும் என்பதை கூறும் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

இயேசு கூறிய அன்புப் பாதையில் தன்னலம் என்பதை ஒதுக்கிவிட்டு, தளராது நடக்கவும், நமக்கும் பிறருக்கும் மகிழ்வைத் தரும் வாழ்வை மேற்கொள்ளவும் வேண்டுவோம்.

இத்தரணியை உருவாக்கியவர்கள் எல்லாம் தனக்கென்று வாழாமல் பிறர்க்கென்று உழைத்தவர்கள்; இன்று பிறர்க்கென்று உழைப்பேன் என்று உறுதிமொழி எடுத்து விட்டு பிறர் உழைப்பை உறிஞ்சி தரணியை தாழ்த்திவிட்டார்கள். இவையெல்லாம் களையப்பட வேண்டி இறைவனிடம் வேண்டுவோம்.

இன்றைய முதல் வாசகத்தில், “இன்று ஆண்டவரின் புனித நாள்; அழுது புலம்ப வேண்டாம்” என்று ஆசியை பொழிகிறது நெகேமியா இறைவார்த்தைகள்.

உழைப்பின் வலியை உடல் வியர்க்கும்;
உள்ளத்தின் வலியை கண்கள் வியர்க்கும்;
உலகை உருவாக்கிய கடவுளின் கருணை
கண்ணீரைத் துடைத்து, கவலைகளை கரைத்து
மனங்களில் மகிழ்வைக் கொண்டு வரும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்யவும், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும், மனுமகனாகிய இறைமகனின் மீது எழுந்துள்ள தூய ஆவியும் அவரால் மறைநூல் வாக்கு நிறைவேறியதையும் லூக்கா நற்செய்தியாளரின் வார்த்தைகள் எடுத்தியம்புகின்றது.

இறையாட்சிக்கு உட்பட்ட அனைவரும் ஒரே உடலை சார்ந்தவர்கள் என்கிறார் பவுல். இன்ப துன்பங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கும் பங்கு உண்டு கிறிஸ்துவோடு இணைந்து உள்ள நாம் சமூகத்தில் அனைவரோடும் அன்புறவோடு இணைந்து வாழ வேண்டும்.

நாம், நம் குடும்பம் என்ற சிறிய வட்டத்துக்குள் சுருங்கிக் கொள்ளாமல் சமூக அக்கறையோடு இந்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் இணையும்போது நம்மோடு கடவுள் இணைந்து கொள்வார் என்ற சிந்தனைகளை சிந்தையில் தாங்கி இப்பலியில் பங்கேற்போம்.

மன்றாட்டுகள்

1. நற்செய்தியை வாழ்வாக்கியவரே எம் இறைவா!

நற்செய்திப் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் திருச்சபைப் பணியாளர்கள் நற்செய்தியை வார்த்தைகளால் மட்டும் அறிக்கையிடாமல், வாழ்வில் வெளிப்படுத்தி மக்களை நல்வழியில் நடத்திடும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. தன்னலம் துறந்து பிறர் நலம் பேணுங்கள் என்று அறிவுறுத்தியவரே!

எம் நாட்டை ஆளும் தலைவர்கள், ஆட்சியாளர்கள் “பிறர் பணிபுரியவே பொது வாழ்வு” என்பதை உணர்ந்து நாட்டு மக்களை மகிழ்விக்க கூடிய திட்டங்களை செயல்படுத்தவும் போராட்டம் சிக்கல்களை தீர்க்கும் அறிவு தந்து வழிநடத்தும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. கலங்க வேண்டாம், ஆண்டவரில் மகிழ்ந்திருங்கள் என்றவரே எம் இறைவா!

தங்கள் வாழ்க்கைப் பாதையில் எதிர்கொள்ளும் தடைகளும் பிரச்சனைகளும் கலங்கடிக்கும் வேளைகளில் உம் அரவணைப்பை உணர்ந்து, உம்மில் மகிழ்ந்து இருக்கும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.

“GOD IS LOVE”

Rev. Fr. Amirtha Raj Sundar J.,
[email protected]; + 91 944 314 0660; www.arulvakku.com