27 சனவரி 2019, ஞாயிறு

தூய ஆஞ்சலா மெர்சி

தூய ஆஞ்சலா மெர்சி (ஜனவரி 27)

நிகழ்வு

ஆஞ்சலாவிற்கு பத்து வயது நடக்கும்போதே அவருடைய தந்தையும் தாயும் இந்த மண்ணுலகத்தை விட்டு – அவரை விட்டுப் - பிரிந்து சென்றனர். இதனால் அவர் தன்னுடைய சகோதரியின் பராமரிப்பிலே வளர்ந்து வந்தார். ஒருசில ஆண்டுகளில் அவரும் நோய்வாய்ப்பட்டு இறந்தபோகவே எல்லாரையும் இழந்து அனாதையானார். ஆஞ்சலாவின் வருத்தமெல்லாம் தன்னுடைய சகோதரி நோயில் பூசுதல் என்ற அருட்சாதனத்தைப் பெறாமலே இறந்துபோனதால், அவர் விண்ணகத்தில் இருப்பாரா? அல்லது நரகத்தில் இருப்பாரா? என்பதாகத்தான் இருந்தது. இதனால் அவர் ஜெபத்தில் இயேசுவிடம், தன்னுடைய சகோதரி எங்கே இருக்கின்றார் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். ஒரு குறிப்பிட்ட நாளில் இயேசு அவருக்குக் காட்சி கொடுத்து, “ஆஞ்சலா! உன்னுடைய சகோதரி விண்ணகத்தில், இறைவனின் திருமுன் எப்போதும் மகிழ்ந்திருக்கின்றார். அதனால் நீ அவளைக் குறித்து கவலைப்படதே” என்று சொல்லிவிட்டு மறைந்தார். அதன்பிறகுதான் ஆஞ்சலா நிம்மதி அடைந்தார்.

ஆஞ்சலாவிற்கு இயேசுவே தோன்றி காட்சி கொடுத்தார் என்றால், அவர் எந்தளவுக்கு இயேசுவோடு இறைவேண்டலிலும் நோன்பிலும் இணைந்திருப்பார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

வாழ்க்கை வரலாறு.

ஆஞ்சலா மெர்சி, இத்தாலில் உள்ள டெசன்சானோ என்னும் இடத்தில், 1470 ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 21 ஆம் நாள் பிறந்தார். சிறுவயது முதலே மிகுந்த பக்தியோடு வளர்ந்த இவருக்கு சகோதரி ஒருவரும் இருந்தார்.

ஆஞ்சலாவிற்கு பத்து வயது நடக்கும்போது அவருடைய பெற்றோர் அவரை விட்டுப் பிறந்து சென்றனர். இதனால் அவர் தன்னுடைய சகோதரியுடன் சேர்ந்து சலோ என்னும் இடத்தில் இருந்த தன்னுடைய மாமாவின் வீட்டில் இருந்து வளர்ந்து வளர்ந்தார். துரதிஸ்டம் என்னவென்றால், ஒருசில ஆண்டுகளில் அவருடைய மாமா இறந்துபோனார், அவரைத் தொடர்ந்து அவருடைய சகோதரியும் இறந்துபோனார். இதனால் ஆஞ்சலா அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. தன்னோடு இருந்த எல்லாரும் இறந்துபோனதால், மீண்டுமாக அவர் டெசன்சோனாவில் இருந்த தன்னுடைய சொந்த வீட்டிற்கு வந்தார். அங்கே நிறைய குழந்தைகள் போதிய கல்வி அறிவில்லாமலும் கிறிஸ்துவைப் பற்றிய அறிவில்லாமலும் இருந்ததைக் கண்டு, அவர்களுக்காக தன்னுடைய இல்லத்தில் ஒரு பள்ளிக்கூடத்தை அமைத்தார். அதன்மூலம் அங்கு வந்த குழந்தைகளுக்கு மறைக்கல்வியையும் அடிப்படைக் கல்வியையும் கற்றுக்கொடுத்து வந்தார்.

ஆஞ்சலா செய்துவந்த இத்தகைய சேவையினைப் பார்த்துவிட்டு அவரோடு நிறையப் பெண்கள் சேர்ந்தார்கள். இதனால் மறைக்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையும் பெருகியது; பணியின் தளங்களும் விரிவடைந்தது. ஆஞ்சலா தன்னை பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் சேர்த்துகொண்டு இத்தகைய பணிகளை செய்து வந்தார். அவர் பல்வேறு பணிகளைச் செய்துவந்தபோதும் ஜெபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தவறியதே இல்லை.

ஒரு சமயம் அவர் புனித நாடுகளுக்கு திருப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது கிரீட் என்னும் நகரை அவர் அடைந்தபோது மேலிருந்து விழுந்த சீழ் அவருடைய கண்களில் விழுந்து, கண்களைக் குருடாக்கியது. அவரோடு இருந்தவர்கள் திருப்பயணத்தை ரத்துசெய்து திரும்பிவிடலாம் என்று சொன்னார்கள். ஆனால் அவரோ, “அப்படியெல்லாம் செய்யவேண்டாம், நம்முடைய முயற்சியைக் கைவிடாமல், தொடர்ந்து போவோம், வருவதைப் பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லிக்கொண்டு புனித நாடுகளுக்குப் போனார். வழியில் அவருக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. புனித நாடுகளுக்குச் சென்றுவிட்டு மீண்டுமாக அவர் கிரீட் நகர் வழியாக வந்தபோது, எந்த இடத்தில் அவருக்கு கண்பார்வை போனதோ, அந்த இடத்தில் அவர் சிலுவையைக் கையில் ஏந்தி ஜெபித்தார். ஆச்சரியம் என்னவென்றால், அவருடைய கண்பார்வை திரும்பியது. அப்போது அவரோடு இருந்தவர்கள் எல்லாம், ‘ஆஞ்சலா சாதாரண ஒரு பெண்மணி கிடையாது, அவர் இறைவனின் ஆசிபெற்றவர்’ என்னும் உண்மையை உணர்ந்துகொண்டார்கள்.


இன்னொரு சமயம் ஆஞ்சலா உரோமை நகருக்குச் சென்றிருந்தபோது அவரிடமிருந்த அறிவாற்றலைக் குறித்துக் கேள்விப்பட்ட திருத்தந்தை ஏழாம் கிளமென்ட், அவரை உரோமையிலிலேயே தங்கி, தனக்கு உதவி புரியுமாறு கேட்டார். ஆனால் இவர் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவதும் நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதுதான் தன்னுடைய பிரதானப் பணி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு வந்துவிட்டார்.

1535 ஆம் ஆண்டு, 28 பெண்களை வைத்துக்கொண்டு ஆர்ஸ்லைன் என்னும் சபையை நிறுவினார். அந்த சபையின் முதன்மையான நோக்கமே ஏழைக் குழந்தைகளுக்கு சமய மற்றும் அடிப்படைக் கல்வியைப் புகட்டுவதுதான். ஆஞ்சலா தன்னுடைய சபையின் வழியாக கல்விப் பணியையும், நோயாளிகளைக் கவனித்துக் கொள்கின்ற பணியையும் மிகச் சிறப்பாக செய்துவந்தார். இப்படிப்பட்ட இறையடியாள் 1540 ஆம் ஆண்டு, ஜனவரி 27 ஆம் நாள், இறையடி சேர்ந்தார். இவருக்கு 1807 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய ஆஞ்சலாவின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. கற்றுக்கொடுத்தல்

தூய ஆஞ்சலாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடமே அவர் ஏழைக் குழந்தைகளுக்கு ஆண்டவர் இயேசுவைப் பற்றிய கல்வியையும் அடிப்படைக் கல்வியையும் கற்றுக்கொடுத்ததுதான். அவருடைய விழாவைக் கொண்டாடுகின்ற நாம், நம் பகுதியில் வாழக்கூடிய ஏழை எளியவர்களுடைய கல்வி நலனில் அக்கறை காட்டுகின்றமா?, அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய நமது பங்களிப்பைச் செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் பங்களாதேசில் இயங்கி வருகின்ற டி.நெட் என்ற சமூகத் தொண்டு நிறுவனம் செய்துவருகின்ற பணியினை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்றது. டி.நெட் என்ற அந்தத் தொண்டு நிறுவனம் ‘இன்போலேடிஸ்’ என்ற 20 பெண்கள் கொண்ட குழுவினை உருவாக்கி, அவர்களுக்கு மிதிவண்டி, கையில் மடிக்கணினி, அலைபேசி அதோடு சேர்த்து இணையதள வசதி எல்லாவற்றையும் கொடுத்து கிராமங்கள், நகர்களுக்கு அவர்களை அனுப்பி வைத்து மக்களுக்குக் கல்வி அறிவு புகட்டிவருகின்றது. மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு விடைதெரியாத பட்சத்தில், இணையத்தில் அவர்கள் தெரிந்துகொண்டு, அதனை மக்களுக்குச் சொல்லித்தரவேண்டும் என்பதற்காகத்தான் மடிக்கணினி, இணையதள வசதி எல்லாம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ‘இன்போலேடிஸ்’ என்ற அந்த குழுவின் வருகைப் பின்னர் பங்களாதேஷம் கல்வியறிவில் உயர்ந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன.

நாமும் நம்முடைய பகுதியில் இதுபோன்ற குழுக்களை உருவாக்கி, அப்படி இல்லாத பட்சத்தில் நாமே சென்று கல்வியறிவில்லாத மக்களுக்கு கல்வியறிவு புகட்டுவது மிகவும் சரியான ஒரு செயல்திட்டமாக இருக்கும்.

ஆகவே, தூய ஆஞ்சலாவின் விழாவைக் கொண்டாடுகின்ற நாம், அவரைப் போன்று ஏழை எளிய குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை கொள்வோம், நம்மோடு வாழ்கின்ற நோயாளிகளைக் கவனித்துக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். - Fr. Maria Antonyraj, Palayamkottai.