27 சனவரி 2019, ஞாயிறு

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு

ஜனவரி 27

 

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு

(நெகேமியா 8:2-4,5-6,8-10; 1கொரிந்தியர் 12: 12-30; லூக்கா 1:1-4, 4:14-21)

 

துணிவுள்ள இறைவாக்கினர்களாவோம்

 

நிகழ்வு

 

         விவேகானந்தர் அமெரிக்கா சென்றிருந்த தருணம், அங்கிருந்த பல இடங்களுக்குச் சென்று அவர் சொற்பொழிவு ஆற்றிவந்தார். அவ்வாறு அவர் சென்ற இடங்களிலெல்லாம், ‘இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும், அப்படி வாழ்கின்றபோது எதைக் குறித்தும் பயப்படத் தேவையில்லை’ எனப் பேசிவந்தார்.

 

இதை நுட்பமாகக் கவனித்துவந்த ஒருசில இளைஞர்கள், ‘இந்த மனிதர் செல்லும் இடங்களிலெல்லாம் இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும், துணிவோடு இருக்கவேண்டும் என்று போதித்துக்கொண்டு வருகிறாரே, உண்மையில் இவர் துணிவுள்ள மனிதர்தானா? என்பதை சோதித்துப் பார்ப்போம்’ என்று அதற்கான வேலைகளில் அவர்கள் இறங்கினார்கள்.

 

ஒருநாள் விவேகானந்தர் ஒரு பெரிய அரங்கில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடிரென்று அந்த அரங்கத்திற்குள் நுழைந்த ஒருசில முகமூடி அணிந்த மர்ம நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்கள். இப்படியொரு திடீர் தாக்குதலை யாரும் எதிர்பாராததால், அரங்கில் இருந்த எல்லாரும்  அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். ஒருசில பெண்கள் துப்பாக்கிச் சத்தம் கேட்டு அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார்கள். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் தான் இருந்த இடத்தை விட்டு நகராமல், அப்படியே இருந்தார். அது வேறுயாருமல்ல, விவேகானந்தர்தான்.

 

ஏறக்குறைய பத்து நிமிடங்களுக்கு மேல் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் ஒருவழியாக ஓய்ந்தது. அதிர்ஷ்டவசமாக யார்மீதும் குண்டுகள் பாயவில்லை. இதற்குப் பின்பு எல்லாரும் அரங்கத்திற்குள் வந்ததும், விவேகானந்தர் எந்தவொரு பதட்டமோ, பயமோ இல்லாது  தான் விட்ட இடத்திலிருந்து பேசத் தொடங்கினார். எல்லாரும் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தார்கள். அந்நேரத்தில் அங்குவந்த ஒருசிலர் இளைஞர்கள் விவேகானந்தரிடம் சென்று, “சுவாமி! எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். நாங்கள்தான் இந்தத் துப்பாக்கிச் சுடுதலில் ஈடுபட்டோம்... நீங்கள் எத்துணைத் துணிவுள்ளவர் என்பதைச் சோதித்துப் பார்க்கவே இவ்வாறு செய்தோம்... துப்பாக்கிச் சத்தம் கேட்டு எல்லாரும் ஓடி ஒழிந்தபோது, நீங்கள் மட்டும், எதற்கும் பயப்படாமல், அப்படியே இருந்தீர்கள் அல்லவா!. உண்மையில் நீங்கள் துணிவுள்ள மகன்தான்” என்று அவரை வெகுவாகப் பாராட்டினார்கள்.

 

இறைவனைப் பற்றிப் போதிப்பவர்கள், இறைவார்த்தையை எடுத்துரைக்கும் இறையடியார்கள், எதற்கும் அஞ்சாமல் துணிவோடு இருக்கவேண்டும். அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டுதான் இந்த நிகழ்வு.

 

இயேசு என்னும் பெரிய இறைவாக்கினர்

 

பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கின்ற நமக்கு இன்றைய இறைவார்த்தை, நாம் ஒவ்வொருவரும் துணிவுள்ள இறைவாக்கினராக வாழவேண்டும் என்றொரு அழைப்பைத் தருகின்றது. நாம் எப்படி இயேசுவைப் போன்று துணிவுள்ள இறைவாக்கினர்களாக வாழலாம் என்று இறைவார்த்தையின் ஒளியில் சிந்தித்துப் பார்ப்போம்.

 

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நாசரேத்தில் உள்ள  தொழுகைக்கூடத்திற்கு சென்று கற்பிக்கின்றார். லூக்கா நற்செய்தியில் இடம்பெறுகின்ற இந்த நிகழ்வு இயேசுவை இறைவாக்கினருக்கெல்லாம் பெரிய இறைவாக்கினராகவும், இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும் அவர்போன்று எப்படி நடக்கவேண்டும் என்ற சிந்தனையையும் நமக்குத் தருகின்றது.

 

  1. வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்ட இயேசு   


 

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தமது வழக்கப்படி, ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்றார் என்று வாசிக்கின்றோம் (4:16). அப்படியானால், அவர் வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்டு, ஆண்டவரோடு கொண்டிருந்த உறவில், அன்பில் நிலைத்திருந்தார் என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த நிகழ்வு மட்டும் கிடையாது. பனிரெண்டு வயது நிரம்பிய ஒவ்வொரு யூதரும் எருசலேமில் ஆண்டுதோறும் நடைபெறும் பாஸ்கா விழாவில் கலந்துகொள்ளவேண்டும். இயேசு அதில் தவறாது கலந்துகொண்டார் என்பதை விவிலியம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது (லூக் 2:41-42, யோவா 2:13). இயேசுவுக்கு பரிசேயர்கள் பின்பற்றி வந்த சடங்குமுறைகளில் மாற்றுக்கருத்து இருந்தாலும்கூட, அதைக் குறித்து காரசாரமாக அவர்கோடு அவர் விவாதித்தாலும்கூட, வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்டு இறை மனித உறவில் நிலைத்திருந்தார்.

 

இன்றைக்கு ஒருசிலர், நான் ஏன் ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனை வழிபடவேண்டும்? என்று பிதற்றுவதைப் பார்க்க முடிகின்றது. இத்தகையோர் இயேசுவின் வாழ்வை ஆழமாக படித்துப் பார்ப்பது நல்லது. நாம் ஏன் வழிபாடுகளில் கலந்துகொள்ளவேண்டும் என்பதற்கான தெளிவாக பதிலை எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் இன்னும் அழகாக எடுத்துரைப்பார். “சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது; ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக; இறுதிநாள் நெருங்கிவருவதைக் காண்கின்றோம்; எனவே இன்னும் அதிகமாக ஊக்கமூட்டுவோம்” என்று. (எபி 10:25). ஆம், வழிபாடு என்பது இறைவனைத் தொழுவதற்காக மட்டுமல்ல, நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்ளவும்தான். இதனை நாம் உணர்ந்து செயல்படுவது நல்லது.

 

  1. ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை எடுத்துரைத்த இயேசு  


 

தொழுகைக்கூடத்திற்குச் செல்கின்ற இயேசு, எசாயாவின் சுருளேட்டை எடுத்து வாசிக்கத் தொடங்கிவிட்டு, அதற்கு விளக்கம் கொடுக்கத் தொடங்குகின்றார். வழக்கமாக யூதர்களின் தொழுகைக்கூடத்தில் வழிபாடனது இறைவேண்டலோடு தொடங்கி, இறைவார்த்தை வாசிக்கப்பட்டு, அதற்கு விளக்கம் கொடுக்கப்படும். பின்னர் குருவானவர் (ரபி) இருந்தால் ஆராதனையோடு நிறைவுபெறும் (இச 6:4-9,11:13-21) இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்றபோதும் அப்படித்தான் நடைபெறுகின்றது. இதை ஒட்டி இன்னொரு விஷயம், இயேசு வாசித்த எசாயாவின் சுருளேட்டை வாசிக்கின்றவர்கள், அதற்கு விளக்கம் கொடுக்கின்றபோது மெசியாவைக் குறித்து விளக்கம் கொடுப்பார்கள். ஆனால் இயேசுவோ, ‘நீங்கள் கேட்ட வாக்கு இன்று நிறைவேறிற்று’ என்கின்றார். அதுமட்டுமல்லாமல் ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை எடுத்துரைக்க நான் வந்திருக்கிறேன் என்கின்றார்.

 

அருள்தரும் ஆண்டு அல்லது ஜூபிலி ஆண்டினைக் குறித்து லேவியர் புத்தகம் 25 அதிகாரம் எடுத்துச் சொல்கின்றது. ஏழு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஐம்பதாம் ஆண்டில் அடிமைகள் விடுவிக்கப்பட்டு, கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யவும், நிலைத்திற்கு ஓய்வு கொடுக்கப்படவும் வேண்டும். இத்தகைய அருள்தரும் ஆண்டினை எடுத்துச் சொல்லும் இயேசு தன்னுடைய பணிவாழ்வில் செய்துகாட்டுகின்றார். பொருளாதார ரீதியில் அல்ல, ஆன்மீக ரீதியில் மக்களுடைய பாவங்களை மன்னித்து, மக்களுக்கு இளைப்பாற்றி வழங்குவதன் வழியாக.

 

இயேசு கிறிஸ்து, ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிப்பதோடு மட்டுமல்லாமல், இன்னபிற காரியங்களையும் செய்வேன், அதுவும் எலியா, எலிசா இறைவாக்கினர்களைப் போன்று எல்லா மக்களுக்கு செய்வேன் என்று சொன்னதும், தொழுகைக்கூடத்தில் இருந்த யூதர்கள் கொதித்தெழுகிறார்கள்.

 

  1. துணிவுள்ள (பெரிய) இறைவாக்கினர் இயேசு


 

மெசியா என்பவர் யூதர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைத்துக்கொண்டிருந்த யூதர்கள் மத்தியில், மெசியாவாகிய தான் யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்கும் சொந்தம், எல்லாருக்கும் மத்தியிலும் தன்னுடைய பணி இருக்கும் என்று சொல்வதனால் தனக்குப் பெரிய பிரச்சனை வரும் என்று இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் அவர் துணிவோடு தன்னுடைய பணியென்ன, தன்னுடைய பனியின் இலக்கு மக்கள்  யார்? யார்? என்று எடுத்துரைக்கின்றார். இதனால் யூதர்கள் இயேசுவை மலைமீது இருந்து தள்ளிவிட்டு கொல்லமுயல்கின்றார்கள்.

 

ஏற்கனவே இயேசுவை தச்சர் மகன் என்று புறக்கணிக்கும் யூதர்கள், அவர் எல்லாருக்கும் மத்தியிலும் பணிசெய்வேன் என்று சொல்வதைக் கேட்டு அவரைக் கொல்லமுயல்கிறார்கள். அதற்காக பயந்துவிட்டு தன்னுடைய கொள்கையிலிருந்து அவர் பின்வாங்கிவிடவில்லை. மாறாக இறுதிவரைக்கும் துணிவுடன் இருந்து ஆண்டவரின் வார்த்தையை எடுத்துரைக்கின்றார். இயேசுவின் வழியில் நடந்து, இறைப்பணியை செய்கின்ற ஒவ்வொருவரும் எதிர்வரும் சவால்களைக் கண்டு பயந்துவிடாமல், துணிவோடு இருந்து இயேசுவுக்கு சான்று பகரவேண்டும் என்பதுதான் அவர் இந்நாளில் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்ற ஒன்றாக இருக்கின்றது.

 

சிந்தனை

 

இறைவாக்கினருக்கு ஏச்சுக்களும் பேச்சுக்களும் இலவசம் என்பதுபோல, இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவருக்கும், அவர் பணிசெய்கின்ற ஒவ்வொருவருக்கும் அவரைப் போன்று ஏச்சுக்களும் பேச்சுக்களும் உண்டு. அதற்காக நாம் கலந்கிவிடாமல், அவர்மீது நம்பிக்கை வைத்து, துணிவோடு இறைவாக்கினர் பணியைச் செய்யவேண்டும். அப்போதுதான் நாம் துணிவுள்ள இறைவாக்கினர்களாக மாறமுடியும்.

 

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், துணிவுள்ள இறைவக்கினர்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.