செவ்வாய்க்கிழமை
3ஆம் வாரம் - செவ்வாய்
முதல் ஆண்டு
முதல் வாசகம்
இதோ உமது திருவுளத்தை நிறைவேற்ற, வருகின்றேன்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 1-10
சகோதரர் சகோதரிகளே, வரப்போகும் நலன்களின் உண்மை உருவைத் திருச்சட்டம் எடுத்துக்காட்டவில்லை; அது அவற்றின் நிழலாக மட்டுமே உள்ளது. எனவேதான் ஆண்டுதோறும் இடைவிடாமல் செலுத்தப்படும் அதே பலிகளால் வழிபட வருபவர்களை நிறைவுள்ளவர்களாக்க அதற்கு வலிமை இல்லை. அவ்வாறு இருந்திருந்தால், பலி செலுத்துவது நின்றிருக்கும் அல்லவா?
ஏனெனில், வழிபடுபவர்கள் ஒரே முறையில் தூய்மை அடைந்திருந்தால், பாவத்தைப் பற்றிய உணர்வே அவர்களிடம் இராதே! மாறாக, பாவங்கள் நீங்கவில்லை என்பதை அந்தப் பலிகள் ஆண்டுதோறும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. ஆம், காளைகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது.
அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, ``பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல.
எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன். என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது'' என்கிறார். திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், ``நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம் போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல'' என்று அவர் முதலில் கூறுகிறார்.
பின்னர் ``உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்'' என்கிறார்.
பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதன் மூலம் நாம் தூயவர் ஆக்கப்பட்டிருக்கிறோம்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 40: 1,3யன. 6-7ய. 9. 10 (பல்லவி: 7ய, 8ய)
பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற கடவுளே, இதோ வருகின்றேன்.
1 நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். 3யன புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். பல்லவி
6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7ய எனவே, `இதோ வருகின்றேன்.' பல்லவி
9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். பல்லவி
10 உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப் பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை. பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே, என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-35
அக்காலத்தில் இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.
அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. ``அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்'' என்று அவரிடம் சொன்னார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, ``என் தாயும் என் சகோதரர்களும் யார்?'' என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ``இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.