29 சனவரி 2019, செவ்வாய்

தூய அப்பொலினாரிஸ் கிலாடியுஸ்

தூய அப்பொலினாரிஸ் கிலாடியுஸ் ( ஜனவரி 29)

நிகழ்வு

அப்பொலினாரிஸ் வாழ்ந்து வந்த இரண்டாம் நூற்றாண்டில், மார்குஸ் அரெலியாஸ் என்னும் மன்னன் துருக்கியை ஆண்டுவந்தான். ஒரு சமயம் அவன் அப்பொலினாரிசை அணுகிவந்து, “நான் எதிரி நாட்டோடு போர்தொடுக்கப் போகின்றேன். ஆதலால், நீர் என்னுடைய படை போரில் வெற்றி பெற ஜெபிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். அதற்கு அப்பொலினாரிஸ் அவனிடம், “நான் உனக்காக ஜெபிக்கவேண்டும் என்றால், நீ உன்னுடைய நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கின்ற வன்முறைகள், இனிமேலும் நடக்காமல் இருக்க சட்டம் பிறப்பிக்கவேண்டும்” என்றார். அவனும் அதற்குச் சரியென்று ஒப்புக்கொண்டு போருக்குச் சென்றான். அப்பொலினாரிஸ், கிறிஸ்தவ மக்களை தன்னோடு சேர்த்துக்கொண்டு, மன்னனின் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று ஜெபித்தார். போரில் மார்குஸ் அரேலியசுக்கு வெற்றி கிடைத்தது. அதனால் அவன், கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறை நடவாமல் இருக்க சட்டம் பிறப்பித்தான்.

அப்பொலினாரிஸ், ஒரு ஜெப வீரராக இருந்ததினால்தான் அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டு, போரில் மார்குஸ் அரேலியசுக்கு வெற்றி கிடைத்தது என்பதை இதன்வழியாக நாம் உணர்ந்துகொள்ளலாம்.

வாழ்க்கை வரலாறு

அப்பொலினாரிஸ், துருக்கியில் இருக்கின்ற பிரிஜியா என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் யார், இவருடைய இளமைக் காலம் எப்படி இருந்தது என்பது பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால் இவர் ஹிரோயோளிஸ் என்னும் இடத்தில் 170 ஆம் ஆண்டிலிருந்து 180 ஆம் ஆண்டுவரை பத்தாண்டுகள் ஆயராக இருந்தார் என்பது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆயராக இருந்த காலகட்டத்தில் கிறிஸ்தவ சமயத்திற்கு எதிராக இருந்த தப்பறைக் கொள்கைகளை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார். இறைவன் இவருக்கு எழுத்தாற்றலைக் கொடுத்திருந்தார். அந்த ஆற்றலைக் கொண்டு யாராரெல்லாம் கிறிஸ்தவ மறைக்கு எதிராகச் செயல்பட்டார்களோ, அவர்களுக்கு எதிராக தன்னுடைய கண்டனக் குரலைப் பதிவுசெய்தார். குறிப்பாக யூதர்களுக்கு எதிராக அவர் எழுதிய இரண்டு புத்தகங்களும் வேற்றினத்தாருக்கு எதிராக அவர் எழுதிய ஐந்து புத்தகங்களும் இன்றைக்கும் திருச்சபைக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக இருக்கின்றன.

அப்பொலினாரிஸ், வாழ்ந்து வந்த காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிறைய வன்முறைகளும் அடக்குமுறைகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அத்தகைய சூழ்நிலையிலும் அவர் கிறிஸ்தவ விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்தார். மட்டுமல்லாமல், யாராரெல்லாம் கிறிஸ்தவ மறைக்கு எதிராகப் பேசினார்களோ அவர்களுக்கு எதிராக தன்னுடைய கண்டனக் குரலைப் பதிவு செய்துகொண்டே வந்தார். இதற்கிடையில் இவர் மன்னர் மார்குசிற்கு ஒரு போரின்போது ஜெப உதவியை நல்கியதால், மன்னர் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எந்த வன்முறையும் நிகழாது என்று ஆணை பிறப்பித்தார். ஆனால், ஏற்கனவே இருந்த சட்டம் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இருந்ததினால், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை குறையவே இல்லை, அப்பொலினாரிஸ், இவ்வாறு தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் கொல்லப்பட்டு, கிறிஸ்துவுக்காக மறைசாட்சியானர்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய அப்பொலினாரிசின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. அஞ்சா நெஞ்சத்தினராய் வாழ்தல்

தூய அப்பொலினாரிசின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கின்றபோது அவர் எந்தளவுக்கு துணிச்சல் உள்ளவராக, இறைவனைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாத உள்ளத்தினராய் வாழ்ந்து வந்தார் என்பது நமக்குப் புரியும். தூய அப்பொலினாரிசின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று உண்மையை அஞ்ச நெஞ்சத்தோடு உரைக்கின்றவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

யோசுவா புத்தகம் 1:9 ல் வாசிக்கின்றோம், “வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்” என்று. விவிலியத்தில் வரும் இவ்வார்த்தைகளை இறைவன் யோசுவாவைப் பார்த்துக் கூறுவதாக இருந்தாலும், நம் ஒவ்வொருவரையும் பார்த்துத்தான் கூறுகின்றார். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் அஞ்சா நெஞ்சத்தினராய் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.

மாவீரன் நெப்போலியன் போரில் சிறைபிடிக்கப்பட்டு ஹெலனாத் தீவில் வைக்கப்பட்டிருந்தபோது, ஓர் ஆங்கிலப் பத்திரிகை, “நெப்போலியன் அவமானம் தாங்காமல், அந்தச் சிறையிலேயே தற்கொலை செய்துகொள்ளப்போகிறார்” என்று எழுதி இருந்தது. அதற்கு நெப்போலியன் ,”கோழை தான் சாவுக்குப் பயந்து தற்கொலை செய்துகொள்வான், நான் கோழையல்ல, வீரன். அதனால் எவ்வளவு பெரிய சவால் வந்தாலும், அதனை நான் துணிவுடன் எதிர்கொள்வேன்” என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு எல்லாரும் மலைத்துப் போய் நின்றனர். ஆம், தைரியமும் மனவுறுதியும் நம்மிடத்தில் இருக்கின்றபோது நம்மால் எவ்வளவு பெரிய சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்பதுதான் உண்மை.

ஆகவே, தூய அப்பொலினாரிசின் விழாவைக் கொண்டாடுகின்ற நாம், அவரைப் போன்றது அஞ்சா நெஞ்சத்தோடு இறைவனுக்கு சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.