29 சனவரி 2019, செவ்வாய்

ஜனவரி 29

ஜனவரி 29

 

எபிரேயர் 10:1-10

 

இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதே மிகச் சிறந்த பலி

 

நிகழ்வு

 

         துறவற வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பிய இளம்பெண்ணொருத்தி ஒருநாள் பங்குத்தந்தையை வந்து சந்தித்து, “சுவாமி! நான் துறவற வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புகிறேன். ஆனால் எனக்குள் இருக்கின்ற சிறு தயக்கம் என்னை அந்த முடிவை எடுக்கவிடாமல் தடுத்துக்கொண்டே இருக்கின்றது. இதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டாள்.

 

அதற்கு பங்குத்தந்தை அவளிடம், “துறவற வாழ்க்கையை மேற்கொள்வதில் உனக்கிருக்கின்ற தயக்கம் என்னவென்று என்னிடத்தில் சொல், நான் உன்னுடைய தயக்கம் போக்கி, உனக்கு நல்வழி காட்டுகிறேன்” என்றார். உடனே அந்த இளம்பெண், “சுவாமி! இறைவனின் திருவுளத்திற்கு என்னையே நான் கையளித்து, துறவற வாழ்க்கையை நான் மேற்கொள்ளும்போது, அவர் என்னைக் கண்காணாத தேசத்திற்கு அனுப்பி வைத்துவிட்டார் எனில், அங்கு நான் என்னசெய்வது? அப்போது நான் படுகின்ற வேதனைகளை யாரிடத்தில் பொய் சொல்வது?” என்று ஒருவிதமான பதற்றத்தோடு சொன்னாள்.

 

அந்த இளம்பெண் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட பங்குத்தந்தை தொடர்ந்து பேசினார், “உதாரணத்திற்கு கடுங்குளிர் அடித்துக்கொண்டிருக்கும் ஓர் அதிகாலைப் பொழுதில், குளிரில் நடுங்கிக்கொண்டு ஒரு பறவை உன்வீட்டுச் ஜன்னலைத் தட்டிக்கொண்டிருக்கிறது என்றால், நீ அதை என்ன செய்வாய்?... இதுதான் சமயம் என்று அதைப் பிடித்து தீயில் வாட்டிச் சாப்பிடுவாயா? அல்லது அதை நீ கரிசனையோடு பிடித்து, அதன் குளிரைப் போக்கி, உன் கையால் தாங்கிக்கொள்வாயா?” என்று கேட்டார். அதற்கு அந்த இளம்பெண், “என்னை அண்டி வரும் பறவையை நான் எப்படி கொல்லுவேன்?. ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டேன். மாறாக, அதை நான் என் கையில் தாங்கி அதனுடைய குளிர்போக்கி, அதற்குப் பாதுகாப்பளிப்பேன்” என்றாள்.

 

நீ சொன்னது மிகச் சரி, எப்படி நீ உன்னை அண்டிவரும் பறவைக்கு நீ நல்லது செய்ய நினைப்பாயோ, அதுபோன்றுதான் கடவுளும் அவருடைய திருவுளம்/ அவருடைய பணி செய்ய முன்வரும் உன்னை ஒருபோதும் கைவிட்டுவிட மாட்டார். மாறாக உன்னைக் கரத்தில் தாங்கி வழிநடத்துவார்” என்றார்.

 

ஒவ்வொருவரும் தன்னுடைய விருப்பத்தின் படி அல்ல, இறைத்திருவுளத்தின்படி நடக்கவேண்டும், அப்படி நடக்கின்றபோது இறைவன் நம்மைத் தன் கையில் வைத்துத் தாங்கிக்கொள்வார் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

 

இறைத்திருவுளம் நிறைவேற்றிய இயேசு

 

எபிரேயர் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் செலுத்தப்பட்ட முழுமை அல்லது நிறைவுபெறாத பலியையும், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் ஆண்டவர் இயேசு செலுத்திய முழுமையான, அதே நேரத்தில் நிறைவான பலியையும் பற்றிப் பேசுகின்றார்.

 

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் செலுத்தப்பட்ட பலி முழுமை பெறாமல் போனதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முதல்காரணம், இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்தில் நாம் வாசிப்பது போல, “அவர்கள் செலுத்திய பலிகள் கடவுளுக்கு அருவருப்பைத் தந்தன. (எசா 1: 11-15). இரண்டாவதாக, பலி செலுத்திய குருக்களே குறையுள்ளவர்களாக இருந்தார்கள். மூன்றாவதாக, பலிசெலுத்துவதற்காக அவர்கள் பயன்படுத்தியது வெள்ளாட்டுக் கிடாய்களின் இரத்தமாகும். சாதாரண வெள்ளாட்டுக் கிடாய்களின் இரத்தம் எப்படி ஒருவருடைய பாவத்தைப் போக்கும் எனது தெரியவில்லை!. இதுபோன்ற காரணங்களாலும், இன்னபிற காரணங்களாலும் முற்கால அல்லது பழைய ஏற்பாட்டுக்கால பலிகள் முழுமை பெறாமல், அல்லது நிறைவுபெறாமலே போயின.

 

ஆனால் ஆண்டவர் இயேசு செலுத்திய பலி அப்படியல்ல, அவர் இறைத் திருவுலத்திற்குத் தன்னையே கையளித்து, தன்னுடலைப் பலியாக ஒப்புக்கொடுத்து பலியை முழுமை பெறச் செய்தார். விவிலியம் முழுவதும் வாசித்துப் பார்த்தோமென்றால், கீழ்ப்படிதலை விட அல்லது இறைத் திருவுளத்திற்குப் பணிந்து நடப்பதைவிட சிறந்த பலி வேறெதுவும் இல்லை என்பது புரிந்துவிடும். சாமுவேல் முதல் புத்தகத்தில் வாசிக்கின்றோம் ‘கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது” என்று (1: சாமு 15:22). ஆம், நம் ஆண்டவர் இயேசு, கிறிஸ்து தந்தையின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து தன்னுடைய பலியை உன்னத பலியாக மாற்றினார். நாமும் தந்தையின் திருவுளத்திற்கு ஏற்ப நடந்தொமெனில், நம்முடைய வாழ்க்கை இறைவனுக்கு உகந்த, உன்னத பலியாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

 

சிந்தனை

 

         “இதோ உமது அடிமை, உமது திருவுளத்தின்படி நடக்கட்டும்” என்று அன்னை மரியா ஆண்டவரின் திருவுளத்திற்குப் பணிந்து நடந்தார். நாமும் இயேசுவைப் போன்று, அன்னை மரியாவைப் போன்று இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.