திருப்பலி முன்னுரை
பொதுக்காலம் 02ஆம் ஞாயிறு 20 01 2019
திருப்பலி முன்னுரை
விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றி, நிலை வாழ்வை அளிக்கும் இறைவனின் அழைப்பிற்கிணங்க பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு திருப்பலிக்கு வந்திருக்கும் அன்புள்ளங்களை வரவேற்கின்றோம்.
இறைவன் மீதுள்ள நம்பிக்கையும் அன்னை மரியாவின் பரிந்துரையும் இணைந்து செயல்படும்போது ஆசீர்வாதங்களை அள்ளித்தருகிறது. மீட்பின் பாதையில் நம்மை வழிநடத்துகிறது. சீயோன் மக்களை இறைவன் ஆசீர்வதித்ததையும், மக்களின் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகின்றது இன்றைய முதல் வாசகம்.
மண வாழ்வு என்பது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தருமோ அவ்வளவு மகிழ்வை கடவுள் நம்மேல் கொண்டுள்ளார். பிற இனத்தார் உன் வெற்றியை காணும் பொருட்டு இறைவன் எல்லா வித வளங்களையும் தந்து நம்மை ஆசீர்வதித்து கொண்டிருக்கிறார் என்பதை விசுவசித்து நன்றி நவில்கின்றோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் புதுமையை அறியச் செய்கிறது புனித யோவான் எழுதிய வார்த்தைகள். திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதே என்று தவித்து நின்ற திருமண வீட்டாருக்கு அன்னையின் பரிந்துரையே இயேசு முதல் அற்புதம் செய்ய பாதை அமைத்து தந்தது. ‘அவரின் சொற்படியே ஆகட்டும்’ என்று பரம தந்தையின் பாதம் பணிந்து இறை மைந்தனை மனிதனாக்கிய அன்னை இன்று ‘அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’ என்று கூறி அற்புதத்தை செய்ய வைத்து மனித குமாரனை இறை மைந்தனாக அறிமுகம் செய்கின்றார்.
நாமும் நம் வாழ்வில் அவர் சொல்படி நடந்தால், அன்னையின் பரிந்துரையோடு சேர்ந்து ஆசீர்வாதங்களை பெற்றுத் தரும். அன்னையைப் போல் பிறரின் இக்கட்டான சூழ்நிலையில் பரிதாப வார்த்தைகளை உதிர்க்காமல் பரந்த மனதோடு உதவி புரிய முன்வருவோம். இச்சிந்தனைகளோடு இப்பலியில் இணைவோம்.
மன்றாட்டுகள்
1. புதுமைகளால் புது வாழ்வு தருபவரே
எமது அன்னையாம் திருச்சபையை புது வாழ்வுக்கான பாதையை நோக்கி வழிநடத்தும் திருச்சபைத் தலைவர்கள் ஆற்றும் பணிகளை உம் வல்லமையால் நிரப்பி, ஆவியின் கனிகளை பெற்றுத்தரும் பணிகளை மாற்றிட வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. எம்மில் மகிழ்பவரே!
உம் அருளால் பெற்றுக்கொண்ட வாழ்வில் நற்காரியங்கள் செய்து உமக்கும், உற்றத்தார்க்கும் மகிழ்வை ஏற்படுத்தும் மக்களாக வாழ்வை மேற்கொள்ள வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றி அற்புதத்தை செய்தவரே!
எங்கள் மத்தியில் பல்வேறு தேவைகளோடு வாழும் மக்களின் உடல், உள்ள தேவைகளை நீர் அறிந்து அற்புதத்தைக் காண செய்யும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. பல்வேறு வரங்களை எமக்கு பரிசளிப்பவரே!
எம் மனங்களில் மகிழ்வைத்தரும் இறைவா! எங்கள் மகிழ்வை பிறரோடு பகிர்ந்து வாழவும், அன்னை மரியாவைப் போல பிறருக்கு இயன்ற உதவியை செய்து மகிழும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
5. நலன்களின் நாயகனே!
எம் பகுதிவாழ் மக்களை ஆசீர்வதிக்கவும், தகுந்த இயற்கைச் சூழலை அமைத்து வேளாண்மை சிறக்கவும், குடும்பங்களில் அமைதி, சந்தோஷம் பெருகவும், உள்ளத்தின் தேவைகள் உம் அருளால் சந்திக்கப்படவும் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
“GOD IS LOVE”
Rev. Fr. Amirtha Raj Sundar J.,
[email protected]; + 91 944 314 0660; www.arulvakku.com