20 சனவரி 2019, ஞாயிறு

மறையுரைச் சிந்தனை

மறையுரைச் சிந்தனை (பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு)

 

தூய ஆவியின் கொடைகள் பொது நன்மைக்காகவே!

 

அமெரிக்காவில் வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தர் வில்லியம் ஆலன் ஒயிட். மிகுந்த தாராள உள்ளமும், இரக்க குணமும் உடையவர். ஒருமுறை அவர் தனக்கென்று  இருந்த 50 ஏக்கர் நிலத்தையும் தன்னுடைய ஊர் மக்களுக்காக எழுதி வைத்தார். இதை அறிந்த அவருடைய உறவுக்காரர் ஒருவர் அவரிடம், “எதற்காக இவ்வளவு நிலத்தையும் ஊர் மக்களுக்கு எழுதி வைக்கிறீர்கள்” என்று கேட்டார்.

அதற்கு அவர், “நான் என்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கிறபோது மூன்றாவது விதமான மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன்” என்றார். “அது என்ன மூன்றாவது விதமான மகிழ்ச்சி. அதைக் கொஞ்சம் எனக்குத் தெளிவாக விளக்குங்கள்” என்று கேட்க, வில்லியம் ஆலன் ஒயிட் மறுமொழியாக, “பணம் மூன்றுவிதமான மகிழ்ச்சிகளைத் தருகிறது. முதலாவது பணத்தைச் சேர்ப்பதில் மகிழ்ச்சி; இரண்டாவது கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை பாதுகாப்பதில் மகிழ்ச்சி; மூன்றாவது மற்ற எல்லாவற்றையும்விட சிறந்தது, அது நம்மிடம் இருப்பவற்றை பிறருக்குக் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி.

பலர் தாங்கள் பெற்ற செல்வத்தை; திறமைகளை; கடவுள் கொடுத்த ஆசிர்வதங்களை தங்களுக்குள்ளே வைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் மூன்றாவது விதமான மகிழ்ச்சியை அடைவதில்லை. ஆனால் நான், என்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுப்பதால் அதை அனுபவிக்கிறேன்” என்றார்.

நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்பதை இந்நிகழ்வு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் அழைப்பு  “நமக்குக் கொடுக்கப்பட்ட கொடைகள் பிறரது நம்மைக்காகவே” என்பதே. கடவுள் கொடுத்த திறமைகள், கொடைகள், வாய்ப்பு வசதிகள் யாவற்றையும் நமது சொந்த தேவைக்காகவே பயன்படுத்தி வாழும் நமக்கு, இன்றைய வாசகங்கள் அவற்றைப் பொதுநலத்திற்காக பயன்படுத்த அழைப்புத் தருகிறது.

கொரிந்தியருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், ‘கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமையைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஒரு சிலருக்கு ஞானம் நிறைந்த சொல்வன்மை, அறிவுநிறைந்த சொல்வன்மை, நம்பிக்கை, வல்ல செயல்கள் புரியும் ஆற்றல், பரவசப் பேச்சுப் பேசும் ஆற்றல், இன்னும் ஒருசிலருக்கு அவற்றை விளக்கும் ஆற்றல் இவையெல்லாம் கொடுத்திருக்கலாம். ஆனால் நாம் அதனை பிறருக்காக, பொது நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றதொரு அழைப்பினை விடுக்கிறார் (1 கொரி 12:7).

ஆனால் நடைமுறையில் கடவுள்/ தூய ஆவியார்  கொடுத்த திறமைகளை, கொடைகளை பொது நன்மைகாகப் பயன்படுத்தாமல் தன்னுடைய சுயநலத்திற்காக, தன்னுடைய பெயர் விளங்கச் செய்வதற்குத்தான் மக்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வெறுமனே பணம், பொருள் என்று மட்டுமல்லாமல் இறைவனின் பணி செய்ய கடவுள் கொடுத்திருக்கும் ஆற்றலையும், திறமையையும்கூட இன்றைக்கு மக்கள் தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.  இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

ஒருமுறை மராட்டிய மன்னர் சிவாஜி பகைவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு பெரிய கோட்டையைக் கட்டிக்கொண்டிருந்தார். அந்த கோட்டையைக் கட்டும் பணியில் ஏராளமான மக்கள் ஈடுபட்டிருந்தார்கள். அரசர் அவர்கள் எல்லாருக்கும் உணவு கொடுத்து, அவர்களை பராமாரித்துக் கொண்டும் வந்தார். இது அவருடைய உள்ளத்தில் ஒருவிதமான கர்வத்தை உண்டுபண்ணியது. ‘நான்தான் எல்லாருக்கும் உணவு கொடுக்கிறேன். நான் எவ்வளவு பெரிய மன்னர்’ என்ற கர்வம் அவருடைய பேச்சிலே அடிக்கடி தெறித்தது.

இதைக் கண்ணுற்ற அவருடைய குரு மன்னருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவர் மன்னரிடம், “மன்னர் மன்னா! எனக்காக அருகே இருக்கக்கூடிய பாறையை உடைத்து, அதை இங்கே கொண்டுவர முடியுமா?” கேட்டார். அதற்கு மன்னரும் தன்னுடைய வேலையாட்களிடம் பாறையை உடைத்துக்கொண்டு வரச்சொல்ல, அவர்களும் அதைக் கொண்டுவந்தார்கள்.

அப்போது அந்த பாறைக்குள் இருந்து ஒரு தேரை (தவளை) வெளியே ஓடியது. உடனே குரு மன்னரை பார்த்து, “மன்னா! எல்லாருக்கும் உணவிடுகிறீர்கள், இந்த பாறைக்குள் இருந்த தேரைக்கும் நீங்கள்தானே உணவிடுகிறீர்கள்” என்று சொன்னதும், மன்னருக்கு, குரு தன்னுடைய ஆணவத்தான் சுட்டிக் காட்டுகிறார் என்பதை உரைத்தது. அதன்பிறகு ஆணவம் இல்லாது செயல்படத் தொடங்கினார்.

கடவுள் கொடுத்திருக்கும் கொடைகள்/பொறுப்புகள் எல்லாம் கடவுளின் பேர் விளங்கப் பயன்படுத்த வேண்டுமே ஒழியே அதனை தன்னுடைய பெயர் விளங்கப் பயன்படுத்துவது தவறு என்பதை இந்த நிகழ்வானது அழகாக எடுத்துரைக்கிறது.

ஆக, நம்மிடம் இருக்கும் எல்லாமும் நாம் பிறருக்காக பயன்படுத்த, இறைவன் கொடுத்த கொடைகள் என்பதை நாம் உணரவேண்டும். இதற்கு நம்மிடம் இருக்கக்கூடிய அடிப்படையான மனநிலை, நாம் அனைவரும் ஒரே உடலின் உறுப்புகள்,  இந்த உடலின் உறுப்புகளுக்குத் தலையாக இருப்பவர் கிறிஸ்துவே என்பதை நாம் உணரவேண்டும். உடலில் காலோ அல்லது தலையோ அடிபட்டிரும்போது கை சும்மா இருக்காது. உடனே அது உதவி செய்ய விரைந்து வரும். அதுபோன்றுதான் கிறிஸ்து என்ற உடலில் உறுப்புகளாக இருக்கும் நாம் அனைவரும், நம்மோடு வாழக்கூடிய மக்களின் நிலை அறிந்து, உதவி  செய்ய விரைந்து வரவேண்டும்.

அந்த வகையில் கடவுள் கொடுத்த எல்லா ஆசிர்வாதங்களையும் பொது நன்மைகாகப் பயன்படுத்திய ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் அது இயேசுவைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. இன்று படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம் அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

கானாவூர் திருமணத்திற்கு தன்னுடைய தாய் மற்றும் சீடர்களுடன் செல்லும் இயேசுக் கிறிஸ்து, அங்கே திருமண விருந்தின்போது திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்பதை தன்னுடைய தாயின் வழியாகக் கேள்விப்படுகிறார். தாயின் வேண்டுதலின் பேரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றி, மணவீட்டாருக்கு நேரிட இருந்த அவப்பெயரைப் போக்குகிறார்.

இங்கே இயேசுக் கிறிஸ்து கடவுள் கொடுத்த அருளை தனது பெயர் விளங்கப் பயன்படுத்தவில்லை. மாறாக மணவீட்டாரின் அவல நிலை நீங்கவும், கடவுளின் பெயர் விளங்கவுமே அப்படிச் செய்கிறார். நற்செய்தியின் இந்த பகுதியில் மட்டுமல்லாது, எல்லா இடங்களிலும் இயேசு தன் அருளை பிறரது நலனுக்காகவே பயன்படுத்துகிறார். அதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது ‘எல்லா மக்களும் இறைவனின் பிள்ளைகள்’ என்ற எண்ணமே. நாமும் இப்படி கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கொடையை பிறருக்காகப் பயன்படுத்தும்போது அதைவிடச் சிறந்த பேறு வேறு எதுவும் இருக்க முடியாது.

“சமுதாயச் சேவையை சட்டையாக மாற்றாதீர்கள்; உங்கள் உடம்பின் சதையாக மாற்றுங்கள்” என்பார் கவிஞர் வைரமுத்து. நாம் சமுதாயத்திற்கு ஏதோ ஒருசில நன்மைகளை மட்டும் செய்து திருப்திப்பட்டுக் கொள்ளாமல், எப்போதுமே இயேசுவைப் போன்று இறைபணி/சமூகப்பணி செய்ய வேண்டும் என்பதுதான் அவர் சொல்ல விரும்பும் கருத்து.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில், பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் ஒரு காலைப் பொழுதில், காரில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர் பனிப்பொழிவில் மாட்டிக்கொண்டார். எவ்வளவுதான் அவர் சத்தம் போட்டாலும் யாருமே அவருக்கு உதவ முன்வரவில்லை.

அப்போது அங்கு வந்த ஓர் இளைஞர், தன்னுடைய கையில் இருந்த இரும்புக் கம்பியால் பனிக்கட்டிகளை எல்லாம் உடைத்து, அகற்றிவிட்டு, அவரை அதிலிருந்து காப்பாற்றினார். தனக்கு தக்க நேரத்தில் வந்து உதவியதற்காக, அன்பளிப்பாக ஏதாவது தரலாம் என்று நினைத்த அந்தக் கணவான், தன்னுடைய பையிலிருந்து கொஞ்சம் டாலரை எடுத்து அதை அவரிடம் நீட்டினார்.

ஆனால் அந்த இளைஞர் பணத்தை வாங்க மறுத்துவிட்டுச் சொன்னார், “நான் DO UNTO OTHERS” என்று மன்றத்தில் உறுப்பினராக இருக்கிறேன். இந்த மன்றத்தின் முக்கியமான நோக்கம் தேவையில் இருப்பவருக்கு ஓடோடிச் சென்று உதவுவதுதான் என்று சொன்னதும், காரில் வந்திரந்த அந்த கணவான் நன்றிப் பெருக்கோடு அவரைக் கைகூப்பி வணங்கிவிட்டு, அங்கிருந்து சென்றார்.

நாம் ஒவ்வொருவருமே தேவையில் இருப்பவருக்கு, அதுவும் யாராக இருந்தாலும் உதவவேண்டும்; கடவுள் கொடுத்த கொடைகளை பிறர் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

இப்படியெல்லாம் ஒரு மனிதர் வாழ்கிறபோது கடவுள் எத்தகைய ஆசிர்வாதத்தைத் என்று இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா புத்தகம் 62) படிக்கின்றோம்.

“அவர்களது வெற்றியையும், மேன்மையையும் புறவினத்தார் காண்பார்கள்; புதிய பெயரால் அழைக்கப்படுவார்கள்; இறைவனின் கையில் அழகிய மணிமுடி போன்றும், அரச மகுடம் போன்றும் இருப்பார்கள்” என்று இறைவாக்கினர் எசாயா கூறுகிறார். ஆம், இறைப்பணி நல்ல உள்ளத்தோடு செய்யும்போது இறைவனும் நம்மை ஆசிர்வதிப்பார் என்பதே உண்மை.

எனவே நாம், நமது ஆண்டவர் இயேசுவைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்திர்க்கும் திறமைகளை/ கொடைகளை இறைவனின் பெயர் விளங்கவும், பொது நன்மைகாகவும் பயன்படுத்துவோம். அதன் வழியாக இறைவனின் அன்புப் பிள்ளைகள் ஆவோம். அவரது ஆசியை நிறைவாய் பெறுவோம்.

 

– Fr. Maria Antony, Palayamkottai.